(என்றோ எழுதிய விமர்சனம். மிக நீண்ட விமர்சனம். வெகுவாக வெட்டியதிலேயே இவ்வளாவு மிச்சம்)
சஞ்சய் லீலா பன்சாலிக்கு மகுடம் சூட்டப் போகும் படம்.
காது கேளாத, கண்பார்வையற்ற சிறுமியின் போராட்டம். அவளின் ஆசைகள், உணர்ச்சிகள், வெற்றிகள், தோல்விகள். அவளுடன் பயணிக்கும் அவள் ஆசிரியர். தன் வாழ்நாளை அவளுக்காகவே அவளுடனே வாழ்ந்து நினைவிழக்கும் அவர்.
ஓமங் குமாரின் கலையியக்கத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். ஒவ்வொரு நுணுக்கத்தையும் சிரத்தையுடன் கவனித்து செதுக்கியிருக்கிறார். நுணுக்கமாய் பார்க்கும் பல காட்சிகளில், அதன் அழகும், செலுத்தப் பட்டிருக்கும் கவனமும் பாராட்டத் தக்கவை. மிஷைலின்(ஊனமுற்ற குழந்தை) வீட்டு உட்புற அலங்காரங்கள், கதாபாத்திரங்களின் உடைகளில் கவனம், என ஒவ்வொன்றிலும் தன் குழந்தையை அலங்கரிக்கும் தாயின் ஆர்வம் தெரிகிறது. சஹாயின்(அமிதாப்) வீட்டில் உறங்கிக் கிடக்கும் கருஞ்சுவற்றில்,
மிஷைல் ஆக நடித்த சிறுமி, நம் மனதில் அப்படியே பாத்திரமாய் பதிந்து விடுகிறாள். அபாரமான நடிப்பு.
படத்தின் முதல் இரு காட்சிகளில் ராணி முகர்ஜியை ஜீரணிக்க முடியவில்லை. நிலைகுத்திய பார்வையும், ஒரு பக்கமாய் வெட்டிய முகமும், உணர்ச்சியற்ற பிழம்பான தோற்றமும், சற்றே நம்மைத் திகைக்க வைக்கும் அதே முகம், கதைக்குள் நம்மை இழுக்கவும் செய்கிறது.
மிஷைலின் அம்மாவாக ஷெர்னாஸ் படேலின் நடிப்பு திருப்தியாக இருக்கிறது. நந்தனா சேன் (மிஷைலின் தங்கையாக வருபவர்) தன் பங்கை நன்றாகச் செய்திருக்கிறார். சாராவாக வரும் நந்தனா தன் அக்காவைப் புரிந்து கொண்டாலும், அவளுக்கு இயல்யாய் இருக்கக் கூடிய சில துவேஷங்கள், என எந்த கோணத்தை விட்டுவைத்தார் இயக்குனர்? எல்லா கோணத்திலிருந்தும், இவ்வகை ஊனமுற்றோரின் வாழ்வை அலச மட்டும் செய்யாமல், அதற்குச் சரியான தீர்வு, நம்பிக்கை மற்றும் முயற்சியால் கிட்டும் வெற்றி என சரியான பாதையில் நடை போட்டிருக்கிறார்.
ஆசிரியர்-மாணவியின் நடுவில் பின்னப்பட்ட வலை, அதன் ஆழம் பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு விதமாய் ஆழப் பதியும் கதை, கண்வழியே வழியும் உணர்ச்சிகள், சற்றும் மிகையில்லாத பேச்சுகள்.
ஒவ்வொரு வரியும், வசனமும் கவிதைகள். ஒவ்வொருவரின் நடிப்பும் மற்றவரின் நடிப்புடன் போட்டியிடுகிறது.
"நீங்களெல்லாம் 20 வருடத்தில் வாங்கும் பட்டத்தை நான் 40 வயதில் வாங்கியிருக்கிறேன். இருந்தாலும் என்ன.... "நான் பட்டம் வாங்கியிருக்கிறேன்!... அது போதும் எனக்கு" என்று மிஷைல் சொல்லும் பொழுது, RaniMukherjee யின் முகத்தில் தெரியும் பெருமை, நம்மையும் தொற்றிக் கொள்கிறது.
ஆல்சிமர்(alzheimer) எனும் மறதி வியாதியால் பின்னால் அவதிப்படுகிறார் சஹாய். இதை விளக்கும்படி சில காட்சிகள் வியாதியின் முதற்கட்டத்தில் காட்டும் பொழுது, மெல்ல பயம் நம் மனதுள் எட்டிப் பார்க்கிறது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது அந்த பயத்தின் மூல காரணம். தான், தன்னைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் மறந்து, எதையுமே மறந்து ஜீவிப்பது எத்தனை கொடியது!
தன்னைச் செதுக்கிய ஆசிரியரை, செதுக்க முற்படுகிறாள் 40 வயது மிஷைல். அவர் கற்கும் முதல் எழுத்தும் வாட்டரின் வரும் 'வா'. நம்பிக்கையுடன் நடந்து அடுத்த அடி எடுத்து வைக்கிறாள் மிஷைல். நாமும் தான். இரண்டரை மணி நேரப் படமும் ஒரு தனியுலகில் மிஷைலுடன், சஹாயுடன் அவர்களின் வெற்றி தோல்வியில் ஒன்றிவிடுகிறோம்.
இவ்வளவு எழுதியும், முடிவுறாமல் இருப்பது போன்ற பிரமை. சில விஷயங்கள் படிப்பதை விட, கேட்பதை விட பார்த்தால் இன்னும் புரியும். எனது பரிந்துரை இது தான், நீங்கள் 'ப்ளாக்' பார்க்கவில்லையெனில் நிச்சயம் பாருங்கள்.