October 14, 2025

சமர்ப்பணம்

 



ஆரியாம்பா சிவகுரு ஈன்ற
ஆனந்த அமுதே!
காலடியில் உதித்த
காமகோடி பீடமே - உம்
காலடி அளந்த வரமே,
பாரெங்கும் தழைத்தோங்கும்
அத்வைத வேத சாரமே.
..
சம்சார சாகரத்தை
முதலைப் படகேறி
சன்யாசமென மாற்றி
சனாதன வேருக்கு நீரூற்றிய
சங்கரன் புதல்வனே!
..
பன்னிரெண்டு வயதிலேயே
பாஷ்யங்கள் பலவியற்றி -பிரம்ம
சூத்திரத்தின் கருப்பஞ்சாறேடுத்து - எம்
அறிவு வேட்கைக்கு இன்னமுதளித்த
தாயுமானவரே!
..
மண்டனமிஸ்ரரின் தத்துவ சாரத்தை
வாதில் வென்ற வாணியின் சுடர்வடிவே!
ஆதார ஷண்மதங்களை
சீராக வகுத்த ஆதிகுருவே!
பொன்மன மங்கைக்கு
பொருள்மழை பொழிவித்த
திருவின் அருளே!
..
பூரணாநதி புரளும் பாதையை
தாரணியில் கொஞ்சம் வளைத்து,
பெற்றவளின் தீராத் துயர் தீர்த்து;
உமைச் சுமந்த தளிருடலுக்கு
இள வாழைத்தண்டிலே சிதையூட்டி
பிறவிப் பிணியறுத்த பெருஞ்சுடரே!
தாய்க்குத் தாயான தயாபரனே!
..
சிங்கார சாரதையை
சிருங்கேரி துவாரகையின்
பீடங்களில் ஸ்தாபித்து,
பூரி கோவர்த்தனத்தில்
கோலாகலமாகவே
கோபாலனை அமர்த்தி,
துவாரகையில் காளிகையும்,
பத்ரியின் பனியில்
பளிங்கென ஒளிரும் ஜோதிஷென,
வேத நான்கினை நிறுவ;
திக்கெட்டிலும் திக்விஜயம் செய்த,
தில்லையம்பலத்தின் திருவம்சமே!
..
எங்கள் காமகோடியின் காமதேனுவே
பரமாச்சாரியார் பணியும் பரம்பொருளே
உம் பெருமை பேச - பஞ்ச
இந்திரியங்களால் ஆகுமோ!
உம் பணி செய்து பண்புறவே
சிறியேனுக்கேகுமோ!
..
துரிதோத்தரணம் !

-ShakthiPrabha