மாரீசன் என்ற அரக்கன் மிகப் பொல்லாதவன். மாரீசன் என்று கேட்டவுடன் "மாரீச மான்" நினைவில் வரும். பல முனிவர்களுக்கும் தபஸ்விகளுக்கும் இன்னல் விளைவித்தவன். யாகங்களை கெடுப்பதும், சாத்விகளை இம்சிப்பதும் அவனுக்கு இன்பம் அளிப்பன. தாடகை என்ற அரக்கிக்கு சுபாஹுவும் மாரீசனும் புதல்வர்கள். தாடகையும் அவள் புதல்வர்களுடன் கானகம் முழுவதும் சுற்றித் திரிந்து அட்டகாசம் செய்து வந்தனர். ஹோம குணங்களில் இரத்த மழை பொழியச் செய்தும், மாமிசங்களை விட்டெரிந்தும், இன்னும் பல்வேறு விதமாயும் இன்னல் விளைவித்தனர். இவர்களை அழிக்கவும் யாகத்தை காக்கவும் விஸ்வாமித்ரர் தசரதனிடம் விண்ணப்பித்து இராமனின் உதவியை நாடுகிறார்.
தாடகை ஒரு யக்ஷ கன்னிகை. பிரம்மதேவனின் வரத்தால் ஆயிரம் யானைகளின் பலம் கொண்டவள். சுந்தன் என்பவனை திருமணம் செய்து கொண்டு மாரீசன் , சுபாஹு என்ற புதல்வர்களை ஈன்றெடுத்தாள். ஒரு சமயம் சுந்தன் அகஸ்திய முனிவரின் ஆசிரமத்தை அழிக்க முற்படுகிறான். வெகுண்ட முனிவர் அவனை பஸ்பமாக எரித்து விடுகிறார். இச்செய்தி அறிந்த தாடகை, அகஸ்திய முனிவரின் ஆசிரமத்தை சின்னபின்னமாக்க முயல்கிறாள். அகஸ்தியர் அவளையும் அவள் புதல்வர்களையும் அரக்கர்களாகிப் போக சபிக்கிறார். என்கிறது வால்மீகி ராமாயணம்.
source: http://archives.chennaionline.com/columns/lifehistory/history05.asp . ( நன்றி)
விஸ்வாமித்ரர் ஆணையின் படி தாடகையை வதம் புரிந்த ராமன், சுபாஹுவையும் கொன்று விட, மாரீசன் நூறு யோஜனை தூரத்திற்கு அப்பால் தூக்கி எரியப்பட்டு காயப்படுத்தப் படுகிறான். விழுந்து எழுந்தவன், இனி தூய வாழ்வு வாழ வேண்டும் எனப் பிரதிக்ஞை மேற்கொண்டு ஜடை தரித்து தவக்கோலம் பூண்கிறான். எளிமையான வாழ்வு வாழ்ந்து வந்த அவனை பழைய நட்பும் உறவும் விட்டு வைக்கவில்லை.
சூர்ப்பனகை அழுது புலம்பி இராவணனிடம் முறையிட்ட போது கரதூஷ் என்ற அரக்கனை இராமனை அழிக்க அனுப்பி வைக்கிறான் இராவணன். இராமனின் பராக்ரமத்தின் முன் கரதூஷனின் வலிமை பலிக்கவில்லை. கரதூஷனை இராமன் வதம் செய்த விஷயத்தை அகம்பனன் என்ற அரக்கன் இராவணனிடம் தெரிவிக்கிறான். "இராமனை அழிப்பது அத்தனை எளிதான காரியமாகத் தோன்றவில்லை, தந்திரத்தால் மட்டுமே வீழ்த்த இயலும். அவன் மனைவியை நீ அபகரித்து வந்தால் அவளை பிரிந்த ராமன், உயிர் வாழ மாட்டான்" என்ற துர்யோசனை சொல்கிறான் அகம்பனன்.
பழைய தொடர்பினை நினைவில் கொண்டு மாரீசனின் உதவியை நாடுகிறான் ராவணன். "பொன்மானாக வேடம் தரித்து அவள் உள்ளத்தை கொள்ளை கொண்டு விடு. உன்னை வெல்ல ராமன் உன்னைப் பின் தொடர்வான். அத்தருணத்தில் அவன் மனைவியை நான் அபகரித்து விடுகிறென், இதுவே அவனை வெல்லும் யுக்தி" . மாரீசன் சொல்லும் அறிவுரையும் நல்ல உபதேசமும் ராவணனின் சிந்தைக்கு உரைக்கவில்லை. முன்னே தான் வாழ்ந்த கெடு வாழ்வின் தாக்கம் இன்னும் தொடர்கிறதே என்ற வருத்தம் மேலிட புலம்பினாலும், இராமன் கையால் உயிர் விடுவதைக் காட்டிலும் சிறந்தது ஒன்றுமில்லை என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டு இறந்து விடுவோம் என்று தெரிந்தே உதவுகிறான் மாரீசன்.
மாரீசன் என்றாலே அவன் வாழ்ந்த துர்வாழ்வும், செய்த அநீதியுமே முதலில் நினைக்கத் தோன்றும். பலருக்கும் அவன் மேற்கொண்ட தவ வாழ்வும், திருந்திய தூய உள்ளமும் தெரியாமலே போய்விட்டது.
சமூகத்தில் கொடிய முத்திரை வீழ்ந்து விட்டால் அதனை முற்றிலுமாய் அழிப்பதென்பது பெரிதும் இயலாமல் போகிறது. இன்றைக்கும் என்றைக்கும் திருந்தி வாழ நினைக்கும் குற்றவாளியை உலகம் ஒப்புக்கொண்டதில்லை. திருந்தாமல் தவறுகளைத் தொடர்வதை விட திருந்தி வாழ்தல் நலம். திருந்தியவனை உலகம் வரவேற்கும் என்ற எதிர்பார்ப்பு அற்று விட்டாலும், உலகம் தங்களை ஒதுக்குவதே அவர்கள் செய்த தீவினைக்கு தண்டனையாய் ஏற்று வாழ்வதே ஒரே வழி. பெருந்தவறுகள் செய்யாமல் உத்தமமாய் வாழ்வது சிறப்பு. உலகம் நம்மை போற்றாவிட்டாலும் தூற்றாமல் வாழ்ந்து முடிப்பதே மேன்மையான வாழ்வு.