November 09, 2020

பூசலார் நாயனார்


.
திருநின்றவூரில் அவதரித்தவர் பூசலார். மறையோதும் அந்தணர் குலத்தோன்றல். அடியார்களுக்கு பணி செய்வதும், ஐயன் அடி போற்றுவதும், இறைவனை சிந்தையில் சதா இருத்துவதும் பிறவிப்பயனென கருதினார். பெரும் செல்வந்தாராக இருந்திருந்தால் இன்னும் பொருட்களை வாரி வழங்கும் வள்ளலாக விளங்கியிருப்பார். ஆனால் இறைவன் அவரை மிகக் கொண்ட செல்வந்தராக பணிக்கவில்லை. பெரும் பொருளில்லாவிடினும் ஈட்டும் சிறு பொருளை அடியவர்க்கு ஈந்தார்.
.
இப்படிப்பட்ட பெரும் பக்தருக்கு இறைவனுக்கு ஆலயம் எழுப்ப வேண்டுமென்ற பேரவா எழுந்தது. எப்படித் தேடியும் பொருள் தேரவில்லை. சிறுகக் கட்டி சேர்க்க நினைத்தாலும், அத்தனை பெரிய நிதி பெற இயலாதவர் ஆனார். சிவன் ஆலயம் எழுப்பும் ஆவல் பெருகிக் கொண்டே போனதால், தமது தூய மனத்தின் அரும் பீடத்தில், கோவில் எழுப்பி, இறைவனை எழுந்தருளச் செய நினைத்தார்.
.
தினம் சிறு சிறு வேலைகளை மனக்கண் செய்யத் துவங்கினார். ஆலயப்பணிக்கென தேவையான ஆட்களை சேர்த்தார், கருங்கற்களை, கட்டும் பொருட்களை சேர்த்தார். நாள் குறித்தார், ஆலயம் எழுப்பும் கிரமப்படி, பணியைத் துவங்கினார்.
அஸ்திவாரம் இட்டார். விமானம் அமைத்தார், சிகரம் செதுக்கினார். ஸ்தூபி நட்டார். பின்னர் கிணறு, திருக்குளம், மதிலும் கூட எழிலுற அமைத்தார். இவ்வாறு இரவு பகலென தினமும் பணிகளை பக்தியுடன் செவ்வனே நினைந்து ஆலயம் கட்டி முடித்த பின், இறைவனை எழுந்தருள ஒரு நல்ல நாளும் தேர்வு செய்தார்.
.
சூட்சுமமான மனதின் மேன்மையை, மனத்தூய்மையின் முக்கியத்துவத்தை, மனம் உடலைக் காட்டிலும் உயர்ந்தது என்பதை பக்தர்களுக்கு தெளிவிக்கும் சித்தம் கொண்டார் இறைவன். அந்நாட்களில் பல்லவ வேந்தரும் நாயன்மார்களில் ஒருவருமான ஐயடிகள் காவர்கொன் காஞ்சி நகராண்டு கொண்டிருந்தார். மன்னர், காஞ்சியிலே இறைவனுக்கு பெரும் ஆலயம் எழுப்பியிருந்தார். பெரும் பொருட்கள் கொண்டு எழுப்பப்பட்ட ஆலயம் இறைவன் எழுந்தருள்வதற்கு தயாராக பட்டொளி வீசிக் கொண்டிருந்தது. மன்னரும் தமது நகரத்தில் ஆலயத்திற்கு இறைவனை எழுந்தருளச் செய்து குமபாபிஷேகம் செய்ய பூசலார் குறித்த நாளையே தேர்வு செய்திருந்தார். உமையொருபாகன் மன்னார் கனவில் தொன்றி, " திருநின்றவூர் அன்பன் பூசலார் அமைத்த ஆலயத்தில் நாளை புகுவோம், நீ பிறிதொரு தினம் எமை எழுந்தருளச் செய்வாய்" என கூறியருளினார்.
.
மன்னர் பூசலாரின் ஆலயத்தை காண பேராவல் கொண்டு திருநின்றவூர் சென்றார். அங்கு பூசலார் அமைத்த கோவில் யாதெனக் கேட்க, அனைவரும் அப்படி ஒரு கோவில் இங்கில்லை என்று மறுத்தனர். பின்னர் பூசலார் யார் என்று கேட்டு, அவர் வீடு தேடிச் சென்று உமது திருக்கோவில் எங்குள்ளது இறைவன் அக்கோவிலில் முதலில் எழுந்தருள்வதாக எமக்கு உரைத்தனுப்பினார், அக்கோவிலை காண பெரும் விருப்பம் கொண்டிங்கு வந்தேன் என்றார். அதைக் கெட்டு வியப்புற்ற பூசலார், நெகிழ்ந்துருகி பரவசமானார். என்னையும் கருணா மூர்த்தி தம் கடைக்கண்ணால் கருதினாரே என்று ஆனந்தித்தாடினார். தான் மனதால் பக்தியுடன் தினமும் கட்டிய ஆலயம் என்றுரைத்து, இறைவனை நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கினார். ஆடிப் பாடினார். அரசரும் ஆச்சர்யமும் பேரன்பும் பெருக ஈசனையும் நாயனாரையும் வணங்கிப் புறப்பட்டார்.
.
நிச்சயித்த நாளில் அவர் கட்டிய மனக்கோவிலில் சிவன் எழுந்தருளி அனுக்ரஹித்தார். பூசலார், சிறப்புடன் பல வருடம் வாழ்ந்து சிவப்பணிகள் செய்து உய்ந்து, நற்பேறு பேற்றார்.
.
ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment