நுழைவாயில்
இறைவனைப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் நோன்பு நோற்கும் பாவையர் அனைவரும், கோவில் வாயிலை அடைந்தனர். தலைவனாம் இறைவனின் இல்லத்தை நோக்கிய பயணம். பரமாத்வும் ஜீவாத்மாவும் இணைவதென்பது படிப்படியாக நிகழவேண்டியது.
.
நமது உள்ளத்தே எழும் தடைகள், இல்லத்தில் எழும் இடர்கள், சுற்றுப்புற சூழலால் வரும் தாமதங்கள், இவற்றை கடக்க வேண்டியுள்ளது. அப்படியே கடந்தாலும், அருள்சுரக்க வேண்டுமென்றால் தெய்வங்களை அடைய தேவதைகளை வெண்டி நிற்கவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
.
தேவதா ஸ்வரூபங்கள் தெய்வத்துக்கு பணி செய்து கிடப்பவர்கள். இறைவனின் தலையாய பக்தர்கள். இறைவனின் தரிசனத்துக்கு இவர்களிடம் பணிவுடனும் அன்புடனும் அனுமதி வேண்ட வேண்டும். வாயிலை அடைந்த பெண்கள் வாயிற் காப்பானிடம் இனிமையாக உரையாடிய செய்தியை இப்பாசுரம் சொல்கிறது.
.
தோரணங்கள் அசைந்தாடும் அழகிய இல்லத்து வாசல். தலைவனாம் இறைவனின் இல்லம். எப்படிப்பட்ட இல்லம்! மணிகள் பொருந்திய கதவைத் தாங்கிய இல்லம்! கதவுக்கு மணிகள் ஏன்? நமது எளிய வீடுகளுக்குக் கூட அழைப்பு மணி இருக்கிறதே. அவன் வீடு என்பது பரமபதம். அப்பரமபதத்தை கோடானகோடி பக்தர்கள் அனுகூணமும் அணுகிக் கொண்டே இருக்கும் பெருவீடு. இல்லத்து வாயிலில் அனேக மணிகளைத் தாங்கியிருக்கும் மணிக்கதவு. ஒவ்வொரு மணியும் இறைவனை அழைக்கக் கூடிய அற்புத கிண்கிணிகள். தொட்ட மாத்திரத்தில் இறைவனின் கவனத்தை ஈர்க்ககூடியது கதவு. அந்த மணிக்கதவோ மூடியிருக்கிறது.
.
அனுமதியின்றி அதனுள் நுழைய முடியாது. கதவைத் தொடக் கூட சாத்தியமில்லை. பெண்களெல்லாம் தங்களுக்கு மாதவனை முன்னமே தெரியுமென்று எடுத்துரைக்கிறார்கள். மாயங்கள் செய்பவனாம், நீலமணி வண்ணனாம் எங்கள் கண்ணன் நேற்றே வாக்களித்திருக்கிறான். பறைமுரசை எளிய ஆயர்சிறுமியரான எங்களுக்கே பரிசளிப்பதாக சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான் தெரியுமா! எங்களை அனுமதியளியுங்கள். நம்பிக்கையுடன் வந்திருக்கும் எங்களுக்கு இல்லையென்று அவசரப்பட்டு மறுத்து, அவனை வாக்கு தவறச் செய்யாதீர்கள். புனித நீராடி பரிசுத்தமாக வந்திருக்கும் நாங்கள், சுப்ரபாதம் பாடி அவனைத் துயிலெழுப்ப வந்துள்ளோம், நிலைக்கதவை திறவுங்கள்.
.
திறக்கட்டும். காத்திருப்போம்.
****
நாயகனாய் நின்ற நந்தகோப னுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ!
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!
****
No comments:
Post a Comment