அசுரர்களை வீழ்த்தும் பரந்தாமன்
தேவர்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் அரக்கர்களால் பெரும் தொல்லை. முந்தைய யுகங்களில் அரக்கர்களுக்கென்று தனி உலகம் இருந்தது. அடையாளம் இருந்தது. சத்திய யுகத்தில் அரக்கர்கள் வேறு லோகங்களில் வசித்ததாக சொல்லப்படுகிறது. திரேதா யுகத்தில் இதே பூலோகத்தில் வெவ்வேறு இடங்களில் வசித்ததாகவும், துவாபர யுகத்தில் ஒரே குடும்பங்களிலே அசுர-சுர குணங்களை உடையவர்களாகவும் இருந்தனர் என்றும் கருத்து.
.
கலியுகத்திலோ அரக்கர்கள் ஒவ்வொரு ஜீவனுள்ளும் அரூபமாக, நமது குணங்களாக, வியாபித்திருக்கிறார்கள். கோபம், மோகம், மதம், மாத்சரிய குணங்களின் வழியே நம்மை கட்டுப்படுத்துகிறார்கள். ஒவ்வொன்றும்
நாம் வெல்ல வேண்டிய பெரும் அரக்க வடிவங்கள்.
.
நாரை வடிவில் இருந்த பகாசுரன் எனும் அரக்கனின் வாய்பிளந்து கிழித்தெறிந்தான் கண்ணன். ராவணனின் தலையை கிள்ளி எறிந்தான் ராமன். கண்ணனும் ராமனும் நாராயணன் வடிவங்கள். ராவணன் அகங்காரத்தின் உருவம். பகாசுரன் அஞ்ஞானத்தின் வடிவம். இவற்றை நாமாக வெல்வது ஒருபுறமிருக்க, நாராயணனான ஆதிமூலனை, சரணம் என்று திரௌபதியைப் போல் அழைத்தால், அரக்கர்களை பிளந்தழிக்கவும், கிள்ளி எறியவும் உடனே நம் உதவிக்கு வருவது திண்ணம்.
.
வியாழன் மறைந்து விடிவெள்ளி முளைத்தது. இனி விடியல் துவங்கும். பறவைகள் அந்த நற்செய்தியை பாடிக் கொண்டாடுகின்றன. விடியலுக்கான பொழுது என்று ஆழ்மனம் உணர்ந்திருக்கிறது. ஆனாலும் சற்றே
மலர்ந்த கண்ணில், அரைகுறை மயக்கமென தூக்கத்தின் மிச்சம் விட்டு விலகாமல் பற்றியிருக்கிறதே! அழகுப் பதுமையென உறங்குகிறாள். பதுமை என்ன செய்யும்? அதன் அறிவுக்கண் திறக்காததால், யாருடைய சங்கத்தில் இருக்கிறதோ அவரின் கைப்பாவையாக மாறும். ஆயர்க் குலப்பெண் பதுமையைப் போன்ற அழகுடையவள் அரைக்கண் மலர்த்தி உறங்குகிறாள். தோழிகளெல்லாம் நற்சொற்கள் உரைத்து, இறைவன் புகழ் பாடி அவளை எழுப்புகின்றனர். அவள் புண்ணியம் செய்தவள். சத்சங்கத்தில் இணைந்துவிட்டாள்.
******
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தே லொரெம்பாவாய்
*******
No comments:
Post a Comment