December 21, 2020

திருப்பாவை பாசுரம் 5 - (பாசுரத்தில் தேடிய முத்து)

பாடுவோமே பாசுரம் பாடுவோமே


Picture Source: Internet ;; Rangoli Credit : Suganthi Ravi



விசேஷ நாட்களில் நமக்குப் பிடித்த உணவுவகைகள் சமைக்கப்படும் போது கவனமெல்லாம் அதன் மீதே இருக்கும். அலுக்கவே அலுக்காதது உணவு. இறைவனுக்கு படைத்துவிட்டு நாம் உண்ணும் வரை சிந்தனையெல்லாம் அதன் மீதே இருக்கும். இதுவே சாமான்னியன் நிலை.
.
ஒன்றன் மீது பற்று வைத்து விட்டால் கவனம் சிதறாமல் அங்கேயே ஒருமித்து விடுகிறது. காதல் நினைவில் வாடும் காதலர்களுக்கும் இதுவே பொருந்தும். பிரிவின் ஆற்றாமையைத் மட்டுப்படுத்த ஒருவரைப் பற்றி இன்னொருவர் சிந்தித்திருப்பதே தித்திப்பு. அன்புக்குரியவர்களைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதே ஆனந்தம்.
.
இறைவன் ஒவ்வொரு தனிப்பட்ட ஜீவனிடத்திலும் தூய அன்பைப் பொழ்கிறான். அதனை உள்வாங்கி திரும்பவும் அவனிடம் அதீத அன்பு செய்வதே பக்தி. பக்தர்களைப் பற்றி பகவான் சிந்திப்பதும், பகவானைப் பற்றியே பக்தர்கள் சிந்திப்பதும் அளவிலா ஆனந்தம்.
.
பூமகளே தனது துணைவனான பெருமானைப் பற்றிப் பேச பூமியில் அவதரித்தார் என்பதே நமது பெரும் பாக்கியம். ஆண்டாள் வாயார தமது நாதனைப் புகழ, அதனை நாம் உணர்ந்து போற்றி நின்றோமேயானால் பிறப்பின் பெரும்பயன் பெற்றவர்களாகிறோம்.
.
நாச்சியாரே நமது குருவாகி ஒவ்வொரு நாளும் மாதவனைப் பற்றி பாமாலை சூட்டப் போகிறார். சீடர்களாகி நாமும் அதன் பொருளை நுகர்வோம்.
.
மதுரா நகரில் பிறந்தவனை, யமுனையாற்றங்கரையில் தவழ்ந்த இடையர் குலத்து விளக்கை, தாயாருக்கு பெருமை சேர்த்தவனை, வயிற்றில் கயிறு கட்டிய சுவடைத் தரித்ததால் தாமோதரன் என்று பெயர் பெற்றவனை, தூய நீராடி, நல்மலர் தூவி, வாயார அவன் புகழைப் பாடி, சிந்தையில் அவனையே அலங்கரித்து, தியானித்திருக்கச் சொல்கிறாள். அப்படி செய்தால் செய்த பாவங்களும், அணுகவிருக்கும் தீவினைளும் இல்லாமலே பொசுங்கிப் போகும்.
.
***
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்
***

No comments:

Post a Comment