கடலூர் மாவட்டத்தில் மருள்-நீக்கி என்ற இயற்பெயருடன் விளங்கிய நாவுக்கரசர் , முதலில் சமண மதத்தை தழுவியிருந்தார். அதுமட்டுமின்றி சமண மதத் தலைவராகவும் இருந்து தருமசேனர் என்று அழைக்கப்பட்டார். பௌத்தர்களை வாதத்தில் வென்று சமண மதப் பெருமைகளை நிலை நாட்டினார்.
.
இவரது தமக்கையார் இறைவனிடம் இறைஞ்சி சைவத்தின் பெருமையை தம்பியாருக்கு விளங்கவைக்குமாறு வேண்ட, சூலை நோயால் அவதியுற்றார். சமண மடங்களிலும் அதன் தலைவர்களாலும் கொடுக்கபப்ட்ட சிகிச்சைகள் பலனின்றி போனதால், சிவனை வழிபடுவதால் நோய் தீரும் என்ற தமக்கையின் வாக்கை ஏற்று பாடலைப் பாட, நோய் தீர்க்கப்பெற்றார். இன்னிசையால் பதிகம் பாடி இறைவனை தொழுதமைக்கு நாவுக்கரசர் என்று ஈசன் அசரீரியாக திருநாமம் சூட்டினார்.
.
சமண மதத்தை துறந்த தருமசேனர் என்ற நாவுக்கரசரை கொடும் தண்டனைக்கு ஆளாக்க சமண குருமார்களும் அவர்களது அரசரும் முனைந்தனர். அவர்களுடன் செல்ல மறுத்து "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்று பாடி உடன் செல்ல மறுத்தார்
.
வற்புறுத்தி அழைத்துச் சென்ற சமணர்கள், நாவுக்கரசருக்கு தண்டனை வழங்க பல்லவ அரசனுக்கு பரிந்துரைத்தனர். ஏழு நாட்கள் சுண்ணாம்பு காளவாயில் அடைத்து வைக்கப் பட்டார். இறைவன் அருளால் அது குளிர்ந்து வசந்தம் வீச,
"மாசில் வீணையும் மாலை மதியமும்,
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே"
என்று பாடியபடி மகிழ்ந்திருந்தார்.
.
தண்டனை பலிக்காமல் போனதால் ஆத்திரம் அடைந்த சமணர்கள், கொடிய நஞ்சினை புகட்டி நாவுக்கரசரை வீழ்த்த எண்ணினர். அதனின்றும் பட்டோளி வீசி தீது அண்டாமல் உயிர்த்தார். அதன் பின்பு யானையை இடறச் செய்த போதும், யானை அவரை தலை வணங்கிச் சென்றது. மேலும் கொடுஞ் செயல் புரியத் துணிந்து, கல்லில் அவரைப் பிணைத்து நடுக் கடலில் எறிய,
"கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமசிவாயவே"
என்று பாட, பிணைத்த கல்லின் மேல் மிதந்தபடி கரை சேர்ந்தார். மகேந்திர பல்லவ மன்னனும் பெருங்குற்றம் புரிந்ததை உணர்ந்து நாவுக்கரசரை பணிந்து சைவம் தழுவி பின்னாளில் சமணப் பள்ளிகளை ஒழித்து கோவில்கள் கட்டியதாக வரலாறு.
.
சமண மதத்தை போற்றியிருந்த உடலுடன் உயிர் வாழ விருப்பமில்லை, உயிர் தரிக்க வேண்டுமென்றால் சிவ அடையாளங்கள் தம் உடம்பில் பொறிக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பிக்க, அவரது தோள்களில் சூலமும், ரிஷபமும் பூதகணங்கள் பொறித்தனர். விண்ணவர் மலர் மாரிப் பொழிந்தனர். சைவ சமயத்தின் பெருமையை பற்பல திருத்தலங்கள் தரிசித்து பதிகம் பாடிப் போற்றினார்.
.
நால்வருள் ஒருவரான சம்பந்தரின் சமகாலத்தவர். இவர் பேரில் அன்பு கொண்ட சம்பந்தர் இவரை அப்பர் (மரியாதை) என்று அழைத்து பெருமை படுத்தினார். இருவரும் அரும்பல க்ஷேத்திரங்கள் தரிசித்து பாடல்கள் பாடி வழிபட்டனர். சம்பந்தருடன் சேர்ந்து இறைவனிடம் படிக்காசு பெற்று பக்தர்களுக்கு உணவளித்ததும், திருக்கதவு திறக்க பாடியதும், இரு பெரும் தொண்டர்களும் இணைந்து செய்த அற்புத நிகழ்வுகள்.
.
ஒரு சமயம் சமணர்கள் கோவில் விமானத்தை தங்களுடையது என்று பொய்யுரைத்து சிவலிங்கத்தை மறைத்து தமதாக்கிக் கொண்டிருந்தனர். அக்கோவிலை தொழாது அமுதுண்ணோம்என்று பட்டினி கிடந்தார் அப்பர். உடன் இறைவன் சோழ மன்னன் கனவில் தோன்றி அப்பருக்கு உதவ ஆணையிட்டதனால் மறைத்து வைக்கபட்டிருந்த சிவலிங்கம் வெளிப்பட்டது, சமணர்களை விரட்டி அங்கு திருக்கோவிலை மீண்டும் புதுப்பித்தான் சோழ மன்னன்.
.
இத்தனை உயர்ந்த பக்தருக்கு ஒரு தொண்டர் இருந்தார். அவர் தான் அப்பூதி அடிகள் (இவர் வரலாற்றை நாம் ஏற்கனவே பார்த்தோம்). நாவுக்கரசர் பெயரில் நலத்திட்டங்கள் ஏற்பாடு செய்து தொண்டாற்றி வந்தார். திங்களூருக்கு தலயாத்திரை சென்ற அப்பர் தமது பெயரில் தருமம் செய்து வரும் அப்பூதி அடிகளைப் பற்றி கேள்வியுற்றார். அவரது வீட்டை அடைந்தவருக்கு அப்பூதி அடிகள் பெரும் மரியாதையுடன் வரவேற்பு அளித்து அமுதுண்ண விண்ணப்பம் செய்தார்.
வாழையிலை பறித்து வரச் சென்ற அப்பூதி அடிகள் மகனை அரவு தீண்டி மரணம் தழுவிய நிலையில், இறைவனை நோக்கி பதிகம் பாடி அவனருளால் நஞ்சினை அகற்றி உயிர்பித்தார்.
.
அய்யனைக் காண திருக்கையிலாயம் செல்லும் திட்டம் கொண்டு புறப்பட்ட அப்பருக்கு உடல் வருந்தியதால் கால்கள் துவண்டு இடம் கொடுக்க மறுத்தன. கைகளால் தோள்களால் உந்திச் சென்றார். அதுவும் வலுவிழக்கவே மார்பால் முன்னே முனைந்தார். உடல் முழுக்க புண்ணாகின. இறைவன் அசரீரியாக அருளி, உடலின் வருத்தம் நீக்கி, அங்கு தடாகத்தை உண்டு பண்ணினார். அத்தடாகத்தில் மூழ்கி, திருவையாற்றிலுள்ள தடாகத்தில் எழுமாறு அருளினார். உலகெலாம் வியக்க காசியருகே மூழ்கி திருவையாற்றில் எழுந்து அங்கு ஞானக்கண் கொண்டு திருக்கையிலாய தரிசனம் பெற்றார். பற்பல ஆண்டுகள் தொடருந்து பாமாலைகளால் இறைவனைப் பாடி, உழவாரப் பணிகள் செய்து (திருவாலயங்களை தூய்மை படுத்தும் தொண்டு) வந்தமையால் 'உழவாரத் தொண்டர்' என்று அன்போடு அழைக்கப் பெற்றார்.
.
அப்பரின் பற்றற்ற பெருமை உலகம் உணர, உழவாரப் பணி செய்யும் இடங்களில் பொன்னும் மணியும் இறைவன் கிடைக்கப் பெறச் செய்தான். அப்பரோ தூய்மை செய்து ஏனைய கற்களுடன் அவற்றையும் எறிந்தார். அழகிய ரம்பைகளின் அழகிலும் அவர்கள் ஆடல்களின் மயக்கத்திற்கும் ஆட்படாமல், உம்மால் எனக்கு ஆகப்பெறுவது ஒன்றுமில்லை" என்ற கருத்துணர்த்தி "பொய்மாயப் பெருங்கடலில்" என்ற பாடல் பாட அவர்களும் அப்பரை வணங்கிச் சென்றனர்.
.
நிறை வாழ்வு வாழ்ந்த அப்பர், இறைபக்தியில் திளைத்து பின்னர் அவனடி சேர்ந்து இன்புற்றார். கைலாயத்தில் தவமியற்றியிருந்த வாகீச-முனிவர் நந்திதேவனால் சபிக்கப்பட்டதால் திருநாவுக்கரசராக புவிமீது பிறந்தருளினார் என்று குறிப்பு.
.
ஓம் நமச்சிவாய
No comments:
Post a Comment