வாள்படை பயிற்ச்சியாளராய் பணிபுரிந்தவர் ஏனாதிநாத நாயனார். சோழப் பெருநாட்டிலுள்ள எயினனூரில் பிறந்தார். போர் பயிற்ச்சியளித்து பெறும் வருமானத்தை சிவ கைங்கரியங்களில் செலவிட்டு அடியார்களை போற்றினார்.
ஓருவனின் வெற்றி இன்னொருவனின் தோல்வி. ஒருவனின் திறமை இன்னொருவனின் வறுமை. இது தானே உலக இயல்பு ! ஏனாதிநாதரின் தாய்வழி உறவனிரான அதிசூரனும் அதே தொழில் செய்து வந்தாலும், பலரும் ஏனாதியாரையே நாடியதால் அதிசூரனின் வருவாய் குறைந்தது. வன்மம் பெருகியது.
பெருஞ்சேனை திரட்டி போருக்கு அரைக்கூவல் விடுத்தான் அதிசூரன். இருபெரும் சேனையுடன் போர் புரிந்து இறுதியில் வெல்வாரே வாட்பயிற்சி அளிக்க வல்லார், மற்றார் தோல்வியை ஒப்புக்கொண்டு அரசரின் சேனைக்கு பயிற்றுவித்தலை கைவிட வேண்டும் என்று முழங்கினான். அவ்வாறே இருபெரும் படைகள் போரிட்டன. அதிசூரன் தோற்றுப் பின்வாங்க, ஏனாதிநாதர் சிறப்புற பெருவெற்றி பெற்றார்.
தோற்றவனுக்கு ஆத்திரமும் அவமானமும் அதிகம் சூழ்ந்து கொண்டது. வஞ்சம் தீர்த்தேனும் வெற்றி பெறும் நோக்கில் துணையேதுமின்றி தனியே இருவரும் போரிட்டு பார்க்கலாம் என மறுபடி அழைத்தான்.
சிவனடியார்களுக்கு தலைவணங்கி நிற்பவரல்லவா நாயனார்! திருநீறு பூசிய நெற்றி கண்டால் கரம் கூப்பி மரியாதை செலுத்துவாரேயன்றி கொல்லத்துணிய மாட்டார். அதை கருத்தில் கொண்டு எப்பொழுதும் திருநீறு அணியாத அதிசூரன் நீறணிந்த நெற்றியினனாக போர் புரியச் சென்றான். சிவனுக்கு அடிமையாகிவிட்ட அதிசூரனை கொல்லத் துணியாத ஏனாதி நாதரும் அவனை தாக்கும் எண்ணத்தைக் கைவிட்டார். இருப்பினும், ஆயுதமில்லாதவனை கொன்ற பாபத்திலிருந்து அதிசூரனை காக்கும் நல்லெண்ணத்துடன், ஆயுதமேந்தி போர் புரிபவரைப் போல் கேடயமும் வாளும் கையிலேந்தி நிற்க இதுவே சரியான தருணமென வெட்டிச் சாய்த்தான் அதிசூரன்.
ஈசன் ஏனாதிநாதர் முன் தோன்றி, நீறணிந்த நெற்றியைக் கண்டதுமே, போர் துறந்து வாளாயிருந்த பக்தியை மெச்சி தம் திருவடியில் இடமளித்து நற்கதி அருளினார்.
நீறில்லா நெற்றி பாழ் என்பர் ஆன்றோர். திருவெண்ணீற்றின் மகிமை உணர்ந்தேத்துவோம்.
ஓம் நமச்சிவாய
No comments:
Post a Comment