November 07, 2020

திருமூலர்

                                                     



.                  
பதினெண் சித்தர்களில் தலையாய சித்தராக அறியப்படுபவர். அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவர் எனும் பேறு பெற்றவர் ஆகிறார்.
.
இவரது பிறப்பின் மூலத்தை அறிய முற்படுவோம். நந்தித்தேவரின் அருள் பெற்ற மாணவர்களுள் சுந்தரநாதர் என்ற சிவயோகி ஒருவரும் இருந்தார். இவர் அணிமா லகிமா முதலிய அஷ்டமா சித்திகளை கையாளும் அருள் பெற்றிருந்தார். அகத்திய மாமுனியின் நண்பராக இருந்தார். இவர் கைலாய பரம்பரையில் வருபவர். ( இவருடைய பதினாறு சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலை சித்தரும் வெகுவாக அறியபடுபவர்கள். காலங்கி சித்தரின் சீடரே பழனியில் நவபாஷாணத்தால் முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்த போகர் ஆவார் )
.
சுமார் 8000 வருடங்களுக்கு முன்னர், அகத்திய மாமுனியை கண்டு அவருடன் சில காலம் இருந்து வர தென் திசையை நோக்கிப் புறப்பட்டார். தெற்கே காஞ்சி வந்து, தில்லையை தரிசித்து, பல தலங்களில் சிவனை நினைந்து அன்பொழுக பக்தி செய்து, காவிரியில் நீராடி, பின்னர் உமையவள் பசுவின் வடிவில் இறைவனை நோக்கி தவமியற்றி கோமுக்தீஸ்வரரால் ஆட்கொள்ளப்பட்ட திருவாடுதுறை வந்தடைந்தார்.
.
இறைவனை தரிசித்து விலக இயலாதவராய் சில காலம் தங்கினார். திரும்பச் செல்லும் காலத்தில் காவிரி கரையின் சோலையில் இரை மேய்திருந்த பசுக்கள் வருந்தி அழுவதைக் கண்டார். சாத்தனூரில் இடைக்குலத்தவனான மூலன் அப்பசுக்களை மேய்த்து ரக்ஷித்து வருபவன். அவன் தன் உடலை உகுத்து விண் புகுந்ததால், பசுக்கள் வருந்தி அழுவதை உணர்ந்தார்.
.
பசுக்களின் மேல் கருணைக் கொண்டதனால், மூலனின் உடலில் தம் உயிரை செலுத்தி, தம் உடலை பாதுகாப்பாக வேறிடத்தில் விட்டு, கூடு விட்டு கூடு பாய்ந்தார். பசுக்கள் வீடு சென்றடைய, நெடு நேரமாகி வீடு திரும்பாத கணவனை எண்ணி கவலையுற்றிருந்த மூலனின் மனைவி, திருமூலரை தன் பதியென்றெண்ணி மகிழ்ந்து அழைத்தாள். தமை தீண்ட அனுமதி மறுத்த மூலர் தாம் திருமூலர் என்பதை ஆட்டின் உடலில் புகுந்து நிரூபித்தார். மூலனின் மனைவியை ஊரார் தேற்ற, திருமூலர் தமது மேனியில் புகுதற்கு தாம் பாதுகாப்பாக விட்டுச்சென்ற உடலைத் தேடினார். அது அங்கில்லாமல் மறைந்திருக்கவே அதன் காரணத்தை யோகத்தின் மூலம் அறிந்து, அதுவே இறைவன் சித்தமென தெளிந்தார்.
.
சாத்தூரிலிருந்து மீண்டும் திருவாடுதுறை அடைந்து பல காலம் அங்கு தங்கி தவமியற்றினார். கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் அரச மரத்தடியில் தவமியற்றியவர் ஆண்டுக்கொரு முறை கண்விழித்து பாடல் இயற்றி மீண்டும் தியானத்தில் ஆழ்ந்துவிடுவார். இவ்வாறு மூவாயிரம் வருடங்கள் தவமியற்றினார். இவர் தொகுத்த பாடல்கள் "தமிழ் மூவாயிரம்" என்று வழங்கப்பட்டது. பின்னர் வந்த சான்றோர் இதனை திருமூலர் அருளிய திருமந்திரம் என வகை செய்தனர்.
.
இவ்வாறு திருமந்திரம் அருளியவர் அதனை வெளியிடாமல் ஆலயத்தின் கொடிமரத்தின் அடியில் புதைத்து, அங்கிருந்து சிதம்பரம் சென்று தமது குரு நந்தீசரைப் ( நந்தி பகவான்) பணிந்து, தில்லையம்பதியுடன் கலந்தார்.
.
பல்லாயிரம் வருடங்கள் பின்னால் தோன்றிய சம்பந்தர், பெருமான் அருளால் இங்கு தமிழ் மந்திரங்கள் உளதென்று உணர்ந்து, அதனை உலகிற்கு வெளியிடச் செய்தார்.
.
இவரின் பெயர், பிறப்பு முந்தைய நிலை எதுவும் பெரியபுராணம் தொகுத்த சேக்கிழாராலோ, திருத்தொண்டர் திருவந்தாதி இயம்பிய நம்பியாண்டார் நம்பியாலோ குறிப்பிடப்படவில்லை. எனினும், இவரே நாயன்மார்களில் மூத்தவர் பல காலத்திற்கு முன்னவர், சைவத்திற்கு முதல் நூலைத் தந்தவர் என்று கூறலாம். இவர் எழுதிய நூலை திருமந்திரம் எனும் பத்தாம் திருமுறையாக நம்பியாண்டார் நம்பி தொகுத்தார்.
.
இவர் நந்தியின் சீடர் என்பது அவர் எழுதிய
"நந்தியருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர்
என்றிவ ரென்னோ டெண்மரு மாமே” (திருமந்திரம்-67)

திருமூலர் வாய்மொழியாலேயே நன்கு தெளியப்படும்.
.
ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment