May 31, 2023

நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு





வீறுகொண்டு விண்ணென
விண்ணில் எழுந்து
பருந்தாகிப் பறக்கும் நிலையில்லை.
சிறகுகள் சிக்குண்டு கிடக்கிறது.

மயிலெனத் தாவ மிளிர்தோகையின்
மயக்குமெழில் வசப்படவில்லை.

கானக் குயிலென கூவும் தேன்குரல்
குடைந்து குடைந்து தேடியும்
கைகூடவில்லை.

மாடப்புறாவின் மாண்பும்
அன்னத்தின் மாட்சிமையும்
கிளியின் பஞ்சவர்ணமும்
வரையப்படவில்லையென...
கோழியாக உருவெடுக்க
நினைத்தாலே குலைநடுக்கம்;
குதறித் தின்றுவிடுமோ
மாக்களின் கூட்டமேன மயங்கி,

பறவையினம் விடுத்து
புறப்பட்டேன் புதிய புகலிடம் நாடி...

புலியாகும் வன்மை
புரியவேயில்லை
சீறும் சிங்கமாகும் லாவகம்
சிறிதுமில்லை
பரியாகும் வேகமிருந்தும்
அதை பயன்படுத்தவில்லை
நரியாகும் நயவஞ்சகம்
நன்மையில்லையென
நல்லவேளை தெளிந்து..
இறுதியில்...

இதுவும் வேண்டும்
அதுவும் வேண்டும்
எதுவும் வேண்டும்
இன்னும் வேண்டும்
எதிலும் வேண்டும்
எனக்கே வேண்டும்
எனப் பேராசை தீண்ட,
மனதுக்கு மனம் தாவும்
மனிதக்குரங்காய்
மண்ணில் வந்து விழுந்தேன்

-ShakthiPrabha

May 23, 2023

எங்கும் எதிலும் (zen inspiration)

 


மலரும் பூக்களில்
சிந்தியிருக்கும் சிரிப்பு
அது சுமந்து வரும்
நேசத்தின் வாசம்
மலைகளின் கம்பீரம்
காற்றின் சுதந்திரம்
இயற்கையின் மடியில்
இறைந்திருக்கும்
வார்த்தைகளற்ற
உபநிடதங்கள்
மௌனமொழி கீதைகள்
எல்லா தத்துவங்களும்
போதிக்கப் படுவதில்லை.
புன்னகைப் பூக்களாக
மலரும் தருணங்களால்
சில பேருண்மைகள் உணரப்படுபவை
சுற்றிச் சுழன்றிருக்கும்
சக்தியின் இயக்கங்களிலும்
முக்திநிலை காணும்
தத்துவ ஞானி
-ShakthiPrabha

தொலைந்தவள்



திரும்ப முடியாதொரு திருப்பத்தில்
நுழைந்து தொலைந்து போனேன்
கதறியழுது உடைந்து போனேன்
நொறுங்கி காணாதொழிந்தேன்
என் பழைய முகம்
மீட்கவே முடியாமல் மாறிப் போனது