பக்தவத்ஸலனே துயிலெழுவாய்
பக்தன் குரல் கேட்டு பறந்து வரும் எங்கள் பரந்தாமனே! தேவர்களோ நீ இட்டபணி செய்து, உன் பக்தர்கள் குறை தீர்க்கவே பார்த்திருக்க, ஏவல்கள் ஏற்கும் தேவதைளும் தங்கள் முறை வருமென்று, அடியவர் துயர் தீர்க்க ஓடோடி வருவதற்கே காத்திருக்க, ரக்ஷிக்கும் பணிகளை சீரிய முறையில் பிரித்தளித்த பின்னரும், பாகவதர்களின் அழைப்பிற்கு முந்திக்கொண்டு அருள்செய வரும் ஆதிமூலமே, துயில் எழுவாய்.
.
உன் தன்மை உணராதவர்க்கோ நீ காலனாகிறாய். உன் நினைவே பயத்தை வரவழைக்கிறது. நடுநடுங்கிப் வியர்வையில் நனைந்து போகிறார்கள். அப்பேர்ப்பட்ட பெருமையுடைய தூயவனே எழுந்திரு.
.
திருமகளின் அழகையொத்த நீளாதேவியே! எழில் குலையாத மென்மையான தனங்களை உடையவளும், மாதுளை போன்ற சிவந்த அதரங்களும், கொடி போன்ற இடையும் கொண்ட நங்கையே, எழுந்திருங்கள்.
.
உலகையாள்பவன் அவனுக்கு கண்ணாடி சேவை செய்தால், பிம்பமாகத் தெரிவதெல்லாம் பிரபஞ்சத்தின் பெருங்காட்சியாக இருக்கும். யசோதைக்கு கிட்டிய பெரும்பேறு கண்ணாடி சேவை செய்து நாமும் பெறலாம்ன்றோ!
.
நப்பின்னை மணாளனே, அலங்காரங்களை ஒத்தி வைத்து மையிட்டெழுதாமல், மலர்களை நாளைக்கென சேமித்து, உம்மையே நாடி, உமக்கு சேவை செய்ய வந்திருக்கிறோம். உபசாரங்கள் அனைத்தும் உமக்கே. சாமரம் விசிறி உமை குளிரச்செய்து, திருமேனியழகை தரிசிக்க கண்ணாடி காட்டி உபசாரங்கள் செய்யவே ஆவலாக நோன்பு நோற்றோம். இவற்றையெல்லாம் எமது தாயாரே, பிராட்டியே, நீங்களே கொடுத்தருள வேண்டுமல்லவா. திருப்பள்ளி எழுங்கள்.
.
****
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலை(ச்) செவ்வாய்(ச்) சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.
****
No comments:
Post a Comment