October 22, 2020

நந்தனார் (திருநாளைப் போவார் நாயனார்)





நினைவு தெரிந்த நாள் முதல் சிவ சிந்தனையில் தவமியற்றியவரின் சரித்திரமே நந்தனார் சரித்திரம். ஆதனூர் எனும் ஊரில் புலையர் என்றழைக்கப்படும் பிற்படுத்த வகுப்பினராக அந்நாட்களில் வரையறுக்கப்பட்ட குலத்தில் பிறந்தார். அக்குலத்திற்கென கோட்பாடுகள் அக்கால வழக்கப்படி கடைபிடித்து வந்தார். அது தொட்டு ஆலயத்துள் சென்று வழிபாடு செய்யாவிட்டாலும், வெளியிலிருந்து வழிபட்டு ஆடிப் பாடி மகிழ்வார். பக்திப் பெருக்கினால், கோவில் பேரிகைகளுக்கு விசிவார், போர்வைத்தோல் முதலியனவும், அர்ச்சனைக்கு கோரோசனையும் வழங்கி வந்தார். .
.
திருப்புன்கூருக்கு சென்று இறைவனை தரிசிக்க எண்ணினார். தம்மால் உள் நுழைய முடியவில்லை என்றாலும் நேரில் இறைவனை தரிசிக்க ஆசை கொண்டார். இதனை அறிந்த பெருமானார், நந்தியை விலகச் செய்து நேரே தரிசனம் அளித்து அருளினார். இன்பம் கரைபுரண்டு ஆடிப்பாடி மகிழ்ந்த நாயன்மார் அங்கு குளம் தோண்டி தொண்டு செய்தார். பல ஊர்களிலும் இவ்வாறு சிரு தொண்டுகளும் பெருந்தோண்டுகளும் செய்து வந்தார்.
.
இப்படியிருக்குங்கால் தில்லை அம்பலவாணனை தரிசிக்கும் ஆவல் மிகுந்தது. தில்லையின் பெருமையை நினைத்தும் தம் குலப்பிறப்பை நினைத்தும் மறுகி தயங்கி பின் போகாமல் நின்று விடுவார். மீண்டும் ஆவல் எழும் போதெல்லாம் "நாளைப் போவேன்" என்று சமாதானப்படுத்திக் கொள்வார். (இக்காரணத்தால் பின்னாட்களில் "திருநாளைப் போவார்" என்ற திருப்பெயரால் அன்போடு பேசப்பட்டார்) . துணியாது தயங்கியபடியே நாட்களை கடத்தியவர், அன்பு மேலிட ஒரு நாள் தில்லையின் எல்லைவரை சென்று விட்டார். எல்லையில் தங்கி அங்கு எழும் ஹோமப் புகைகள், யாக மண்டபங்களைக் கண்டார். வேத மொழிகளை இனிது கேட்டார். உள்ளே செல்லுதற்கு அஞ்சி எல்லையில் நின்று விட்டார். கை தொழுதும் தில்லையம்பதியை வலம் வந்து ஆடிப் பாடி நின்றவர் உள்ளே செல்லுதற்கு மிகுந்த அச்சம் கொண்டவராக வருத்தம் மேலிட துயில் கொண்டிருக்கையில் இறைவன் இவர் வருத்தம் போக்க திருவுள்ளம் கொண்டார்.
.
நந்தனாரின் கனவில் தோன்றிய ஈசன், "இப்பிறப்பின் கருமம் கழிய வேள்வித் தீயில் புகுந்தெழுந்து முப்புரி நூலணிந்து திகழ்வாய்" என்று திருவாய் மலர்ந்தார். அதே சமயத்தில் அங்குள்ள அந்தணர்கள் கனவில் தோன்றி வெள்வித்தீ மூட்ட ஆணையிட்டு மறைந்தார்.
.
விழித்தெழுந்து அந்தணர்கள் நந்தனாரை தேடியடைந்து, ஆலயம் முன் வேள்வித்தீ அமைத்து தந்தோம் என்றுரைத்து அழைத்துச் சென்றனர். இறைவன் திருவடியல்லாது வேறொன்றை நினையாது எரியை துதித்து வலம் வந்து அதனுள் புகுந்தார். புகுந்தவர் மறையோதும் அந்தணர்களும் முனிவர்களும் வாழ்ந்த, ஒளிவீசும் பிரம்மதேவனைப் போல் எழுந்தார். வானவர் வாழ்த்தி மலர் பொழிய, வேத மந்திரங்கள் ஒலிக்க, ஐந்தெழுத்து மந்திரம் ஓதி ஆடிப்பாடி இறைவனை தரிசிக்க உள் சென்றார். ஆடும் தில்லையம்பதியை காணச் சென்றவர் தில்லை வாழ் அந்தணர்கள் அதிசயயிக்க பின் ஐய்யனின் திருவடியில் கலந்து மறைந்தார். நந்தனார் இறைவனுடன் இன்புற்ற பேரின்ப வாழ்வு பெற்றார்.
.
ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment