January 01, 2021

திருப்பாவை பாசுரம் 17 - பாசுரத்தில் தேடிய முத்து

கண்ணா, கண் பாராய்!


Photo Source: Internet: Rangoli Credit : Suganthi Ravi





இறைவனை ஆயர்குலத்து விளக்காக உருவகப்படுத்தி, கோகுலத்து கண்ணனின் வீட்டில் நுழைந்து அவனை எழுப்பும் விதமாக பாசுரங்கள் பாடுகிறார்கள்.
.
நமது உறக்கம் அஞ்ஞான நிலை. விழிப்பற்ற உறக்கம். இறைவனின் உறக்கம் யோக-நித்திரை. பூர்ண விழிப்புடன் கூடிய கால-நேர நிமித்தங்களை, கட்டுப்பாடுகளை கடந்த பரிபூரண உணர்வு நிலை. அவன் அனந்த சயனன். பரிபூரணன். அனைத்தும் அறிந்தவன். அவனே பூவுலகில் அவதரித்து நமைப் போல் உண்பதும் உறங்குவதுமாக நடிக்கிறான்.
.
நந்தகோபர் எப்பேர்பட்ட வள்ளல் என்பதை பாடிப்புகழ்ந்து துயிலெழுப்புகிறார்கள். ஆயர் குலத்துக்கெல்லாம் தேவையை வழங்குபவரே, நந்தகோபரே, எழுந்திருங்கள். எங்கள் தேவையெல்லாம் கண்ணன் தான். அவனை எழுப்புங்கள்.
.
மெல்லிய முல்லைக்கொடியின் தளிர் போன்ற மென்மையான உள்ளம் கொண்ட ஆயர்குலத்து விளக்கே, வழிகாட்ட வந்த யசோதைத் தாயே, எங்கள் நிலையுணர்ந்து எழுந்திருங்கள்.
.
யசோதையும், நந்தகோபரையும் இறைவனை எழுப்ப வேண்டும் என்று விண்ணப்பிக்கும் ஆண்டாள், தரிசனம் தரும் போது பலராமருடன் தரவேண்டும் என்கிறாள். பலராமரே ஆதிசேஷனின் அம்சம். ஸ்ரீமன்நாராயணன் ஆதிசேஷனின் மீதே அனந்த சயனம் செய்பவன், அதிசேஷன் துணையில்லாது பூவுலகிலும் விசேஷ அவதாரங்கள் நிகழ்வதில்லை. ஆதிசேஷனுடன் கூடிய எம்பெருமானின் தரிசனம் வேண்டி நிற்கின்றனர். சிறந்த பொன்னாலான சிலம்பையணிந்த பலராமரே நீங்களும் உங்கள் தம்பியும் எழுந்து எமக்கு தரிசனம் தர வேண்டும்.
.
மூவுலகம் அளந்தவன். விண்ணைப் பிளந்து தேவலோகத்தில் திருவடி பதித்த தேவர்கள் தலைவன் எங்கள் மன்னனாம் மாதவனே நீங்கள் யோக நித்திரையிலிருந்து விழித்து பலராமருடன் எங்களுக்கு தரிசனம் தாருங்கள்.
.
இறைவனை அணுகிவிட்டோம். அவன் நித்திரையிலிருந்து விழித்து, அவனது கடைக்கண் பார்வை, நம்மீது படவேண்டும் என்று துதிக்க வேண்டும்.
.
மாதவனே, மனம் திறவாய், முரளீதரனே, கண்பாராய்.
****
அம்பரமே, தண்ணீரே, சோறே, அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா, எழுந்திராய்!
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குல விளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்
அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்!
செம்பொற் கழலடி செல்வா! பலதேவா!
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்!
****

No comments:

Post a Comment