December 23, 2020

திருப்பாவை பாசுரம் 8 - (பாசுரத்தில் தேடிய முத்து)

கிழக்கும் வெளுத்தது!

Picture Source: Internet ;; Rangoli Credit : Suganthi Ravi







நாச்சியார் தாயாருக்கே உரிய தயையுடன், கொஞ்சிக் கொஞ்சி எழுப்புகிறார்கள். எத்தனை வகையான மனிதர்கள்! எப்படியெல்லாம் உறங்குகிறோம்! ஆழ்ந்து உறங்கும் அழகிய நங்கை, கோதுகலமானவளாம். களிப்புடைய பாவையவள்.
.
கிழக்கு வெளுத்தேவிட்டது. எருமைகளும் மேய்ச்சலுக்கு வந்துவிட்டன. நீராடித் தூய்மை பெறும் எண்ணத்துடன் பலர் தயாராக உள்ள நிலையில் அவர்களையெல்லாம் காக்கச் செய்து, உனையே எழுப்ப வந்தோம். நீ இன்னும் உறங்கலாமா? நேரமாகிப் பொழுதும் போய்க்கொண்டே இருக்கிறதே!
.
கேசி எனும் அரக்கனை அழித்தவனவன். கேசி என்ற அரக்கன் மாயவடிவங்கள் எடுக்க வல்லவன். மாயாவிகளின் ரூபங்களை உணர்ந்து நொடிப்பொழுதில் மாய்க்க பராமாத்வினால் மட்டுமே முடியும். கேசியின் வாயைப் பிளந்த கேசவன். கம்சன் ஏவிய மல்வீரர்களை அழித்தவன். எப்பேர்ப்பட்டவன் என்று உணர்ந்தாயா! உனக்குள் உன்னையும் அறியாமலே பலவித வடிவமெடுக்கும் அரக்க குணங்களை க்ஷணத்தில் சாய்க்க வல்லவன்.
.
மாவீரன் என்று மட்டுமா நினைத்தாய்! தேவாதி தேவனவன். அவனை வணங்கினால் நம் குறைகளை களைந்து பெரருள் சித்திக்கும். எழுந்திரு. அவனைப் பாடிப் பணிவோம்.
.
******
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
******

No comments:

Post a Comment