பக்தரிடம் சிக்கிய பகவான்
யானைகளை, எருதுகளை, அஞ்ஞானத்தின் வடிவான நாரை முதலிய அசுரர்களை தோள் வலிமையாலே வீழ்த்தும் இறைவன், பசுக்களை மட்டும் மேய்க்கிறான்.
.
பசுக்கள் அடியவர்களை குறிக்கும். சாதுக்களை, முக்தியடையத் துடிக்கும் ஜீவனைக் குறிக்கும். இவற்றை மேய்ப்பவனாக இறைவன். பசும்புற்கள் மேயச் செய்து, பசியாற்றி, அவற்றைத் தட்டிக்கொடுத்தே மேய்ப்பவன். அவற்றிற்காக குழலூதி ஞானம் வழங்குபவன். அவன் ஊதும் குழலில் மயங்கியிருப்பவை பசுக்கள்.
.
கண்ணனின் கைபட்டதாலேயே கோகுலத்துப் பசுக்களெல்லாம் ஞானப்பால் சுரக்கிறது. பால் சுரந்து பொங்கி வழிகிறது. இன்னுமின்னும் அதிகம் பால் சுரக்கும் வள்ளல் பசுக்களை உடைய நந்தகோபன் மகனே!..நாங்கள் உங்கள் பக்தர்கள் என்று உணர்ந்து எழுவாய்.
.
உலகத்தின் முதல் வித்து அவன். பெரியவன். மூத்தோன். இப்பிரபஞ்சமும் அண்ட சராசரமும் அவனுடைய விழுது. படைப்பதும், காத்து நிற்பதும், சம்ஹரிப்பதும் மூப்பெரும் தொழில்கள். ஆற்றல் மிகுந்தவை. அவற்றை விடவும் ஆற்றல் மிகுந்த தொழில் ஏதேனும் உள்ளதா என்ன! ஒட்டுமொத்த ஆற்றல்சக்தியின் ஏக உருவம். உலகத்தின் ஒரே ஒளிச்சுடர்.
.
வலிமையிழந்த பகைவர்கள் உன் வாசலில் உன் பாதத்தில் விழுந்து பணிவது போல், பணிந்து நிற்கிறோம். உன்னை ஸ்துதி செய்கிறோமே, உன் பக்தர்களல்லவா நாங்கள். விளையாடுவதும் பக்தர்களை சோதிப்பதும் பரந்தாமனுக்கு அழகா! திருப்பள்ளி எழுந்துவிடு.
.
எழும் வரை விடமாட்டார்கள். பகைவர்களைப் பொல் வலிமையிழந்து இவர்கள் அழைக்கவில்லை. அன்பால் அழைக்கும் ஸ்தோத்திரம். எழாமல் இருக்க முடியாது. பாகதவப் பெண்களின் அன்புப் பிடியில் வசமாக மாட்டிக்கொண்ட பாண்டுரங்கன். ஏறக்குறைய அன்பால் மிரட்டுவது போல் 'அறிவுறாய்' என்று உரிமையோடு கருணை வேண்டுகிறார்கள்.
*****
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன்னடி பணியுமாப் போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்
No comments:
Post a Comment