பல்லவ மன்னனாக பேராட்சி புரிந்த மன்னர் காடவர்கோன். காடவர் என்பது பன்னவ மன்னர் குடியைக் குறிக்கும். குறையேதும் நேராமல் நீதி நெறி வழுவாமல் சிறப்புற ஆட்சி செய்த மன்னன். வடமொழியும் தமிழ்மொழியும் சிறக்கும்படி இலக்கியங்களை போற்றி கலைத்தொண்டு ஆற்றி வந்தார். சிவ வழிபாட்டை கண்ணெனக் கருதியவர் நாடெங்கும் சிவநெறி தழைத்தோங்கும் விதம் அரசாண்டார்.
கைலாசநாதர் திருக்கோவிலை எழுப்பிய இராஜசிம்ம பல்லவனின் தந்தையாக 'பரமேசுவரவர்மன்' எனும் 'ஐயடிகள் காடவர்கோன்' அறியப்படுவதாக 'திருத்தொண்டர்-தொகை'யில் சுந்தரர் குறிப்பிடுகிறார்.
சாளுக்கிய மன்னன் புலிகேசியின் மகனான விக்கிரமாதித்தனை, பரமேசுவரவர்மன் திருச்சியருகே, போரிட்டு வெற்றிகண்டு விக்கிரமாதித்தனை புறமுதுகிட்டு ஓடச்செய்ததாக கைலாசநாதர் கோவில் கல்வெட்டு உணர்த்துகிறது.
சிறந்த மன்னனாக விளங்குவது மட்டுமே பரமேசுவரவர்மன் குறிக்கோளாக இருக்கவில்லை.அரசப்பதவியும் புகழும் வீரமும் நிரம்பியிருந்தும், இறைவனைப் பாடும் தணியாத் தாகத்திற்கு அரசக் கடமையே சுமையென இருப்பதை உணர்ந்தவர், தம் மகனுக்கு முடிசூட்டி, துறவறம் பூண்டார்.
சிவஸ்தலங்களை யாத்திரை செய்து வழிபட்டு ஒவ்வொரு ஸ்தலத்திற்கும் ஒரு வெண்பா பாடியிருக்கிறார். அவர் பாடியவைகளில் இருபத்து நாங்கு பாடல்களே கிடைத்துள்ளன. அவை "க்ஷேத்திர (சேத்திர) திருவெண்பா" என்று
போற்றப்படுகிறது.
இயற்றிய பாடல்களில் நிலையாமைத் தத்துவம் மேலோங்கியிருப்பதன் மூலம், இவரது துறவு மனப்பான்மையும் பற்றற்ற போக்கும் தெளிவாகிறது. பதினோறாம் திருமுறைப் பிரபந்தங்களை அருளிய நாயன்மார்களில் இவரும் ஒருவர். 'ஐயனவன் அடிகள்' என்பது 'ஐயடிகள்' என வழங்கலாயிற்று. ஈசனை சுந்தரத்தமிழில் போற்றி வெண்பா இசைத்து, ஆலயத் திருப்பணிகள் பல செய்து, இறுதியில் சிவனின் திருவடியடைந்தார்.
ஓம் நமச்சிவாய
No comments:
Post a Comment