மாசற்ற செல்வம்
Rangoli credit : Suganthi Ravi ;;;; Picture source: Internet
வாமன அவதார மூர்த்தி உருவில் சிறியதாக இருந்தார். கீர்த்தியில் பெரியவர். மூவலகை அளந்தவர், விருட்சமென வளர்ந்து நின்ற பக்தனது அகங்காரம் எனும் "மாசு" தனை நொடிப்பொழுதில் இல்லாதொழித்து ஆட்கொண்ட காருண்யன்.
.
நெறிதவறாத மாந்தர் வாழுமிடத்திலெல்லாம் திங்களுக்கு மூன்று முறை மாரி பொழிந்து, வளம் பெருகி எங்கும் இன்பம் நிறையும். தவமும் சீலமும், நோன்பும் நல்கும் ஆகச் சிறந்த பயன்கள் இவை. ஞானிகளாலும், தவச் சீலர்களாலும், அமைதியான ஆடம்பரமற்ற எளிய வாழ்வு வாழும் இல்லறத்தாராலும், பேணி காக்கப்படும் பூஜை நோன்புகள், நேர்மறை அதிர்வுகள் எழுப்பி, சுற்றுப்புறத்தை மாசற்றதாக்கி இறையருளை வாரி இறைக்கிறது. உத்தமன் பேர்பாடி நிற்கும் இவர்களே பரோபகாரிகள்.
.
பிரபஞ்சத்தில் உயர்ந்தோங்கி நிற்பவன் இறைவன். அவனே உலகுக்கு படியளப்பவன். அவன் பெயரை கொண்டாடினால் நமக்கும் படியளப்பான். திங்கள் மும்மாரி பெய்யும். நீர்வளம் பெருகும். இயற்கை வளம் கொழிக்கும். அவ்வாறு செழித்த நிலத்தில் பசுமைக்கு பஞ்சமில்லை. செழுமையான நெற்பயிர்களுக்கு பாய்ச்சிய நீரிலும் மீன்கள் நீந்தி விளையாடும். வளமான நிலத்தில் அழகிய குவளை மலர்கள் அலர்ந்திருக்கும், அதில் வண்டுகள் முயங்கியிருக்கும். ஆவின் வள்ளல்மடி நிரம்பச் சுரந்து, பால்பெருகி, குடங்கள் நிறையும். செல்வம் பெருகியதால், வயிறும் மனமும் திருப்தியுறும்.
.
நோன்பு நீராடிய பலனால் சுற்றுச்சூழலும் மாசற்று துலங்குகிறது. மண்வளம் பல்கிப் பெருகியதோடன்றி, அகத்து மாசும் நீங்கி, மனவளமும் வாய்க்கும். நீங்காத செல்வமான பக்தியும் ஞானமும் மெல்ல மெல்ல பெருகவும் காணப்பெறுவோம்.
.
இன்றைய வாழ்க்கை முறையையும், இயற்கைச் சீர்கேடுகளையும், இப்பாடல் போற்றும் வளமையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், எதையெல்லாம் இழந்திருக்கிறோம் என்று புரியும்.
No comments:
Post a Comment