"ரோம் நகரமே தீப்பற்றி எரிந்த போது நீரோ பிடில் வாசித்த கதையா இருக்கு" சரோஜி பாட்டி சந்தடி சாக்கில் பழமொழி எடுத்து விட்டாள். பாட்டிக்கு எங்கிருந்து தான் ஸ்டாக் இருக்குமோ தெரியவில்லை. பழமொழிகளை மனப்பாடம் செய்து வைத்திருந்து, தக்க சமயத்தில் பஞ்ச் டைலாக் பேசுவாள்.
*
தேக்கு மரத்தாலான நாற்காலிகளும் மேஜைகளும், கல்யாணச் சந்தையில் இன்னும் சற்றே நேரத்தில் விற்கப்படும் கன்னியைப் போல் பளிச்சென்று மின்னிக்கொண்டு, தமை வாங்கும் எஜமானனுக்காகக் காத்திருந்தன. கன்னி என்று சொல்வது தப்பு. பல முறை உபயோகப் பட்டுக் கன்னி கழிந்த பழைய சாமான்கள். அழகை பராமரிப்பதையே முழு நேரத்தொழிலாகக் கொண்ட நடுத்தர வயது பெண்ணின் சருமத்தைப் போல், தினமும் கண்ணும் கருத்துமாய் பராமரிக்கப் பட்டதால் இன்னும் பார்க்க அழகாகவே இருந்தன.
*
வாங்கும் கண்ணோட்டத்துடன் இது வரை யாரும் வந்து நோட்டமிடவில்லை. விற்கப்படும் முன் எங்கிருந்தோ மூக்கில் வியர்த்த மாதிரி பக்கத்து வீட்டு சேஷாத்ரி என்கிற சேஷு தான் முதலில் பார்வையால் அளந்தவன்.
-
"என்ன சாம்பு விக்கற ஐடியாவா?" - சாதுவாக சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்த சாம்புவிடம் கேள்வி கேட்க, சந்தியாவந்தன மூடில் ஒரு மார்க்கமாய் தலையாட்டி வைத்த சாம்புவின் தலையாட்டலை தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டு..
"வேற யாருக்கும் விக்காதடா, என் ஒண்ணு விட்ட சித்தப்பா ஒருத்தர் சோபா செட்டெல்லாம் வாங்கணம்னு ரொம்ப நாளா சொல்லிண்டு இருக்கார். எதுக்கும் அவரை முதல்ல வந்து பாக்க சொல்றேன்"
*
"இவன் வித்துக்குடுக்க போறானா? வேலியே பயிர மேஞ்ச கதையா ஆயிடும் சாம்பு" என்று சரோஜி பாட்டி முதலிலேயே புள்ளையார் சுழி போட்டாள். "ருக்கு உங்காத்துகாரருக்கு சாமர்த்தியம் போறாதுடி" என்று சாம்புவின் தர்ம பத்தினியான ருக்குவையும் வம்புக்கு இழுத்தாள்.
-
"இந்த மாதிரி வீட்டுக்கு ஒரு கிழவியிருந்தா லோகம் உருப்டுடும்" என்று ருக்கு முணுமுணுத்தது நல்ல வேளை சரோஜி பாட்டிக்கு காதில் விழவில்லை.
*
சேஷுவின் ஒண்ணு விட்ட சித்தப்பா, அவருக்கு சம்பந்தமே இல்லாத ரெண்டு விட்ட மாமாப் பேரனுடன் சோபாவைப் பார்க்க வந்தார். பெண்பார்க்கும் படலம் போல் அதற்கு இல்லாத துடை துடைத்து, ஏற்கனவே இருந்த சோபாவின் சோபையை கூட்டினர் சாம்பு தம்பதியர்.
-
அடுத்தநாள், ரௌடி கெட்டப்பில் இருந்த ஒருவனை கூட அழைத்து வந்து, தங்களுக்குத் தெரிந்த மரக்கடை ஊழியன் என்று அறிமுகப்படுத்தி, சோபாவிற்கு பரிட்சை வைத்தனர். பூதக்கண்ணாடி வைத்து பழுதுகள் தேடினர். சந்தையில் மாட்டை விற்பதைப்
போல இருந்தது சாம்புவுக்கு.
-
"இதுக்கு மொத்தமா ஆறு ஆறதா? கொஞ்சம் ஜாஸ்தியா தோணறது சேஷு. உன் ·ப்ரெண்டுங்கற, கொஞ்சம் ஐஞ்சுக்கு கொறைச்சு குடுக்க சொல்லேன்"
-
சாம்புவுக்கு குரைப்பதுடன் இலவசமாய் கடித்துக் குதறி, அவரை வெளியே துரத்த வேண்டும் போல் ஆத்திரம் மேலிட்டது. "ஆறுக்கு கீழ கம்மி பண்ண முடியாது சார். இது ஹிமாலயன் டீக். இந்த மாதிரி கிண்ணுன்னு இப்போ வுட் கிடைகக்றதில்லை. இன்னும் ஒரு நாளில் உங்க முடிவைச் சொன்னால் எனக்கு வசதியா இருக்கும். இரண்டே நாளில் கேஷாக தரேள்ன்னா ஐநூறு ரூபாய் குறைக்க யோசிக்கறேன்"
*
ஒரு நாள் கொடுத்த கெடுவுக்கு, கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறு நாளாகியும் ஒரு தகவலும் வராததால் சாம்பு வேறு இடத்தில் ஆறரைக்கு விலை பேசினான். ரொம்ப நல்ல மேக் என்று சிலாகித்து இன்னும் இரண்டு நாட்களில் தகவல் சொல்வதாகக் கூறிச்சென்றனர். சேஷு பார்வையில் படாமல் இருந்தால் வெளியே இன்னும் நல்ல விலைக்கு போயிருக்கும். இவனின் ஒன்று விட்ட சித்தப்பாவுக்கு நான் மொய் அழ வேண்டுமா என்று எரிச்சலில் இருந்தான் சாம்பு.
*
ருக்கு வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்தாள். "சோபாவெல்லாம் யாரோ அசோக் நகர் பார்டிக்கு விக்கறதா முடிவே பண்ணிட்டேளா? சேஷு பொண்டாட்டி மைத்ரேயி ரொம்ப வருத்தத்தோட கேட்டா. அவா சித்தப்பாக்குன்னு வாக்கு குடுத்துட்டு இப்படி பண்ணிட்டேள்ன்னு குத்தி காமிச்சு பேசறா"
-
பதிலே சொல்லாமல் விட்டேத்தியாக டிவி பார்க்கும் சாம்புவின் மேல் சரோஜி பாட்டிக்கு ஆத்திரமாக வந்தது. ரோம் நகரத்து பழமொழியை உதிர்த்துவிட்டு, "சொல்லேண்டா சாம்பு, அவாளுக்கு என்ன வாக்கா குடுத்தோம்? ரெண்டு நாளுல சொல்லணம்னு பொறுப்பும் சொரணையும் அவாளுக்கு இருக்கணம்" பொரிந்து தள்ளியப்படி இருந்தாள்.
-
சாம்பு சில மணி கழித்து சேஷு விட்டு வரை சென்று வந்தான். "நாளைக்கு சேஷு சித்தப்பா சாமானெல்லாம் எடுத்துண்டு போக வருவா. ஆறு குடுக்கறதுக்கு ஒத்துண்டுட்டாளாம்"
*
"ஏண்டா அசோக் நகர் பார்ட்டி ஆறரை தரதா சொன்னியேடா அசமஞ்சம்" என்றாள் சரோஜி பாட்டி தாங்க முடியாமல்.
-
"போனாப் போகட்டம் நமக்கு வாக்கு தான் முக்கியம். ஒருத்தர் மனவருத்தி வர பணம் வேண்டாம்" என்றான் சாம்பு.
-
"குடிக்க கஞ்சியில்லாதவன் கோவணத்தையும் தானம் செஞ்ச கதையா இருக்கு. பணம் கொட்டிக் கிடக்கு பாரு" முணுமுணுத்தாள் பாட்டி
-
அசோக் நகர் பார்டி, பேரம் பேசி ஐந்துக்கு கேட்டதை கடைசி வரை யாருக்கும் சொல்லவேயில்லை சாம்பு.
***
© ஷக்திப்ரபா
ஒரே நேரத்தில் 6 பதிவுகளா?.. மலைக்க வைக்கிறீர்கள்.
ReplyDeleteவணக்கம் சார். நலமா? இதில் சில பதிவு பல வருடங்களுக்கு முன் எழுதியவை. என் முக நூலில் அவ்வப்போது ஒவ்வொன்றாகப் பதிக்கிறேன். இங்கு அதிகம் யாரும் வருவதில்லை என்பதால் ஒரே நேரத்தில் பல பதிவுகள்.
ReplyDelete