கண்ணாமூச்சி விளையாட்டு
அகண்ட உலகத்தையே தமது குடையின் கீழ் அரசாட்சி புரிவதாக இறுமாந்திருந்த அரசர்கள் என்று இங்கு புவியரசர்கள் மட்டுமல்ல, பிரபஞ்சத்தை ஆளும் தேவதேவர்களையும் குறிப்பிடுகிறாள். தங்கள் அகங்காரங்களை தொலைத்த பின்னரே, பெருமைகளைத் தூர எறிந்து, பெருமாள் அடி தொழுது
சிரம் கூப்பி பணிந்து நிற்கின்றனர்.
.
அவர்களைப் போலவே இங்கு திரளாகக் கூடியிருக்கிறோம். சங்கமாகத் திரண்டு வந்திருக்கிறோம். எண்ணிலடங்கா பக்தர்களெனக் கூடி தூயபக்தியை பெய்து நிற்கிறோம்.
.
கிண்கிணிகள் வாய் எவ்வாறு பாதி மூடியும், மீதி திறந்தும் இருக்குமோ அதுபோல், உனது சிவந்த மலர்க்கண்கள் சற்றே குவிந்தும், மெல்லத் திறந்துமிருக்கும் தாமரை முகையைப் போல் கிடக்கிறதே! அழகிய விழிகளை மெல்ல மெல்ல மலர்த்தி எமைக் காணக் கூடாதா!
.
சூரியனின் தேஜசும் சந்திரனின் குளிர்ச்சியும் ஒருசேர உதிக்கும் உனதிரு கண்களால் எமை நோக்கினால், பற்பலகோடி பிறவிகளின் பாபங்களும் சாபங்களும் ஞாயிறு கண்ட பனிபோல் விலகிப் போகுமே!
.
யோக நித்திரையிலிருக்கும் அவனுக்கு அவர்களின் தேமதுரப் பாசுரம் ஒலிக்காமலா இருக்கும். விளையாடிப் பார்க்கிறான். சோதிப்பதும் புடம்போட்டு பொன்னாக்குவதும் பகவானுக்கு பிடித்த பொழுதுபோக்கு என்பதல்ல. அவன் கல்நெஞ்சத்தவனும் இல்லை. செம்மைப்படுத்தவும், உரமிட்டு உறுதிசேர்த்து நமை செதுக்குவதன் நோக்கம், அவனது நெஞ்சில் நீங்கா இடமளித்து துன்பமில்லா வீடுபேறு வழங்குதற்கே.
****
அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல், வந்து தலைப்பெய்தோம்.
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே,
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்,
அங்கண் இரண்டுங் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.
****
No comments:
Post a Comment