ஓடியாடி உழைப்பவர்கள்
ஓய்ந்து ஒதுங்க
ஆடிப்பாடி அடங்காது திரிபவர்கள்
வாய்மூடி முடங்க
அடுக்களையை அண்டாதவர்களும்
அறுசுவைகூட்டி அதில்சுகம் ஈட்ட
யோசித்தும் புலப்படவில்லை...
கோளின் வினையதை
தோளில் தாங்கி
கோரநடமிட்டு கொன்று குவிக்கும்
கொரோனாவெனும் காலதூதனே!
நீ நல்லவனா கெட்டவனா
*
*
பூமித் தாயை ஏறி மிதித்து - அவள்
பூமடி முழுதும் மலம்-வாரி இறைத்து
கேவியழும் அவள் குரலை தவிர்த்து
பாவியாகி நல்மதியும் இழந்தோம்!
மாரி தொலைத்த தரிசு மண்ணில்
காடுமலையும் கட்டிடங்களாக
காணும்யாவும் பசிக்கிரையாக
கேடுகெட்ட உலகமிதற்கு
கெடுவைக்க வந்த உனக்கே
இக்கேள்வி...
நீ நல்லவனா கேட்டவனா
*
*
நாளும் நலிந்து - உடல்
மேலும் மெலிந்து
தனமும் குன்றி
மூலதனமும் இன்றி
வாடும் ஏழைகள்
வீசாத சிரிப்பில் - நாம்
நாடும் இறைவன்
நீள மௌனத்தில் கரைய....
வீதியில் இறங்கினால் - உயிர்
பாதியும் போகுமென
பதுங்கி பயந்து;
தொற்றும் வினையது - நமை
பற்றுமெனப் பதறி
காலை முதல் மாலை வரை
காணும் யாவையும் சுத்திகரிக்கும்
சீரான வாழவே மேலானதென்ற
சுடும் நிலைமையை கடும் சொற்கொண்டு
கட்டளையிடும் நீ
நல்லவனா கெட்டவனா
*
*
குடும்ப உறவுகள் நேசம் நாட,
கூடிக் களித்து பாசம் கூட,
பூமித் தாயின் வெப்பம் நீங்கி
பூகோளத்தின் மாசு மறைய;
இளமஞ்சள் பூசிய இனிய விடியலில்
பட்சிகள் கீச்சொலி புதுமெட்டுகள் கூட்ட,
அந்தி வானத்து ஆரஞ்சு ஆதவன்
ஆதங்கத்துடன் அப்புறம் அகன்றபின்
கதிரொளியைக் கடன்வாங்கி
மினுக்கும் தண்மதியிடம்
இரவின் மடியில் கிசுகிசுக்கும்
இலட்சம் நட்சத்திரங்களை
இன்று கண்டு ரசிக்கும் அவகாசம் - சற்றே
நின்று சுவாசிக்கும் நொடிநேரம்
நானும் குழம்புகிறேன்
நாடுகளையெல்லாம் சூறையாடும் நீ
நல்லவனா கெட்டவனா
***
ShakthiPrabha
No comments:
Post a Comment