December 22, 2020

திருப்பாவை பாசுரம் 7 - ( பாசுரத்தில் தேடிய முத்து )

நாயகப் பெண்பிள்ளாய், பேயுறக்கம் தகுமோ!


Rangoli Credit : Suganthi Ravi;; Picture Source: Internet




நாயகப் பெண்பிள்ளாய் என்று விளிக்கிறாள். தலை சிறந்தவளே! சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் நீயே பேயுறக்கம் கொள்ளலாமா? பேய் உறக்கம் என்பது விடிந்தபின் உறங்கும் உறக்கம். நள்ளிரவில் விழித்திருந்து, அதிகாலை அழைப்புக்கு நேரத்தே எழாத உறக்கம்.
.
பிரகாசமான முகத்தை உடையவளாம். கெஞ்சியும் கொஞ்சியும் ஆண்டாள் எழுப்புகிறாள். நீயே உதாரணமாகத் திகழ வல்லவள், நீ பேயுறக்கம் உறங்கலாமா?
.
இறைவனிடத்தே அபிமானம் கொண்டவர்களுக்குரிய லக்ஷணங்களும் அடையாளங்களும் சிலரிடத்தில் மிகுந்திருக்கும். ஆண்டவனிடம் மாறாத சினேகம் கொண்டு இலக்கணமாகத் திகழ்பவர்கள். இன்னும் முயன்றால் எழுந்துவிடுவார்கள். ஏனோ சமயத்தில் பேயுறக்கம் ஆட்கொள்கிறது.
.
வலியன் குருவிகள் கீசுகீசென்றே இனிய ஒலியெழுப்பி ஒன்றோடொன்று அளவளாவுகின்றன. நமை எழுப்ப முயலுகின்றன. இடைக்குலப் பெண்களும்
மங்கல நாண் ஒலியெழுப்ப, மத்து கொண்டு தயிரைக் கடைகின்றனர்.
.
பாலைப் பதமாகத் தயிராக்கி, அதனைக் கடைந்து வெண்ணை திரண்ட பின் மீதம் இருப்பது மோர். மோர் என்பதே பரமாத்ம நிலையைக் குறிக்கும். அதுவே இறுதி நிலை. இன்னொன்றாக மாற்றமடையாத பிறவியற்ற உயர்ந்த நிலை. அதனை உணர்த்தும்படி மங்கல ஒலி எழுப்பி, உறங்கும் ஜீவனை எழுப்புகின்றனர் என்ற பொருளிலும் உணரலாம்.
.
கேசவா, நாராயணா என்று நாங்கள் பாடுகிறோமே!! கேட்டும் நீ உறங்கலாகுமா! எழுந்திரு. உன் கூட்டுக் கதவைத் திற.
//(பரமாச்சாரியார் மோர் என்ற உதாரணம் எவ்வாறு உயரிய நிலையைக் குறிக்கும் என்று விளக்கியுள்ளார்)//
.
*******
கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய்.
******

No comments:

Post a Comment