பிற மதநெறிகள் ஓங்கி, சைவம் தடுமாறும் போதெல்லாம் அவதார புருஷர்கள் சைவத்தை நிலை நாட்டி செல்வது பாரத மண்ணின் பெருமை. அவ்வாறு வந்தவர்கள் ஆதிசங்காராச்சாரியார் உட்பட பலர். அறுபத்தி மூன்று நாயன்மார்களில் சிலரும் சைவநெறி மேலோங்க பெரிதும் காரணமாயிருந்தனர்.
.
சைவ சமயத்தை முன்னிருத்தியவர்களுள் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் சைவ குரவர்கள் என்று போற்றபடுபடும் அப்பர், சுந்தரர், நாவுக்கரசர், மாணிக்க வாசகர் எனும் நால்வர்.
.
சுந்தரர் இயற்றிய் திருத்தொண்டர் தொகை
_________________________________________
.
சுந்தரர் வாழ்ந்த காலம் 8 ஆம் நூற்றாண்டு. மாணிக்க வாசகருக்கு முன் தோன்றியதால் அவரைப் பற்றிய குறிப்பு தமது திருத்தொண்டர் தொகையில் எழுதவில்லை. சுந்தரர் எழுதியதை பின்பற்றி பெரியபுராணம் எழுதப்பட்டதால் நால்வருள் மூவரே நாயன்மார்களாக பாடப் பெறுகிறார்கள்.
.
சுந்தரர் திருத்தொண்டர் தொகை பாடுதற்கு, விறண்மிண்ட நாயன்மார் காரணமானார். அடியவர்களுக்கெல்லாம் அடியேன் என்று தமை தாழ்த்தி, அடியவரை வாழ்த்திப் பாடினார். சுந்தரர் அறுபது நாயன்மார்களை தொண்டர்த் தொகையில் குறிப்பிடுகிறார். அவரது திருத்தொண்டர் தொகையை மூல நூலாகக் கொண்டு சற்றே விரிவு படுத்தியவர், நம்பியாண்டார் நம்பி என்பவர்.
.
நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி
_________________________________________________
நம்பியாண்டார் நம்பி திருநாரையூரில் பத்தாம் நூற்றாண்டு அவதரித்தவர். நம்பிகளின் தந்தை வெளியூர் செல்ல நேரிட்ட போது, நம்பிகள் பிள்ளையாருக்கு தானே நிவேதனம் செய்தார். ஆலயத்துள் எழிற்கோலம் கொண்ட பிள்ளையார் பல முறை அழைத்தும், நிவேதனத்தை ஏற்கவில்லை என வருந்தி, தன் பூஜையில் தவறு நேர்ந்ததோ என பதறி சுவற்றில் தலையை மோதி தமை வருத்திக்கொண்டார். தடுத்தாட்கொண்ட பிள்ளையார், நிவேதனைத்தை ஏற்று அருளினார்.
.
இவ்வளவு பெருமைக்குறிய நமது நம்பி, திருவந்தாதி அமைத்த நிகழ்வை சிந்திப்போம். இவரது பெருமை அறியப் பெற்ற அபயகுலசேகரன் என்ற சோழ மன்னன், தமிழும் சைவமும் விளங்க, மூவர் அருளிய தேவாரம், திருமுறைகள், தொண்டர்கள் வரலாறுகளை, தமிழ்கூறும் நல்லுலகமெங்கும் சென்றடைய வேண்டும் என்று\ ஆவல் கொண்டு பிள்ளையாரின் அருள் வேண்டி நம்பியிடம் தமது கோரிக்கையை வைத்தார்.
.
பிள்ளையாரும், தில்லையில் தேவாரத் திருமுறைகள் வைக்கப்பட்டுள்ளதென அருளி திருத்தொண்டர் வரலாறை தாமே நம்பிக்கு உணர்த்தியதாக நிகழ்வு.
.
தில்லையை அடைந்த மன்னரும், நம்பிகளும், தேவாரம் திருமுறைகள் அடங்கிய பூட்டப்பட்டுள்ளா அறையின் கதவை திறக்க வேண்டினர். அந்தணர்களோ மூவர் வந்தாலன்றி அக்கதவு திறப்பது இயலாதென்று உரைத்தனர். மன்னர் மூவரின் திருவுருவங்களை பூஜித்து முறைப்படி கதவின் எதிரே நிறுத்தி, கதவு திறக்கப் பெற்றார்.
.
சமய நூலகள் கறையான் அரித்து புற்று மூடி வீணாகியிருந்ததால் அனைவரும் துக்கித்தனர்.
அப்போது, 'இக்காலத்திற்கு ஏற்ற ஏடுகளை மட்டும் விட்டு வைத்திருக்கிறொம் அஞ்ச வேண்டாம்' என்று இறைவன் அசரீரியாக அருளினார்.
.
அவற்றை எடுத்து நம்பிகள் பதினொன்று திருமுறைகளாக வகுத்து உணர்த்தினார். சுந்தரரின் திருத்தோண்டர் தொகையை, பிள்ளையார் உணர்த்தியதற்கேற்ப நாயன்மார்களின் வரலாற்று செய்திகளையும் சேர்த்து குறிப்பிட்டு, 'திருத்தொண்டர் திருவந்தாதி' என்று இயற்றி அருளினார். நம்பிகள் எழுதிய நூல்களும் பதினொன்றாம் திருமுறையில் அடங்கும்.
.
சேக்கிழாரும் இயற்றிய பெரியபுராணம்
_______________________________________
நம்பிகளுக்கு பின் தோன்றி 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சேக்கிழார். சேக்கிழார் அறுபத்தி மூவரைப் பற்றி எவ்வாறு எழுதினார் என்பதும் சுவாரஸ்ய நிகழ்வு. சமண மதத்தின்
கோட்பாடுகளிலும், கேளிக்கை விளையாட்டிலும் தம் மனதை செலுத்திய மன்னரை சைவத்தின் பெருமையை எடுத்துரைக்க ஆசை கொண்டார் சேக்கிழார்.
.
சேக்கிழார், இளமைப் பருவத்தில் இருந்த போது, அநபாய சோழனின் பெருஞ்சந்தேகங்களைத் தீர்த்து, அமைச்சர் பதவியை பெற்ற பெருமை கொண்டவர். இம்மைக்கு மட்டுமின்றி மறுமைக்கும் வழிதேட வேண்டுமென மன்னனுக்கு வலியுறுத்தி,
தொண்டர்கள் பெருமையை விளக்க முற்பட்டார். தில்லை நடராஜர் முன் வணங்கி நின்றார். இறைவனே சேக்கிழாருக்கு "உலகெலாம்" என்று அடியெடுத்துக் கொடுத்து அருளியதாக நிகழ்வு. சித்திரை திருவாதிரையில் இயற்றத் துவங்கி, சரியாக ஒருவருட காலம் எடுத்து அடுத்த வருடம் அதே சித்திரை திருவாதிரையில் பெரியபுராணம் இயற்றி நிறைவு செய்தார். சுந்தரர் நாயன்மார்களை பாடிய வரிசையே பெரியபுராணத்திலும் அமைத்து பாடினார்.
.
சுந்தரர் குறிப்பிட்ட நாயன்மார்கள் அறுபது. சேக்கிழார் பெரியபுராணத்தில், சுந்தரரையும், சுந்தரரின் பெற்றோர் சடையனார், இசைஞானியாரையும் சேர்த்து அறுபத்து மூவர்களாக்கி நமக்கு சமர்பித்தார்.
.
முதல் நூலாக சுந்தரரின் திருத்தொண்டர்த் தொகையைக் கொண்டவர், நம்பிகளின் திருவந்தாதியிலிருந்து குறிப்பெடுத்தார். ஊர் ஊராகச் சென்று கல்வெட்டுகள், செவிவழி செய்திகள், நாட்டுப்புற பாடல்கள், என்று பலவகையில் செய்திகள் திரட்டினார். அச்செய்திகளை எல்லாம் திரட்டி, பெரிய புராணமாக்கி இன்றும் நம் போன்றோர் சிவ சிந்தனையில் க்ஷண நேரமேனும் இருத்தற் பொருட்டு அருளிச் சென்றார்.
.
ஈசனும் நாமும்
_______________
உமையொரு பாகனை வில்வம் கொண்டும், மலர்கள் கொண்டும் அர்ச்சிக்கலாம். வாசனை திரவியங்கள் , குங்கிலியம் போன்றவை சமர்பித்து நம் அன்பை செலுத்தலாம். 'ஆனாய நாயனாரை'ப் போல், இசையால், சிவனையன்றி வேறொன்றை சிந்திக்காது துதிக்கலாம். 'பூசலாரை'ப் போல் 'வாயிலாரை'ப் போல் மனதில் பெரும் சாம்ராஜ்ஜியம் கட்டி, அதில் கொலுவைத்து நம் தந்தையென போற்றி பூஜிக்கலாம்.
.
நால்வரைப் போல், இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதவன் என்றும் உணரலாம். பித்தனே என்றும் அன்பாக அதட்டி உருகலாம்.
.
காயத்தினால் மட்டுமன்றி வாக்காலும் மனதாலும் பேரறிவாலும் சிவனை சிந்தித்து , அவர் அருளால், குருவருளால், பிறவி பெருங்கடல் நீந்தி, அரிதிலும் அரிதான மானுடப் பிறப்பின் பெரும்பயன் உணர்ந்து முழுமை பெறுவோம்.
.
ஓம் நமச்சிவாய.