திவ்ய தம்பதியர்
குத்துவிளக்கின் ரம்யமான ஒளி எங்கும் பரவியிருக்கிறது. பிரட்டியும் பெருமானும் இருக்குமிடத்தில் குத்துவிளக்கின் குளிர்தீபமாக அவர்களது பேரன்பே ஜோதியாக ஒளிவீசுகிறது. இங்கே இவர்களுக்கோ தரிசனம் கிட்டும் வரை இதயம் மலராமல் இருள் சூழ்ந்திருக்கிறது.
.
யானையின் தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட கால்களையுடைய கட்டில். ஒருவேளை அவன் வலிமையை உணர்த்திய குவலயாபீட யானையின் தந்தமாகக் கூட இருக்கலாம். அவன் திருக்கரங்களால் வதம் செய்யப்பட்ட ஜீவனெல்லாம் இறைவனையே அலங்கரிக்கும்.
.
கட்டிலில் சுகமாக சயனித்திருக்கும் இருவரின் கருணையை வேண்டி நிற்கிறார்கள். நப்பின்னை பிராட்டியே நீங்கள் சுகமாக சயனித்திருக்கிறீர்கள், எங்கள் நிலைமை அப்படியா! தரிசனம் வேண்டி நிற்கும் எம் மேல் கரிசனம் காட்ட மாட்டீர்களா!
.
கிருஷ்ணனின் அருட்பார்வை கிடைக்கும் நேரத்தில் நப்பின்னை தன் மையிட்ட விசாலமான தாமரைக் கண்களால் பகவானை மயக்கி, எழுந்து போகவிடாமல் தடுக்கிறாள்.
.
இது நியாயமா பிராட்டியே! அவன் பிரிவை க்ஷணநேரம் தாங்கமாட்டாமல் உன் மணவாளனை எம்மிடம் அனுப்ப மறுக்கிறாயே! தாயே, இது உன்னுடைய ஸ்வரூபமல்லவே. நீயே தயாபரி! எமைத் தடுத்தாட்கொண்டு பெருமாளிடம் நீயே பரிந்துரைத்து, எமது குற்றங்களை பொறுத்து ரக்ஷிக்கத் தூண்டுபவள். நீ இப்படி செய்யலாமா!
.
நாம் சூடும் பூக்களெல்லாம் மலராத நமது ஞானத்தைப் போல் சட்டென்று வாடிவிடுகிறது. ஆனால் அதிகாலையில் மஞ்சத்திலிருந்து எழும் பொதும் நப்பின்னையின் கூந்தலிலுள்ள பூக்கள் மலர்ந்து நறுமணம் பரப்பியிருக்கிறதாம். கமலக்கண்ணனின் மனையவளாயிற்றே! அவளது கருங்கூதலில் எழிலாக ஏறியிருக்கும் பூக்கள் நித்தம் மலர்ந்த வண்ணமே இருப்பதில் ஆச்சரியம் என்ன!
.
பஞ்சுமெத்தையின் மேல், நறுமலர்ந்த பூக்களை சூடியிருக்கும் நப்பின்னையின் நெஞ்சத்தையே மஞ்சமாக்கி, கண் உறங்கும் கமலநாதனே, பிராட்டியின் நெஞ்சத்தில் உனைத் தவிர யாரே குடியிருக்க வல்லார்! அதை நினைந்து காதலின் பெருக்கில் மலர்ந்த மார்பினனாகப் சயனித்திருப்பவனே, நாங்களும் உன் பிரிவைத் தாங்காமல் வாடி நிற்கிறோம். உன் திருவாய் மலர்ந்து எமக்கும் நல்வார்த்தை கூறு.
****
குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்
****
No comments:
Post a Comment