தடக்கையனை வணங்குவோம்
புழக்கடையில் தோட்டம் என்பதெல்லாம் சென்ற தலைமுறையுடன் கனவாகி விட்ட விஷயம். ( புழக்கடை என்ற தூய தமிழ்ச் சொல்லை இன்றும் பலர் கையாளுகின்றனர். ) அந்த புழக்கடையிலுள்ளது எழில் மிகுந்த வாவி, அதாவது குளம். அக்குளத்தில் சூரியனைக் கண்ட தாமரை மலர்ந்து, சந்திரனைத் தொலைத்த அல்லி மூடுவதெல்லாம் ராஜாகாலத்து அரண்மணையின் நந்தவனக்காட்சி போல விரிகிறது. புழக்கடையே துர்லபம். அதில் வாவியும் மலர்களும் இனி கற்பனையில் மட்டுமே.
.
காவியுடை தரித்த அம்முனிவர்கள் வெண்மையானவர்கள். தூயத் துறவிகள். துறவிகளில் ஏறக்குறைய பலரும் தூய்மையாக இருந்த காலமது. சங்கு ஊதி தரணிக்கு விடியலை உணர்த்தப் புறப்பட்டு போகின்றனர். புழக்கடை வாவியில் அல்லி மூடி, தாமரை மலர்ந்து விட்டது. எல்லோருக்கும் முன்னமே எழுந்து, அனைவரையும் தான் எழுப்புவதாக இனிக்க இனிக்க பேசிச் சென்றவள், சொன்ன பெருமை மறந்து, நாணமற்றவளாகிப் போனாள்.
.
வாவியிலுள்ள தாமரையைப் போன்ற பங்கஜ நேத்திரத்தை உடைய கண்ணன். சங்கும் சக்கரமும் ஏந்தும் பெரிய கையுடையோன். ஏன் பெரிய கைகள் ? அந்தக் கைகளே நமை ரக்ஷிக்கின்றன. தடுத்தாட்கொள்கின்றன. கோடான கோடி ஜீவராசிகளை பராமரிக்க, அணைத்து அபயமளிக்க, சங்கும் சக்கரமும் தாங்கி, நமை நோக்கி நீளும் பெரிய கைகள் அவனுடையது. அவனைப் பாட எழுந்து வாராய் தோழியே.
*****
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்
*****
No comments:
Post a Comment