June 14, 2010

புராணங்கள் உணர்த்தும் பாடங்கள் (சோ-வின் எங்கே பிராமணன் - பாகம் 2 )

புராண இதிஹாசங்களை நடந்தவற்றை நடந்தபடியே கொடுத்தவர்கள் சிலர் என்றால், இறைவன் பால் கொண்ட பக்தியின் காரணமாக பக்திரசத்தோடு கற்பனையும் சேர்ந்து எழுதியவர்கள் வேறு சிலர்.

பொதுவாக வால்மீகி ராமணயத்தில் ராமன் பல நல்ல குணங்கள் நிரம்பிய மேம்பட்ட மனிதனாக மட்டுமே பார்க்கபட்டிருக்கிறான். இறைவன் என்று ஏத்தி வைத்து பக்தியோடு படைக்கப்பட்ட கம்பர் அல்லது துளசிதாசரின் இராமாயணத்தில், கற்பனைவளமும் சேர்ந்து காவியமாக தீட்டப்பட்டது. வால்மீகி இராமாயணமே ஆதாரமாக கருதப்படுகிறாது. ப்ரம்மதேவன் அருளால் நடந்ததும் நடக்கவிருப்பதும் தெரிந்து வால்மீகி எழுதிய காவியம். ராமாயணத்தில் நிகழ்ந்ததாக சொல்லப்படும் சில சம்பவங்களை இவர்கள் கையாண்ட விதங்கள் அவரவரின் பக்திரசத்தையும், கவிதை நயத்தையும் வெளிப்படுத்துவதாய் அமைகிறது.

சீதையை இராவணன் முடியை பிடித்து இழுத்துக்கொண்டு போவதாய் எழுதியுள்ளார். கம்பருக்கு சீதையை இராவணன் தொட்டு அபகரித்தான் என்று எழுத மனம் வரவில்லை போலும், சீதையை தொடாமல், பூமியை தரையோடு பெயர்த்து எடுத்துப் போனான் என்று தீட்டியுள்ளார். இதற்கும் ஒரு படி மேலே செல்கிறார் துளசிதாசர். இராமனுக்கு நடக்கவிருப்பது முன்னமேதெரிந்ததால், சீதையை அக்னியின் இருப்பிடத்தில் ஒப்படைத்து விட்டு, மாயை அவள் இடத்தை நிரப்புகிறாள். இராவணன் அபகரித்தது மாயா சீதையை என்றே சொல்லியிருக்கிறார்.

கவிநயம் மிக்க கம்ப ராமாயணத்திலோ பக்தி நிரம்பிய துளசிதாசரின் ராமாயணத்திலோ கூட இன்றைக்கு நாம் பேசிக்கொண்டிருக்கும் "லக்ஷ்மண ரேகை" என்ற லக்ஷமண கோடு பற்றிய சிலாகிப்பு இல்லை. இது பற்றி ஆனந்த ராமாயணம் என்ற வேறொரு ராமாயண காப்பியத்தில் இருக்கலாம் என்றார் சோ. ராமாயணம் ஒன்றையே பலரும் பலவிதமாய் தங்கள் பக்தி அல்லது கற்பனைவளத்திற்கேற்ப நமக்கு தந்திருக்கின்றனர் என்றாலும், ஆதாரம் என்று இன்று வரை வால்மீகி ராமாயணமே பெரிதும் கருதப்படுகிறது.


ராமரை தெய்வம் என்று கருதி காவியங்கள் படைக்கப்பட்டதாலோ என்னவோ, கண்ணில் விளக்கெண்ணய் விட்டுக்கொண்டு, நாம் ராம அவதாரத்தையும், கண்ணன் அவதாரத்தின் இயல்பையும் தோண்டித் துருவி கேள்விக் கணைகளால் துளைக்கின்றோம். இறைவனே மனிதன் ரூபத்தில் என்றால், அவர் மறைந்திருந்து கொல்லலாமா? பத்தினியை அக்னியில் இறங்கச் சொல்லலாமா? வெண்ணை திருடலாமா? கபடநாடகம் ஆடலாமா? இன்னும் நிறைய குற்றச்சாட்டுகள். இறை தத்துவம் என்றால் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு நிற்க வேண்டும் என்ற நம் எண்ணத்தின் பேரில் வரும் ஏமாற்றங்கள்.

உண்மையில் இவர்கள் வாழ்கை முறையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. அதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு, அவர்களின் ஓரிரண்டு முரண்பாடுகளை சுட்டிக்காட்டியே நாம் கற்கவேண்டிய நல்லனவைகளையும் விட்டு விடுகின்றோம். ஆட்டுவைக்கும் இறைவன் ஒரு முரண்பாடும் இன்றி காரண காரியத்துடனேயே ஆட்டுவிக்கிறான். நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் நடப்பும், நிகழ்ச்சியும் காரண காரியம் இன்றி நடப்பதில்லை. ஒரு துளி துகள் வழியே உலகத்தை தரிசிக்கும் நமக்கு முழுமையான காட்சி கிடைக்காத வரையில் பலவிஷயங்கள் சிற்றறிவிற்கு எட்டுவதில்லை.

ராமனின் குணாதிசயங்களை அலசும் பலரும் போனால் போகிறது என்று விட்டு வைக்கும் ஒரு விஷயம் ராமனும் சில இடங்களில் பொய் கூறியிருக்கிறான் என்பது. சுமந்திரன் தேரை ஓட்டிக்கொண்டு போகும் நேரம், அயோத்தியே கலங்கி நிற்கிறது, தசரதரோ துக்கம் தாளாமல் தேரை நிறுத்த சொல்லி குரலெழுப்புகிறார். அதை கேட்ட ராமன், 'தேரை நிறுத்தாது ஓட்டிக்கொண்டு போ என்று ஆணையிடுகிறார். பின்னால் இதுபற்றி அரசர் கேட்க நேரிட்டால், உங்கள் குரல் என் காதில் விழவில்லை' என்று சொல்லிவிடும்படி பணிக்கிறார். இங்கு கூறப்படுவதும் பொய் தான். ஆனால் சொல்லப்பட்ட பொயானது மேன்மையான விஷயத்திற்காக (சாமான்ய விஷயமோ, லௌக்கீக விஷயத்திற்காகவோ அல்லாமல்) சொல்லப்படும் போது, அது வாய்மைக்கு சமமாகிறது. தசரதர் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டியது மகனின் கடமை. அவர் வார்த்தை பொய்க்கக்கூடாது என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இதனையொட்டி நடக்கும் மற்றொரு சம்பவத்திலும் பரதனை அனுப்பிவிக்கும் பொருட்டு, கைகேயிக்கு திருமணத்தில் போதே அவள் மகனே அரசாளும் வரம் தசரதன் கொடுத்தான் எனவே தந்தையின் சொல் காப்பாற்றப்படவேண்டும் என்ற நோக்கத்திற்காக பரதனே மீண்டும் நாடு திரும்பி அரசாள வேண்டும் என்று ஆறுதல் கூறி அனுப்பிவைக்கிறான். கைகேயிக்கு திருமணத்தின் போது எந்த வரமும் கொடுக்கப்படவில்லை. இது பற்றி கைகேயியோ வசிஷ்டரோ, சுமந்திரரோ, வால்மீகியோ ஏன் மந்திரையோ கூட சொல்லவில்லை ஆனால் ராமன் சொல்வதாக புராணம் கூறுகிறது.

கொடுத்த வாக்கை காப்பாற்றுதல் அதி முக்கியமான கர்மா. வாக்கை காப்பாற்றுவது தவத்திற்கு ஈடாகும். உயிர் கொடுத்தேனும் வாக்கை காப்பாற்றியவர்கள் பலர், தசரதர் உட்பட. வாக்கு காப்பாற்றப்படவேண்டிய கடமையை நினைவூட்டும் பொருட்டு கைகேயி 'உயர் குலத்திலும் நல்ல பிறப்பிலும் பிறந்த நீங்கள் நல்ல ஒழுக்கம் நிரம்பிய நீங்கள், அதனை தக்கவைக்கும் பொருட்டு, மேன்மையடைச்செய்யும் கடமையாக உங்கள் வாக்கை காப்பாற்றிக்கொள்ளுங்கள்' என்று தசரதனை எச்சரிக்கிறாள். 'சொன்ன சொல் தவறாமை' என்னும் உயரிய பண்பை கடைப்பிடிப்பது பல வியக்கத்தக்க பயன்களையும் பலன்களையும் தரவல்லது.

இறைவன் மனித உடல் தாங்கி வரும் பொழுது அவனும் அவற்றிற்கேற்ப பலாபலன்களையும், துக்க சுகங்களையும் அனுபவிக்க கடமைப் பட்டிருக்கிறான். உலக மாதாவாகிய சீதை பிராட்டியே மண்ணுலகில் தோன்றிய போது அனுசூயாவிடம் பாடம் பெற்றாள். அதுவும் எப்பேற்பட்ட பாடம்? நல்ல மனையாளுக்கான அடிப்படை குணங்கள் பற்றிய பாடமாம். அத்திரி மஹரிஷியின் பத்தினி அனுசூயா மிக அறிவும் தேஜஸும் மேன்மையும் நிரம்பப் பெற்றவள். பிராட்டிக்கு தெரியாத விஷயமா என்ன! எனினும் சிறு பெண்ணுக்கேயுறிய அடக்கத்துடன் கேட்டுக்கொள்கிறாள். 'புருஷன் சொல்பேச்சு கேட்டு நடப்பவளே நல்ல மனையாள். அவன் கெட்டவனோ, நல்லவனோ, காம இச்சை கொண்டவனோ, ஏழ்மையில் உழல்பவனாயினும், பணம் நிரம்பியவனாக இருப்பினும், அவன் சொல்பேச்சு கேட்டு நடப்பதே உயரிய பண்பு. கணவனே உயர்ந்த தெய்வம். ஆர்ய (மேன்மையான, மரியாதைக்குறிய என்பது அர்த்தம், இது எந்த வகுப்பினரையும் குறிக்கும் சொல் அல்ல. தற்காலத்தில் இது தவறாக பயன்படுத்த படுகிறது) ஸ்வபாவம் நிரம்பிய பெண்களுக்கு புருஷன் சொல் உயர் வேதம். அது அல்லாத பெண்கள் காமத்தில் (காமம் என்றால் ஆசை, இச்சை என்று பொருள், காமம் என்னும் பாலியல் இச்சை மட்டும் குறிக்கும் சொல் அல்ல ) உழல்பவர்களாக, கணவனை அடக்கி ஆளும் ஸ்வபாவம் கொண்டவர்களாக இருப்பவர்கள். அப்படிபட்டவர்கள் தீய வழியில் பயணிப்பவர்கள், சொல்பேச்சு கேட்டு நடப்பதில் இருக்கும் நன்மை தீமைகளை அவர்கள் அறிய மாட்டார்கள்' என்கிறாள்.

அனுசூயை சொன்னதற்கு ஒரு படி மேல் சென்று, புருஷனைத் தொடர்ந்து காட்டிற்கே சென்று சொந்த சுக துக்கங்களை கைவிட்ட மனையாள் சீதை.

புராணக் கதைகளின் மூலம் நாம் கற்கும் சில பாடங்கள் தற்காலத்திற்கு எந்த அளவு பொருந்தும் என்று சொல்வதற்கில்லை. எனினும், குடும்பத்தில் சுமூக சூழல் நிலவ, சச்சரவுகளை வாக்குவாதங்களை அதிகரிக்காமல் அனுசரித்து போதல் நலம். இது இயல்பாய் பெண்களுக்கு எளிதில் அமைந்து விடக்கூடிய சுபாவம். விட்டுக்கொடுத்து வாழப் பழகுவதால் இறுதியில் அமைதியும், இன்பமும் வெற்றியும் எங்கும் நிரம்பியிருக்கும்.