(இடம்: ஏபிசி காலனி.
மங்களம் காபி ஆற்றிக் கொண்டிருக்கிறாள். சபேசன் வழக்கமாக எல்லா ஆண்களையும் போல் பேப்பரில் மூழ்கியிருக்கிறார். சுசீலா குறுக்க நெடுக்க நகத்தைக் கடித்தபடி நடை பயில்கிறாள்.)
மங்களம்: கொஞ்சம் அந்த பேப்பரை கீழ வச்சுட்டு காதை இங்க குடுக்கறீங்களா?
சபேசன்: காது என்னடி காது. உனக்குத்தான் என் மனசையே குடுத்து மாட்டிட்டு முழுக்கறேனே.
மங்களம்: புல்லரிக்குது போங்க. நான் சொல்றதைக் கொஞ்சம் கவனமா கேளுங்கன்னு சொன்னேன்.
சுசீலா: அப்பா, நானே டென்ஷன்ல இருக்கேன். உங்க ரெண்டு பேருக்கும் என்ன ரொமான்ஸ் வேண்டிகிடக்கு!
மங்களம்: இவ அடிக்கடி குறுக்க நெடுக்க நடக்கறதப் பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. பேசாம என் கஸின் பையன் குப்புவுக்கு கல்யாணம் பேசி முடிச்சுடலாம்.
சபேசன்: அதெப்படி குப்புவுக்கு கல்யாணம் ஆனா, இவ நடக்கறத நிறுத்துவா?
மங்களம்(எரிச்சலுடன்): குப்புவை இவளுக்கு பேசி முடிக்கலாம்னு சொன்னேன்.
சுசீலா: ரெண்டு பேரும் கொஞ்சம் பேசாம இருங்க. எனக்கு இருக்கற ப்ராப்ளம் பத்தாதுன்னு நீங்க வேற புதுசா சேக்காதீங்க. ரெண்டாவது எனக்கு இப்போ கல்யாணத்துக்கு அவசியம் இல்லை. பேரே சகிக்கலை. குப்பு சுப்புன்னு. கொஞ்சம் மார்டர்ன் பேரே கிடைக்கலியா.
சபேசன்: சரி வேணா பேரை மாத்திடலாம்மா. பேரா ஒரு ப்ராப்ளம். இல்லை நீயே எதானும் 'ஜிம்மி', 'டாமி' இப்படி யாரையாவது காதலிக்கறேன்னா சொல்லு.
சுசீலா: காதல் வந்தா கட்டாயம் சொல்றேன்பா. ஆனாலும் உங்க Choice of names ரொம்ப மோசம்.
('ஒரு காதல் வந்திச்சோ... ஒரு காதல் வந்திச்சோ' என்று பாடியபடி வினோத் நுழைகிறான்)
வினோத்: என்ன சண்டை இங்க. சுசீலா மறுபடி அரியர்ஸ் வெச்சுட்டாளா?
சுசீலா: டேய் உனக்கு உடம்பு முழுக்க வெறும் கொழுப்புச்சத்து தான் இருக்கு.
வினோத்: அப்பா ஹாட் ந்யூஸ் பார்த்தீங்களா? 'ரீபாக்' ஷூஸ் பாதி ரேட்டாம். 'லீ ஜீன்ஸ் ரெண்டு வாங்கினா இன்னொண்ணு ·ப்ரீயாம்.
சபேசன்(கடுப்பாக): நான் பேப்பரே படிக்கறதில்லைடா வினோத். அப்படியே படிச்சாலும் நாட்டுக்குத் தேவையில்லாத எகானமி ந்யூஸ் மட்டும் தான் படிப்பேன்.
மங்களம்: ஏங்க நம்ம 'கீதாலயம் சாரீஸ்'ல கூட தள்ளுபடியாங்க. போய் பார்க்கலாமா?
சபேசன்(தப்பி ஓடும் உத்வேகத்துடன்): இந்தக் கடைக்காரங்களுக்கு வேற வேலையில்லை. தடுக்கி விழுந்தா தள்ளுபடி. ஆடித் தள்ளுபடி, பாடி தள்ளுபடி, பொங்கல், தீபாவளி, க்ருஸ்துமஸ், இதைத் தவிர சேல்ஸ் வேற. நான் புதுசா 'லோன்' போட்டாத் தான் உண்டு.
வினோத்: அப்பா, உங்களுக்கு ஒரு பொறுப்பான புள்ள இருக்கான்றத மறந்துட்டு பேசறீங்க. உங்க கஷ்டத்துல பங்கெடுத்துக்கத் தானே நான் தினம் இரண்டு மணி நேரம் குழந்தைங்களுக்கு ட்யூஷன் சொல்லித்தந்து சம்பாதிக்கறேன்.
சபேசன்: டேய் ஓவரா கத விடாதடா. குழந்தைங்களா அதுங்க? நீ எதுக்கு ட்யூஷன் சொல்லித்தரன்னு எனக்கு தெரியாதா.
வினோத்(விரைப்புடன்): சரி... சரீ..... கொஞ்சம் வளர்ந்த கொழந்தைங்க. ஆனாலும் பைசா பைசா தானே.
சபேசன்: என்ன பெரிய பைசா, நீ வாங்கற பைசா, அந்த கொழந்தைங்களோட வளைச்சுபோட விதவிதமா ட்ரெஸ் வாங்கவே உனக்கு சரியாகிடுது.
வினோத்: சேச்சே! நான் அது மாதிரி பண்ணுவேனா? உங்க பையன்பா நானு.
மங்களம்: அதாண்டா என் கவலையே!
(சபேசன் முறைக்க மங்களம் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறாள்.)
சுசீலா: யாருக்காச்சும் நான் ஏன் டென்ஷனா நடக்கறேன்னு ஒரு கவலை இருக்கா?
வினோத்: டென்ஷனா ஏன் நடக்கற சுசீ.. வேணா உக்காந்துக்கயேன்!
சுசீலா: எப்படிம்மா இப்படி ஒரு ப்ராணியை எனக்கு அண்ணனா பெத்த..
மங்களம்(வெட்கத்துடன்): ஹி ஹி. எல்லாம் பகவான் செயல்.
வினோத்: என்ன ப்ராணின்னு சொன்ன அற்பப் பூச்சியே! வெறும நடந்துட்டே இருக்காம, அப்டியே இன்னும் டென்ஷன் டெவலப் பண்ணி, ஓடிப் போய்டேன்.
சபேசன்: சுசீம்மா என்னாச்சு, எனிதிங் ராங்.
சுசீலா(ஆவேசத்துடன்): அந்த 'பி' ப்ளாக் ரத்னா என்னை உசுப்பேத்தி விட்டுட்டாப்பா!
வினோத்: யாரு ரத்னா எனக்குத் தெரியாம? சிவப்பா கொஞ்சம் உன்னைவிட அழகா, கொழு கொழுன்னு 'மீரா ஜாஸ்மின்' மாதிரி சிரிப்பாளே அவளா? நல்ல பிள்ளையாச்சே அது.
சுசீலா: அவளே தான். இந்த முறை நம்ம ஃபளாட் தீபாவளி நிகழ்ச்சியில் 'ஏ' ப்ளாக் தனியா 'பி' ப்ளாக் தனியா வேற வேற நாளில் ப்ரொக்ராம் தரணமாம். அவங்க இல்லாம நாம என்ன ப்ராமாதமா கிழிக்கப் போறோம்ன்னு திமிரா பேசறா. நம்ம ப்ளாக் நாங்க சில ஃப்ரெண்ட்ஸ் பல்சுவை நிகழ்ச்சிக்கு ப்ராக்டிஸ் செய்யணும்.
வினோத்: என்னிக்கின்னு சொல்லு சுசீ.... நான் ஊர்ல இல்லாம கழண்டுக்கறேன்.
சுசீலா: நீ என்ன வேணா பண்ணு. ஆனா ஒண்ணே ஒண்ணு புரிஞ்சுக்கோ!
வினோத்: என்ன?
சுசீலா: அந்த ரத்னா ஒண்ணும் என்னை விட அழகு இல்லை!
(எரிச்சலுடன் சுசீலா எழுந்து செல்ல, வினோத் இளிக்கிறான்)
(தொடரும்)
No comments:
Post a Comment