கேட்கும் ஒலியிலெல்லாம், நிந்தன் கீதமே
Rangoli Credit : Suganthi Ravi;; Picture Source: Internet
பளீரென்ற நீலவானத்தின் நடுநடுவே வெண்ணிற மேகத்திட்டுகள். பார்த்துக் கொண்டிருக்கும் போதே மேகங்கள் கருத்து, வானம் கருநீல வண்ணம் உடுத்தும் தருணம் எழிலானது. கவித்த்துவம் நிறைந்த காட்சியின் அழகை கண்கள் உள்வாங்கும் போதே, "கண்ணனின் கருநீல வண்ணம்" என்ற எண்ணமே எழுகிறது. நம்மைப் போன்ற முதிர்ச்சி அற்றவர்களுக்கே இந்தச் சிந்தனை இருந்தால், பூதேவியின் அம்சமான பூமகளல்லவா ஆண்டாள்.
.
காணும் காட்சியிலும், பேசும் பேச்சிலும், நெஞ்சத்து நினைவிலும், வாரணம் ஆயிரம் சூழ திருமணம் புரிந்த கனவிலும் கூட கண்ணனையே காணும் கோதைக்கு, ஆழிக்கடலும் கண்ணன். மேலேகி அதுவே பரந்தாமனின் நிறத்தையொத்த கருமேகமென உருக்கொண்டு, பொழியும் மழையாகக் கண்ணன். மின்னும் மின்னலும், முழங்கும் இடியும் மாதவனே.
.
பிரகாசமான சுதர்ஸன சக்கரத்தையோத்தது மின்னல். சங்கின் முழக்கமே இடி. அவனது சார்ங்க வில்லிலிருந்து பொழியும் அம்புகளாக மழை மண்ணைத் துளைக்கிறது. கண்ணனே மழையாகி மகிழ்விக்கிறான். அவனை வணங்கவும் அவனே அருள்செய வேண்டுமென இறைஞ்சுகிறோம்! "அவன் அருளாலே அவன்தாள் வணங்கி" -- என்கிறது திருவாசகம்.
.
அருளை மழையாக்கி, அன்பை மழையாக்கி, சியாமள வண்ணனே நீர் பொழிவான். அதில் நனைவோம், நீராடி நோன்பு நோற்போம் வாருங்கள்.
.
***
ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
***
.
No comments:
Post a Comment