மனம் என்னென்னவோ விரும்புகிறது. வாயும் தயக்கமின்றி அதைச்சொல்லி விடுகிறது. ஆனாலும் வைராக்கியம் வர மறுக்கிறது. சொன்னசொல் காப்பதில்லை. துயரம் வரும் போது பகவானை நாடுகிறோம். உனையன்றி வேறு யாரையும் நினையேன் என்றே சத்தியமும் செய்கிறோம். துயர் நீங்கி மகிழ்ச்சிப் பெருகும் போதோ, மகிழ்ச்சியிலே திளைத்துப் போகிறோம். உலக இன்பம் எனும் புதைகுழியில் விழுவது தெரிவதில்லை, மூழ்குவது உணர்வதில்லை. சொன்ன சொல்லையும் காப்பதில்லை.
.
இங்கேயும் ஒருத்தி, சொன்ன சொல் மறந்து
துயில்கிறாள். நோன்பு நோற்று பணி செய்திருப்பேன் என்றாள். அவனுக்காக இல்லாவிட்டாலும் தன் பொருட்டு நோன்பு நோற்று சுவர்க்கம் புகுவேன் என்றெல்லாம் அலங்காரச் சொற்கள் சொன்னாலும் உறக்கம் அவளை மீறி ஆட்கொண்டுவிட்டது.
.
நோன்பு நோற்பது நமக்காக. நாம் பக்தி செய்வதும் நம் நலனுக்காகவே. அவனைப் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும், அதனால்
அவன் பாதிக்கப்படுவதேயில்லை. முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவனவன். நமது பிம்பத்தையே அவன் பிரதிபலிக்கிறான். நாம் பணிந்தால், அவன் செவி சாய்ப்பான். இவள் தூங்கிக் கொண்டிருப்பதால் தோழிகள் அழைப்பிற்கு பதில் பேசவில்லை. வாயிற்கதவை திறக்கவில்லை.
.
அளவிடமுடியாத பெரும் தூக்கத்தை உடையவளே! அந்த நாராயணன் ஸ்ரீராமனாக அவதரித்து, கும்பகர்ணனை ஆட்கொண்ட போது, கும்பகர்ணன் தன் தூக்கத்தை உன்னிடம் விட்டுப் போனானோ என்று கரிசனத்துடன் கிண்டலும் செய்கிறார்கள் ஆயர்க்குலப் பெண்கள். அழகிய ஆபரணத்தைப் போன்று பக்தர் குழாமுக்கு எழில் சேர்ப்பவளே, உறக்கம் தெளிந்து வந்து கதவைத் தாள்திறவாய்!
.
கும்பகர்ணனை விஞ்சும் நம்முடைய தூகத்தை அந்த ஸ்ரீராமனே வீழ்த்தட்டும்.
****
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த
கும்ப கருணனும் தோற்றும் உனக்கே
பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற
அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
****
No comments:
Post a Comment