January 08, 2021

திருப்பாவை பாசுரம் 23 - பாசுரத்தில் தேடிய முத்து

ராஜாதிராஜா

Rangoli by Suganthi Ravi



.
ஊழிகாலத்தில் பிரபஞ்சம் அசைவின்றி பிரம்மத்துடன் ஒடுங்கியிருக்கும். அனைத்தும் ஏகமான நிலை. பிரிவேதும் இல்லாத ஒடுக்கம். சத்தும் அசத்தும் ஒன்றாகிய நிலையில் நல்லது கேட்டது என்ற பேதமில்லை. காலமும் கர்மாவும் கூட செயலின்றி ஸ்தம்பித்துக் கிடக்கும்.
.
அப்படி ஓய்வு கொண்டிருக்கும் ஆதிநாராயணனை போல, தன் பெருமைகளையெல்லாம் யோக நித்திரையில் ஒடுக்கி, விழிமூடிக் கிடந்த கோபாலனின் அழகை பாடிய ஆண்டாள், அவன் உறக்கத்திலிருந்து விடுபடும் திருப்பள்ளி எழுச்சியின் கம்பீரத்தை பாடுகிறாள்.
.
மழைக்காலத்தின் போது குகைக்குள் ஒதுங்கி உறங்கியிருக்கும் சீற்றமிகு சிங்கம் தானும் மானும் ஒன்றெனவே ஒடுங்கியிருக்கும். விழிக்கும் போது சிலிர்த்து எழும். சுயத்தை உணர்த்தும். பிடரியை சிலுப்பும், கண்களில் பொறிபறக்க தன் பெருங்கர்ஜனையுடன் தன் சிறப்பை கானகத்துக்கே எடுத்துரைக்கும். காட்டின் ராஜா தானென்று உணரும், உணர்த்தும்.
.
அது போல் எழுந்த கண்ணனே, மிடுக்குடன் நடை போட்டு உமது சிங்காசனத்தில் எழுந்தருளுங்கள். புவனத்தின் சக்கரவர்த்தி நீரே. எப்பேர்பட்ட சிங்காசனம்! எவரும் வீழ்த்த முடியாத உறுதியான சிங்காசனம். உமையன்றி இன்னொருவர் பிரபஞ்சத்தின் மகாராஜாவெனப் பறைசாற்ற இயலாது. நீரே ஆட்சி புரியும் ஆண்டவன். சிங்காசனத்தில் சிம்மத்தைப் போலவே கொலுவிருந்து, எம் குறைகளைக் கேட்டுக் களைவாய்.
.
கண்ணனே மன்னனாக வீற்று மக்களின் குறைகளைய வேண்டுகிறாள். பள்ளியெழுந்தவுடன் தங்களைப் பற்றி
கூறிவிடவில்லை. நீ ராஜா, நாங்கள் பிரஜை. நீ பிரம்மம், நாங்கள் பொய்யுடல் தாங்கிய ஜீவாத்மா. உமது ஸ்தானத்தில் வீற்றிருந்து எமது குறைகள் போக்குங்கள்.
.
அவர்களுக்கென்ன குறை! பாவை நோன்பு நோற்கும் பெண்களின் சங்கல்பம் பூர்த்தியாக வேண்டுமென்ற விருப்பம். கோதை நாச்சியாரின் விருப்பமோ அவனன்றி வேறில்லை.
.
****
மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலேநீ, பூவைப் பூவண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்
****

No comments:

Post a Comment