July 18, 2020

தண்டியடிகள்


தண்டியடிகள் நாயனார் | Dinamalar

திருவாரூரின் பெருமைக்கு இன்னொரு மணிமகுடம் தண்டியடிகள் பிறப்பு. பிறவியிலேயே கண்பார்வை இழந்தவர், சிவனை அகக்கண் கொண்டு தரிசித்து பூஜித்து வரலானார். சதா பஞ்சாட்சரம் ஓதி திருவாரூர் பேராலயத்தில் குடி கொண்ட தியாகராஜரை வலம் வந்து இடையறாது பக்தி செய்து வந்தார். 
.

திருவாலையத்தின் மேற்கு திசையில் குளத்தங்கரை எங்கும் சமணர்களின் ஆட்சி பெருகி வந்தது. மடங்கள் கட்டிக்கொண்டும் தமது கொள்கைகளை பரப்பிக்கொண்டும் இருந்தமையால், ஆலய திருக்குளமருகே பெருகி வரும் சமணர்கள் ஆதிக்கம் கண்டு அஞ்சி, தம்மாலான திருத்தொண்டு புரிதற்கு கமலாலய திருக்குளத்தை மேலும் தூர் வாறி, அதன் ஆழம் பரப்பளவை முன் போல் பெரிதாக்க திருவுள்ளம் கொண்டார்.
.

கண்பார்வையற்ற நாயன்மார், குளத்தின் மேட்டில் ஒரு தறி நட்டு, நடுக்குளத்தில் இன்னொரு தறி நட்டு, இரண்டையும் கயிற்றில் இணைத்து, மண்வெட்டியால் மண்ணை வாறி கயிற்றின் உதவியுடன் கூடையில் சுமந்து சுமந்து மேலேற்றி கொட்டி சீரமைக்கும் பணியினை தனியொருவராக செய்து கொண்டிருந்தார். இதனை கண்ணுற்ற சமணர்கள், மண்வெட்டியால் தோண்டுவதால் அங்கு உயிர்வாழும் சிறு உயிரினங்கள் இன்னலுக்கு உட்பட்டு இறந்து போகும் என்று அறிவுறுத்தினர். சிவத்தொண்டின் அருமை உங்களுக்கு விளங்காது என்று மறுத்துக்கூறி தண்டியடிகள் பணியை தொடர்ந்தார்.
.

மந்தபுத்தியுடன் கூடிய நீ கண்ணற்றவன், அதனுடன் காதும் கேளாமல் போனதோ என்று இடித்துரைத்து கேலி செய்தனர். மனம் வருந்திய நாயன்மார், சிவனாரின் திருவடியன்றி எதனையும் நான் காணேன். அவர் திரு நாமத்தை காதால் கேட்கிறேன். என் ஐம்பொறிகளாலும் அவரையே துதிக்கிறேன் அவர் அருளால் என் கண்கள் ஒளிமிகுந்து உங்களுக்கு கண் அற்று போனால் என்ன செய்வீர்கள் என்று வினவினார். அவ்வாறு நேர்ந்தால் தாங்கள் திருவாரூரை விட்டு அகலுவதாக உரைத்த சமணர்கள் அவரது மண்வெட்டி கயிற்றை பிடுங்கிக்கொண்டு அவர் செய்யும் தொண்டிற்கு ஊறு விளைவித்தனர். 
.

பெரும் வருத்தம் கொண்டு திருக்கோவிலை நாடி, இறைவனிடம் முறையிட்டார். இரவு கனவில் காட்சி தந்தருளிய பெருமானார், தண்டியடிகளுக்கு பார்வை அருளி, அவரது தொண்டிற்கு துணை நிற்பதாகவும் திருவாய்மொழிந்து மறைந்தார். அன்றிரவே சோழமன்னர் கனவிலும் தோன்றி, தண்டியடிகளுக்கு துணை நின்று நியாயம் வழங்குமாறு கூறி மறைந்தார். 
.

ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்ற ஆவன செய்த மன்னன், தண்டியடிகளையும் சமணர்களையும் அழைத்து நடந்ததை இருசாராரும்\ சொல்லக் கேட்டு அறிந்தார். சமணர்கள் சபதத்தில் தாங்கள் தோற்றால் ஊரை விட்டு அகலுவதாக மீண்டும் உறுதி செய்தனர். சிவபக்தரான தண்டியடிகள் பஞ்சாட்சர மந்திரம் ஓதி, திருக்குளத்தில் மூழ்கி எழுந்தார். ஒள்வீசும் கண்கள் பெற்றவராய் கோபுரத்தை வணங்கி அன்பின் பேருக்கால் கண்ணீர் மல்க இறைவனை துதித்தேற்றினார். சமணர்கள் கண்கள் இழந்தவர்களாக அரசாணையை ஏற்று அனைவரும் ஊரை விட்டு விலகினர்.
.

தண்டியடிகள் மன்னர் பேராதரவுடன், திருக்குளத்தை கட்டி முடித்து மேலும் பல தொண்டுகள் புரிந்து பல காலம் சிறப்புற்று வாழ்ந்து பொன்னார் மேனியன்
திருவடி நிழலில் நற்கதி அடைந்தார்.

.
ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment