January 20, 2021

எங்கள் நடிகர் திலகம் - சிவாஜிகணேசன்

 


எளிய சொற்கள் கிறுக்கி வைக்கும்
குறையறிவுள்ளப் பேதை நான்
வலிய சொல்லும் தலைவணங்கி ஏற்கும்
சொல்வளம் செழிக்கும் மேதை நீ
*
ஏட்டில் வடிக்காத எண்ணங்களையும்
கண்களால் தீட்டிய கலைஞனே! - உனை
கவிதையாக்கத் துணிந்து - பின்
காவியம் அன்றோ நீ என உணர்ந்து,
சொல்லில் சிக்காமல் நழுவும் உன்
சாமர்த்தியத்தையும் சேர்த்தே ரசிக்கிறேன்.
*
இறைவன் அளித்த வரமோ!
கலையுலக நிலவோ! சிகரமோ!
உன் திறமைக்கு உவமை சேர்க்க மறந்து
செந்தமிழ் மொழியும் மௌனம் கொண்டதோ!
*
கள்வன், கணவன், காதலன்,
கொற்றவன், பெற்றவன், மற்றவன்,
நல்லவன், சற்றே பொல்லாதவன்,
தலைவன் அவன் போற்றும் இறைவன்,
இறைவன் அவன் தேடும் தொண்டன்.
இன்னும் எண்ணற்ற முறை பிறந்தாய்..
வீழ்ந்தும் எம் நெஞ்சத்தில் நிறைந்தாய்.
கணேசன் என்பதை மறந்து
சிவாஜியென உனை செதுக்கிக் கொண்டாய்.
நடையும், அதைத் தாங்கும் உடையும்,
சிரிப்பும் பொல்லாத கண்-விரிப்பும்
துடிப்பும் கம்பீர உச்சரிப்பும்
பல கோடி நெஞ்சங்களில் நின்று வாழும்.
உன் இமாலய வெற்றியின் பெயர் கூறும்.
.



No comments:

Post a Comment