நப்பின்னையின் நாயகன்
நீலக்கடலின் மடியில் தவழும் அலைகள், தெளிந்த வானத்தில் நிலவொளியின் எழில், கஜமுக கணபதியை நினைவுறுத்தும் கம்பீரமான யானைகள், இவையெல்லாம் என்றும் புதியவை, இனியவை ரசிக்கப் படுபவை. தன் வயமிழந்து மதம் பிடிக்காத வரை, யானைகள் மிகவும் அழகானவை, நட்பானவை. . மதம்பிடித்த யானைகளோ ஆபத்தானவை.
.
யானைகளும் மனிதர்களைப் போலவே. அரக்க குணம் கொண்ட ஜீவனையே மேய்க்கும் கோபாலனவன். யானைகள் எம்மாத்திரம்! மதம் கொண்ட யானையை தன் கட்டுக்குள் வைத்திருப்பவன். பிரபஞ்சத்தையே தனது தோளில் தாங்குபவனல்லவா! வலிய தோள் உடையோன்.
.
அவ்வளவு பெருமை வாய்ந்தவனின் மனையவள் எவ்வளவு பெருமை வாய்ந்தவளாக இருக்க வேண்டும்! நப்பின்னை என்பவள் கண்ணனின் அஷ்ட பத்தினிகளுள் ஒருத்தி. சத்யா எனும் நாக்னஜிதியையே தெற்கே நமது ஆண்டாள் நப்பின்னை என்றழைக்கிறாள். ஸ்ரீ விஷ்ணுவின் முப்பெரும் தேவியராம், பூதேவி, ஸ்ரீதேவி, நீளாதேவியரில் நீளா தேவியின் அம்சமாக நப்பின்னை அவதரித்தாள்.
.
நீளாதேவிக்கு நிறைய பெருமையுண்டு. பெருமானின் அன்பை வென்றவள். மிகுந்த பொறுமைசாலி. தாயாரை நாடிய பிறகே பெருமாளை தரிசிக்க வேண்டுமென்று உணர்ந்த ஆண்டாள், இப்பாசுரம் முழுவதும் தாயாரின் பெருமையை எடுத்துரைத்து யசோதையின் இளஞ்சிங்கத்தை எழுப்ப எத்தனிக்கிறாள்.
.
நப்பின்னை பிரட்டியின் கூந்தலில் சூடிய மலர்களின் வாசம் மூடிய கதவின் வழியே நாசியைத் துளைக்கிறது. கோழி கூவுவதையும், மாதவிப் பூக்களைத் தாங்கியிருக்கும் பந்தலில் அமர்ந்து குயில்கள் கானம் இசைப்பதையும் நீ அறிந்திருப்பாயே! பிரட்டியே, பூப்பந்தை கையிலேந்தி பெருமானுடனும் விளையாடிய விளையாட்டில் வெற்றிக் களித்திருப்பவளே! உன் மைத்துனன் புகழ்பாட நாங்கள் காத்து நிற்கிறோம். உன் மென்மையான தாமரைக் கைகளின் அழகிய வளைகள் ஒலிக்க கதவைத் திறந்து எமக்கு தரிசனம் தாராய்.
.
// குறிப்பு: மைத்துனன் எனும் சொல்லை பழந்தமிழ் பாசுரத்தில் கணவன் என்ற பொருளில் பயன்படுத்தியிருப்பது புரிகிறது//
***
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்
***
No comments:
Post a Comment