Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

March 18, 2018

ஒரு காதல் வந்துச்சோ ( நாடகம் - பகுதி 7)




காட்சி 9

இடம்: கதிர் வீடு

நேரம்: மாலை 5 மணி 58 நிமிடங்கள்

(சுசீலா வருகிறாள்.)

கதிர்: ஹாய்! ஷார்ப்பா வந்திட்டயே. வா வா

சுசீலா: ஹாய் கதிர். வர சொல்லிருந்தன்னு விஜி சொல்லித் தெரியும்? என் நம்பர் என்னாச்சு? எனக்கேன் கால் பண்ணல?

கதிர்: வெயிட் வெயிர்....இவ்ளோ கேள்விகள் கேட்டா...கன்ஃப்யூஸ் ஆகிடுவேன்....
முக்கியமான விஷயமாத்தான் வர சொன்னேன். என் ரூம்ல உனக்காக யாரோ வெய்ட் பண்றாங்க. நீ போய் பேசிட்டு இரு. நான் அப்புறம் வரேன்.

(சுசீலா உள்ளே நுழைகிறாள். அங்கே நவீன் ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருக்கிறான் )

[ சுசீலாவின் வயிற்றில் பட்டாம்பூச்சி தவிர வேறு பூச்சிகளும் கலவையாய் பறந்து ஒன்றோடொன்று மோதிக்கொண்டது ]

சுசீலா: ஹல்லோ நவீன்! என்ன இந்த பக்கம்?

நவீன்: சும்மா கதிர பார்த்துட்டு போலாம்ன்னு தான், அப்டீன்னு சொன்னா நீ நம்ப போறதில்ல....உன்னை நான்தான் கூப்பிட்டேன்னு உனக்கே தெரியும். சோ, உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்.

[ சுசீலாவுக்கு என்ன பேசுவது என்றே தெரியாமல், மேலே பார்த்து, பக்கவாட்டில் பார்த்து, இறுதியாக சுவற்றில் பார்வையைப் பதிக்கிறாள் ]

நவீன் : உனக்கே தெரியும்.. என்னோடது ·பைனல் இயர் எம்.டெக்.
காம்பஸ் இன்டர்வ்யூலையே செலெட் ஆகிருக்கேன். அதனால எனக்கு 'xyz' கம்பனில வேலை கிடைச்சிருச்சு.

சுசீலா: வாவ்.....கங்க்ராஜுலேஷன்ஸ்....இது எதிர்பார்த்தது தானே.... வாட் நேக்ஸ்ட்?
நவீன்: இன்னும் ரெண்டு மூணு மாதத்தில எனக்கு ட்ரெய்னிங்க். பரோடா போக வேண்டி வரும்.

( நவீன் தொண்டையை செறுமிக் கொள்கிறான், அது எசகுபிசகாகி தொண்டை கட்டிக்கொண்டது போல் கீச்சென்று ஒலிக்கிறது )

சுசீலா: கிரேட்.......ஓ அதான் பிஸியா? சில நாளாக ஃபோன் மேஸ்ஸேஜ் எதும் காணமே

நவீன்(கனைத்தபடி): அதெல்லாம் ஒண்ணும் இல்லை.... ட்ரைய்னிங் முடிஞ்சு பெர்மனென்ட் ஆக்கிடாங்கன்னா லைஃப்ல செட்டில் ஆகிடுவேன்

சுசீலா: ஆஹா!....அப்ப இனிமே என்னையெல்லாம் மறந்து பொய்டுவ...இதான் நீ சொன்ன சர்ப்ரைஸா?

நவீன்: ஹ்ம்ம்.....ஆமாம்..... அப்புறம் நீ என்ன பண்ணப் போற

சுசீலா:  இனிமேத்தான் யோசிக்கணும். ஒண்ணும் பெரிய ப்ளான் இல்ல, கண்டிப்பா மேல படிக்கறதா இல்ல.  மே பீ சின்னதா "all purpose boutique" வெக்கலாமானு ஐடியா.

( நவீன் கிட்டதட்ட சாயம் போன கலருக்கு வெளிறி வார்த்தையைத் துப்புகிறான். )

நவீன்: நீ என்னோட வர ரெடின்னா நானே போடீக் வெக்க ஹெல்ப் பண்ணுவேன்

சுசீலா: எங்க வரணம்? மாம்பலமா? அண்ணா நகரா? அங்க தான் இதுக்கு மெட்டீரியல்ஸ் சீப் ரேட்-ல பிக் பண்ணலாம். முதல்ல எக்ஸாம் முடியட்டும்.

நவீன்: நான் அத சொல்லல

சுசீலா: பின்ன?

நவீன்: ooph You are not helping me....not helping me at all.

[ சுசீலா பொங்கி வரும் புன்னகையை மறைக்க உதட்டை இறுக்க குவிக்கிறாள்.
முகம் அஷ்ட கொணலாகி விட்டதோ என்ற பயத்தில் வேறு புறம் திரும்புகிறாள். ]

[ நவீன் அசடு வழிந்தபடி சடாரென ஒற்றைக் காலில் முட்டி போடுகிறான் ]

[ திடீரென அவன் கீழே விழுந்து விட்டான் என்று நினைத்து முதலில் சுசீலா பதறுகிறாள். பிறகு அவள் முகம் அன்றைக்கு அரைத்த தக்காளிச் சட்டினி போல் சிவக்கிறது. ]

[ நவீன் பூங்கொத்து ஒன்றை நீட்டுகிறான். ]





சுசீலா: என்னது

நவீன்: பூ!

சுசீலா: அது தெரியுது. எனக்கு பிறந்த நாள் கூட இல்லையே ...அப்றம் எதுக்குன்னு கேட்டேன்.

நவீன்: தெளிவா இருக்கனும் சுசீ. இது என்னதுன்னா, அதான் பூன்னு சொன்னேன்.

சுசீலா: This is not getting anywhere.... எனக்கு வீட்டுக்கு போகணம். இப்ப எதுக்கு பூ, டக்குனு சொல்லிடு பார்போம்.

நவீன்: இந்த... இந்தப் பூ பிடிச்சிருக்கா?

சுசீலா: ஏன்? நீ தான் ரோஜாசெடியவே நட்டியா?

நவீன்(கோவமாக): நீ என்னை ரொம்ப டீஸ் பண்ற.

சுசீலா: எனக்கு எப்பவுமே ரோஜா ரொம்ப புடிக்கும்.....பூவெல்லாம் ஒக்கே தான். ஆனா ரொம்ப உதிர்ந்து போயிருச்சு

நவீன்: பயத்துல இருக்கமா பிடிச்சேனா... அதான் உதிர்ந்திருச்சு.

சுசீலா: பயமா? எதுக்கு?..... இன்னும் நீ எதுக்கு பூன்னு சொல்லல...

( நவீனுக்கு campus interview இதை விட எளிமையாக இருந்ததாக தோன்றுகிறது)

நவீன்: அந்த குப்புவுக்கு சரின்னு சொல்லிட்டியா?

சுசீலா: குப்புவா?? யாரது

நவீன்: உன்னோட ஃபியான்ஸ்னு சொன்னியே

சுசீலா: அப்படியெல்லாம் எனக்கு யாரும் இல்ல...நான் சும்மா வம்புக்கு சொன்னேன்.

( நவீன் மனதில் அக்கால காதல் மன்னர்கள் வரை இக்கால புதிய ரோமியோக்கள் வரை எல்லோரும் ஆசீர்வதித்து தெம்பு வழங்கினார்கள் )

சுசீலா (அழ மாட்டாத குறையாய்) : இப்பவானும் சொல்லிடு.... பூ எதுக்கு?

( காலையிலிருந்து பத்து படங்களில் வரும் காதல் காட்சிகளையும் வரிகளையும் மனப்பாடம் செய்து வைத்திருந்தான். இருந்தாலும் எல்லாம் மறந்து விட்டிருந்தது )

நவீன்: எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு....உனக்கு என்னை பிடிக்குமா?

(சுசீலா கண்ணை மூடிக்கொண்டு தலையை மேலும் கீழும் ஆட்டுகிறாள்)

நவீன்: I have fallen in love with you. Will you marry me?

சுசீலா(வீரக் குரலில்): தமிழ்ல கேட்டாத்தான் என்ன!

நவீன்: அம்மாடி தல விரிச்சு போட்டு ஜீன்ஸ் போட்டிருக்குற மரத்தமிழச்சியே.....பதில சொல்லு.

சுசீலா (மறுபடியும் கண்ணை மூடிக்கொள்கிறாள்) : எனக்கும் சம்மதம். ஆனாலும் ரொம்ப ட்ராமாட்டிகா ப்ரொபோஸ் பண்ற.

( இருவர் மனதிலும் காதல் தேவதைகள் என்று சொல்லிக்கொண்டு சில பேர், தப்பு தப்பாய் ஸ்டெப் போட்டு டான்ஸ் ஆடினார்கள் )

நவீன்: குப்புனு ஒரு வில்லன் இருக்குறதா நினைச்சிடு இருந்தேனா. நீ என்ன ரிஜெக்ட் பண்ணிடுவியோனு பதட்டம்.

சுசீலா: வில்லன் நமக்கு நாமே தான். சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய நேரத்துல சொல்லாமயே விட்டுட்டா,  அப்புறம் அது சொல்லாமையே நம்ம விட்டு போயிடும்

நவீன்(கோவத்துடன்): நீ தானே குப்புன்னு உளறிட்டு போன...எதுல விளையாட்டுன்னு அறிவே இல்லையா?

சுசீலா: ரெண்டு மாசம் முன்ன உன்ன பார்த்தனே அப்பவே அறிவு டாட்டா சொல்லிடிச்சு.
நவீன்: அப்ப குப்புன்னு யாருமே இல்லயா?

சுசீலா: இருக்கானே...என் அத்த பையன்...இந்த பிரச்சனையெல்லாம் வரக்கூடாதுன்னு சில வருஷம் முன்னமே அவனுக்கு ராக்கி கட்டிட்டேன்.

சுசீலா: அடேங்கப்பா! கடைஞ்சு எடுத்த கெட்டிக்காரியா இருக்கியே .

[ சுசீலா வெட்கப்படுகிறாள் ]

நவீன்: நீ..ஏன் அடிக்கடி கண்ணை மூடிக்குற? நான் என்ன அவ்வளவு மோசமாகவா இருக்கேன்?

சுசீலா: உன் பேரன்ட்ஸ் கிட்ட சொல்லி, அவங்களொட வீட்டுக்கு வந்து என் அம்மா அப்பா கிட்ட பேசணும். ஓகேவா?

நவீன்: அதெல்லாம் ஓகே தான். ஆனா உன்னை பொண்ணு பார்த்தும் திடுமின்னு, "எனக்கு கல்யாணம் வேண்டாம்" னு சொல்ல கஷ்டமா இருக்கு..

[ சுசீலா கேள்வியுடன் பார்க்கிறாள் ]

நவீன்: அதாவது....."உன் படிப்பு முடியற வரை.."

சுசீலா: சே! கேவலமான இடத்துல ஒரு pause...ஆனாலும் ரொம்ப டிவி சீரியல் பார்த்து கெட்டுப் போயிருக்க நீ.

நவீன்: எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா....அவ கிட்ட நீ ரொம்ப அழகா இருப்பனு பொய் வேற சொல்லிருக்கேன். அது வேற கவலையா இருக்கு.

[ சுசீலா முறைக்கிறாள் ]

நவீன்: சரீஈ..... இவ்ளோ ஸ்வீட் ப்ரபோசல்க்கு ஸ்பெஷலா ஒண்ணும் கிடையாதா?

சுசீலா: ஸ்பெஷல் தானே.....ராத்திரி மேக்கப் எல்லாம் கலைச்சிட்டு ஒரிஜினல் ஃபோட்டோ அனுப்பறேன்

(நவீன் அலறுகிறான்......

சுசீலா அவன் மூக்கை வலிக்கும்படி திருகிவிட்டு வீட்டுக்கு செல்கிறாள்)

( உடனே கதிர் உள்ளே நுழைகிறான்)

கதிர்: என்னடா...அவளுக்கு முகம் சிவக்கும்னு நினைச்சா, கடைசீயில உனக்கு மூக்கு சிவந்திருக்கு?

நவீன்: அடப்பாவி! உடனே வந்திட்டியே....இங்க தான் இருந்து ஒட்டுக் கேட்டியா?

கதிர்(கோபத்துடன்) : சீச்சி. அந்தப் பழக்கமெல்லாம் எனக்கில்ல. கதவை முழுக்க திறந்து வெச்சு, ஓபனாவே கேட்டேன்.

(அடுத்த பகுதியில் முடியும்)

ஒரு காதல் வந்துச்சோ (நாடகம் - பகுதி 6)



காட்சி 7

( இரண்டு மாதங்களுக்குப் பிறகு)

( விஜியும் சுசீலாவும் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கிறார்கள்.)

விஜி: சுசீ... சுசீலாஆ........

(சுசீலா காதில் வாங்கவில்லை, ஏதோ சிந்தனையில் இருக்கிறாள்)

விஜி: சுசீஈஈ.....என்ன ஆச்சு உனக்கு. எனிதிங் ராங்க். ரொம்ப டல்லா இருக்க.

சுசீலா: ஒண்ணும் இல்லையே . தூக்கம் கம்மி, எக்ஸாம் வருதில்ல.

விஜி: காலையில கதிர் கால் பண்ணினான்.

சுசீலா: இவ்ளோ காலையில அவன் ஏன் உனக்கு கால் பண்றான்?

விஜி: உன்னை அவன் வீட்டுக்கு வர சொன்னான்

சுசீலா: என் நம்பர் அவன் கிட்ட இருக்கே..... நீ என்ன நடுவில? எத்தனை 
மணிக்கு வர சொன்னான்?

விஜி: இடியட்! சொல்றத மட்டும் கேளு. ஈவினிங்க் ஆறு மணி.

சுசீலா: ஓஹோ என்ன விஷயம்?

விஜி: எனக்கென்ன தெரியும். நீயே போய் பாரு.

(விழி பிதிங்கிக் கொண்டு, நிறை மாத கர்பிணியைப் போல பேருந்து வந்து 
மூச்சிரைத்து நிற்கிறது. விஜி, சுசீலா உட்பட மேலும் பத்து பேர் கசங்கிக் கொண்டு 
ஏறிய பின், அலுப்புடன் நகர்கிறது)


காட்சி 8

(இடம்: ஏபிசி காலனி. சுசீலா வீடு.
நேரம்: மாலை 4.30

[ சுசீலா புத்தகம் படிப்பதாக டபாய்த்துக் கொண்டிருக்கிறாள்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அன்று ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. 
"உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு" இப்படிக்கு - நவீன்


அவ்வபோது செல் ஃபோனை முறைத்து பார்ப்பதும்,
தனக்குள் முணுமுணுப்பதுமாக இருக்கிறாள். ]


(கொஞ்சம் நாட்களாகவே சுசீ ஃபோனைப் பார்த்து சிரிப்பதும்,
திடீரென உம்மென்று முகத்தை தூக்கி வைத்துக் கொள்வதும் நெருடலாகவே இருக்க 
மங்களம் கவலையாகிறாள். )


(சபேசன் நுழைகிறார்)

சபேசன்: என்னடா இன்னிக்கு சீக்கிரம் வந்துட்ட?

மங்களம்: அதைத்தான் நானும் யோசிச்சிட்டிருக்கேன். சுசீ ரெண்டு நாளாகவே ரொம்ப 
டல்லாக இருக்கியே

சுசீலா: ஆமாம்ப்பா கடைசி கிளாஸ் இல்லை.

வினோத்: கட் அடிச்சுட்டு வந்திருப்பா. ஹி ஹி'

சுசீலா: நான் உன்ன மாதிரியா!

மங்களம்: என்ன சுசீ. ஏன் டல்லா இருக்க?

சுசீலா: இல்லைம்மா டையர்ட்னஸ். எக்ஸாம்னா சும்மாவா? படிக்க வேணாம்?

வினோத்: நான் ஒரு சூப்பர் ஐடியா சொல்றேன். நைசா ரோல் நம்பர மாத்தி எழுதிக் 
குடுத்துடு.  ரிசல்ட் வரும் போது, 'நான் எழுதினேனே, எப்படி என் ரிசல்ட் வர்லைன்னு 
சொல்லி தப்பிச்சுகலாம்'


சபேசன்: எப்படிடா இப்படி க்ரிமினல் புத்தி ஓடுது உனக்கு?

வினோத்: உங்க பையனாச்சேப்பா!

மங்களம்: ஏங்க, நீங்களும் இப்படி தில்லுமுல்லு பண்ணிதான் இஞ்சினியரானீங்களா?

சபேசன்: வர வர யாருக்கும் மரியாதையில்லாம போச்சு.

சுசீலா: எல்லாரும் என்ன நிம்மதியா தனியா இருக்க விடுங்க ரொம்ப போர் 
அடிச்சா டி.வி பாருங்க. இன்னிக்கு வினோத் கலந்துக்கற ப்ரோக்ராம் இருக்கு. 

மங்களம்(அதிர்ச்சியுடன்): என்னது? எந்த சானல்?


சுசீலா(அலட்சியமாய்): நேஷனல் ஜியாக்ரபிக்.

சபேசன்(சிரித்தபடி ): தன் வினை தன்னைச் சுடும்.

வினோத்: ராட்சசி, உனக்கு போய் ஐடியா குடுத்தேன் பாரு. நல்லா கஷ்டப்பட்டு 
படிச்சு... ஃபெயிலாகு.

சுசீலா: பெரீஈஈய முனிவரு... சாபம் குடுக்கறாரு. சரிதான் போடா.

மங்களம்: இன்னிக்கு பஜ்ஜி, சொஜ்ஜி செஞ்சிருக்கேன். எல்லாரும் சாப்பிட்டு அப்புறமா
சண்டை போடுங்க. குப்புவத்தான் வர விடாம செஞ்சுட்டீங்க. நாமளானும் பஜ்ஜி 
சொஜ்ஜி திங்கலாம்.


சபேசன்(கிண்டலாக): பஜ்ஜி சொஜ்ஜிக்காக குப்பு வரணமா? நாங்களே சாப்டுடறோம்.
வினோத்: ஆமா அது என்ன பஜ்ஜி செஞ்சா சொஜ்ஜியும் சேர்த்து செய்யணமா? 
கேசரி செஞ்சா என்ன?

சுசீலா: லூசு! கேசரிக்கு பேரு தான் சொஜ்ஜி.

மங்களம்: அதாவது பஜ்ஜி செஞ்சா, அது கூட எது வேணா செய்யலாம். 
சொஜ்ஜி தான் செய்யணம்னு இல்லை.

வினோத்: பின்ன எதுக்கு?

மங்களம்: எல்லாம் ஒரு ரைமிங்க்காக தான்.

சபேசன்: சவுண்ட் எஃபெக்ட் டா

(எல்லோரும் பஜ்ஜி சாப்பிடச் செல்கிறார்கள்)

(தொடரும்) 

March 17, 2018

ஒரு காதல் வந்துச்சோ ( நாடகம் - பகுதி 5 )




(சலசலத்து ஓய்ந்த மழை போல் கூட்டம் கலைந்து கொண்டிருந்தது.
வினோத் சுசீலாவின் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தப் படுகிறான்.)

சுசீலா: வினோத், மீட் நவீன் காலேஜ் மேட்ஸ்.

வினோத்: அது சரி.. நவீன் யாரு?

சுசீலா(அசடு வழிந்தபடி): ஐ மெண்ட் கதிர் காலேஜ் மேட்ஸ்.

(இதை நவீன் கவனித்து விட, ஜீரோ வாட்ஸ் பல்பாய் தொங்கியிருந்த அவன் முகம், ஆயிரம் வாட் பல்பாய் ப்ரகாசிக்கிறது.)

வினோத்: எல்லாருக்கும் பாராட்டுக்கள். நிகழ்ச்சிகளும் ரொம்ப அருமையா இருந்தது.

தாமரை: தாங்க்ஸ் வினோத். நீங்க என்ன பண்றீங்க?

வினோத்: பீ.ஈ முடிச்சிட்டு, 'டி.ஈ.' கம்பனில வேலை பண்றேன். ஸ்டைன்லஸ் ஸ்டீல் ராட்ஸ் தயாரிக்கறோம். கேள்விப்பட்டிருப்பீங்களே, கம்பனி பத்தி..

தாமரை: இல்லையே!

வினோத்(கனைத்தபடி): அது தவிர, ட்யூஷன் சொல்லித் தரேன். மாத்ஸ் ட்யூஷன். நீங்க கூட வேணுனா ஜாயின் பண்ணிக்கலாம்.

தாமரை(சிரிப்பை மறைத்தபடி): இல்லை தாங்க்ஸ். நான் பி.ஏ லிட்டரேச்சர் பண்றேன்.

வினோத்: அதுல கூட சந்தேகம்னா வரலாமே. குறிப்பா ஷேக்ஸ்பியரோட plays பத்தி எதாச்சும் டவுட்டுன்னா...

(ரத்னா வருகிறாள்)

ரத்னா: நானும் லிட்டரேச்சர் தான். எனக்கு ட்யூஷன் உண்டா?

வினோத்(உற்சாகத்துடன்): ஓ கட்டாயமா. உங்களுக்கு இல்லாமையா?

சுசீலா(காதருகில்): ரொம்ப வழியாதடா. தொடச்சிக்க.

ரத்னா: ப்ரோக்ராம்ஸ் ரொம்ப நல்லா இருந்திச்சு...உங்களையெல்லாம்
பாராட்டிட்டு போலாம்னு வந்தேன்.

விஜி: தாங்க் யூ ரத்னா. நீங்க எல்லாரும் அமைதியா கோ-ஓபரேட் பண்ணுவீங்கன்னு
நாங்களே நினைக்கலை.

ரத்னா: நான் ஒரு சஜெஷன் குடுக்கலாம்னு இருந்தேன். அடுத்த வருடத்திலெருந்து எல்லாரும் சேர்ந்தே செய்யலாம். எல்லார் கிட்டையும் திறமை இருக்கு, நேரத்தை அதிகமாக்கி ரெண்டு மணி நேர வெரைட்டி எண்டர்டைன்மென்ட் பண்ணலாம். என்ன சொல்றீங்க?

கதிர்: கண்டிப்பா.

(ரத்னா பொதுவாய் புன்னகைத்து விடை பெறுகிறாள்.)

வினோத்: அடுத்த வருடம் ட்ராமா போட்டா, நான் துஷ்யந்தன்... ரத்னாவை சகுந்தலாவா நடிக்கச் சொல்லலாமா? இந்தக் காம்பினேஷன் ரொம்ப வர்க் ஒவுட் ஆகுது.

நவீன்: ரத்னா சகுந்தலான்னா, நான் கூட மறுபடியும் துஷ்யந்தனாக நடிக்கத் தயார்.

( உப்பிய பூரி போல் மலர்ந்திருந்த சுசீலா முகம் லேசாய் சுருங்குகிறது.)

வினோத்: சரி நான் அப்ப கிளம்பறேன். சுசீ நீயும் சுருக்க வந்திடு.

சுசீலா: நீங்க எல்லாரும் இல்லைன்னா இது சக்ஸஸ் ஆகிருக்காது. ரொம்ப நன்றி...ok folks... நேரமாகுது கிளம்பறேன்  குப்பு வேற ·போன் பண்ணுவான்.

நவீன்: யாரு குப்பு?

சுசீலா(அலட்சியமாக): என்னோட ஃபியான்ஸ்!

(எல்லோரும் அடுத்தடுத்து கிளம்புகிறார்கள்.)

கதிர் (நவீனிடம்): நான் உன்னை ட்ராப் பண்ணவா?

நவீன்: நோ ப்ராப்ளம். I will take a cab. வெரி எஞ்சாயபிள் டைம். ஆனா இன்னொரு முறை நாடகம்ன்னா என்னைக் கூப்டாத. விக் ஒட்டி எடுக்குறதே பெரும்பாடா போச்சு. (நெஞ்சை நிமிர்த்தியபடி) ஒண்ணு வாடகைக் கடைய மாத்து, இல்லை என்னை மாதிரி கலைஞனை இழக்க வேண்டிவரும்.

கதிர்: இவன் பெரிய சிவாஜி. போடா! இந்த நவீன் இல்லைன்னா ஒரு 'பவீன்' நடிச்சுட்டு போறான்.

நவீன்: செ! நன்றிகெட்ட உலகம். காலைல சூரிய நமஸ்காரம் மாதிரி பண்ணி கால்ல கூட விழுந்த!

('யாரை நம்பி நான் பொறந்தேன்' என்று பாடத் துவங்குகிறான்.)

( கதிர் காதை இறுக்க பொத்திக் கொள்கிறான்)

March 16, 2018

ஒரு காதல் வந்துச்சோ ( நாடகம் - பகுதி 3 )



காட்சி 4


இடம் 'ஏ' ப்ளாக் கம்யூனிடி ஹால். 


(அடுத்த இரு வாரங்கள் தீவிர ஒத்திகை.)

சுசீலா : இன்டெராக்டிவ் கேமுக்கு ஐடியா குடுங்க

விஜி: பார்வையாளர்கள குலுக்கல் முறையில கூப்பிட்டு, மேட் ஃபார் ஈச் அதர் வெக்கலாம்.

நவீன்(சிரித்துக்கொண்டு): ஹா.... அது ரொம்ப ரிஸ்க்கான விஷயம்

விஜி: அங்க இருகற தம்பதிகள சொன்னேன். அய்ய... ரொம்ப ஜோக் அடிச்சதா நினைப்பு.

குமார்: டேய் நவீன் அடங்கவே மாட்டியா நீ...அதெல்லாம் போர் விஜி. வேற ஏதாச்சும்....

கதிர்: பிரபலங்கள் பேரை குலுக்கி போட்டு, யார் பேரு வருதோ,  அவங்களைப் பத்தி ஒரு participant பேசணும். அதை வச்சு மத்தவங்க அது யாருன்னு கண்டு புடிக்கணம்.

சுசீலா: wow, தட் சௌண்ட்ஸ் குட் கதிர்.

நவீன்: இது எங்க பாட்டி காலத்துல விளையாடுவாங்களாம்

கதிர்: எல்லாம் அப்டிதான்....பழைய மோர்களிய கிண்டி மேல கொத்தமல்லி தழை தூவி, இந்தப்பாரு எங்கூரு Dholka னு சொல்றது தான் இப்ப ட்ரெண்டு.

விஜி: ட்ராமா ரிஹெர்ஸல் எந்த அளவுல இருக்கு...அது ஒரு டைம் ப்ராக்டீஸ் பாத்துடலாம்.

நவின்(கடுப்புடன்): ரிஹர்சல் இருகட்டும். இந்த காஸ்ட்யூம் எங்க வாங்கறீங்க. 'விக்' எல்லாம் அரதப் பழசா இருக்கு. சகிக்கல. நானே ஷாம்பூ போட்டு, அலசிக் குடுத்துட போறேன்.


சுசீலா: ஆ...மா இங்க லோகல் ட்ராமாவுக்கு பக்கத்து கடை காஸ்ட்யூம் போதும். இதுக்காக ஏ.வி.எம் போக முடியுமா? எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணுங்க

குமார்: பாத்துடா பாதி டிராமால தும்மித் தொலைக்காத.


(ஒத்திகையில் மூழ்குகிறார்கள்..)



காட்சி 5

நேரம் எழு மணி. இடம்: ஏபிசி காலனி.

[ ஊரெங்கும் தீபாவளி ஜகஜோதியாய் ஜொலித்துக்கொண்டிருக்கிறது. நடுநாயகமாய் ஒரு ஷாமினா போட்டு, அதன் அருகில் சுமார்  முன்னூறு முதல் ஐநூறு தலைகள்  நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள். ஒப்பனை அறை' என்ற பெயரில் ஒரு சின்ன தடுப்பு]

[ தடுப்புக்கு பின், குறுக்கும் நெடுக்குமாக கதிர், எள்ளும் கொள்ளும் வெடிக்க கோவமாக நடந்து கொண்டிருந்தான். ]

கதிர்: ஏய் நவீன், வாடா. என்ன பண்ணிட்டுருக்க? நேரம் ஆகுதுன்னு ஜனங்க கூச்சல் போடறாங்க பாரு.

நவீன்: மீசை ஒட்ட மாட்டேங்குது, அந்த பாழாப்போன தடித்தாண்டவராயன் கடையில வாங்க வேணாம்னு சொன்னா யாரு கேட்டீங்க. இப்போ பாரு, ஒட்ட மாட்டேங்குது.


கதிர்: தடித்தாண்டவராயன் கடையா? நான் 'ரமணி & கோ'ன்னு இல்லை நினைச்சிட்டு இருக்கேன்.

நவீன்: இப்படி டைமிங்க் இல்லாம மொக்க போட்டா, அப்புறம் நீயாச்சு உன் நாடகமாச்சுன்னு விட்டுட்டுப் போய்டுவேன்.

(நவீன் முன்னால் தடாலென விழுந்து காலையில் தப்பும் தவறுமாக செய்த சூரிய நமஸ்காரத்தை செய்கிறான்)

கதிர்: நவீன், நான் கப்னு வாய பொத்திக்கறேன், மீசையை ஒட்டிட்டு சட்டுபுட்டுன்னு வந்துடு.

[ திரை விலக, அவசரத்துக்கு கிடைத்த ஃபெவிகுவிக்-ல் மீசையை ஒட்டிக் கொண்டு துஷ்யந்தன் மேடையில் குதிக்கிறான். ]

நவீன்: சகுந்தலா என்னை உன்னிடம் கட்டிப்போடும் இந்தக் கருநீண்ட கூந்தலின் ரகசியம் என்ன? [ கூந்தலை மெதுவாய் தொடுகிறான் ]

[ அவள் நகர எத்தனிக்க, கருநீள சவுரி துஷ்யந்தன் அணிந்திருந்த வங்கியில் மாட்டிக்கொள்கிறது.  அவிழ்ந்து விடுமோ என்ற பயத்தில் சகுந்தலா அப்படியே நிற்க, துஷ்யந்தன் சமாளிக்கிறான். ]


சுசீலா(ரகசியமாய்): இப்போதிக்கு கட்டிப்போட்டிருக்கும் ரகசியம், வங்கில 'சவுரி முடி

(இரண்டு பேரும் வசனம் பேசிக்கொண்டே மேடையை விட்டு தத்தித் தத்தி குதித்தோடி விடுகிறார்கள் )

(பார்வையாளர் வரிசையில் சபேசன்-மங்களம் முகத்தில் ஈயாடவில்லை.)

சபேசன்: நம்ம பொண்ணு பரவாயில்லை நல்லா நடிக்கறா.

மங்களம்(வருத்ததுடன்): ஏங்க...யாருங்க துஷ்யந்தனா நடிக்கறது? எங்க அண்ணனோ, அவன் மகன் குப்புவோ இதப் பார்த்திட்டா கல்யாணத்துக்கு சம்மதிக்கவே மாட்டாங்க.


சபேசன்: அட பைத்தியமே. அதான் அவளே குப்பு பப்புவெல்லாம் வேணாம்னு சொல்லிட்டளே. ஆனாலும் என் பொண்ணு  அதிபுத்திசாலி, உங்க வீட்டு சொந்தம்ன்னு சொன்னவுடன் வேணாம்னுட்டா பாரு.


[ மங்களத்தின் முகம், ஏடாகூடமாக கேள்வி கேட்ட டி.வி தொகுப்பாளரிடம் மாட்டிக்கொண்ட இதயத்தெய்வம் அம்மாவைப் போல் கோபத்தில் சீறுகிறது ]


மங்களம்: உங்க அக்கா பையன், பாச்சாவுக்கு இது தேவலை. என்ன பேரோ, பாச்சா தோச்சானிட்டு.

வினோத்: அடடா! உங்க சண்டையை வீட்ல வந்து வெச்சுக்கோங்க. இங்க வந்து நொயி நொயின்னு. எனக்கு வசனமே காதுல விழல.

சபேசன்: எனக்கு சுசீய சகுந்தலாவா பார்த்த பிறகு காதே பஞ்சடைச்சு போச்சு, வசனம் காதுல விழவே இல்லடா

( பாகம் 3 முற்றிற்று)

March 12, 2018

ஒரு காதல் வந்துச்சோ ( நாடகம் - பகுதி 2)




காட்சி 2

(சுசீலாவும் விஜியும் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கின்றனர்.)

விஜி: சுசீ, உன்ன எங்கெல்லாம் தேடுறது? கதிர் காலைல கால் பண்ணான். அவனோட இன்னும் நாலு பேர் தயாரா இருக்காங்க, ட்ராமா, கலை நிகழ்ச்சிகளில நடிச்சு பழக்கமாம். அதனால பின்னிடுவாங்களாம்.

சுசீலா: ஜனங்க நம்மள பின்னாம இருந்தா சரி. ரத்னாக்கு கொழுப்பு அதிகம்! போன காலனி ப்ரொக்ராம்ல அவங்கெல்லாம் ரொம்ப அற்புதமா கிழிச்சிட்டாங்களாம், நம்ம டான்ஸ் ரொம்ப சுமார்னு பேசிட்டா

விஜி: இந்த முறை நாம ப்ரூவ் பண்ணி காமிக்கணம்.

சுசீலா: கதிரையும் அவன் க்ரூபையும், நம்ம ப்ளாக் கீழ இருக்கற கம்யூனிடி ஹாலுக்கு ஈவினிங் வர சொல்லிடு. நான் சில ப்ளான் வெச்சிருக்கேன்.

விஜி: ஒகே, சீயூ, பை.


காட்சி 3


(இடம்: ஏபிசி காலினி கம்யூனிடி ஹால்.


விஜி, கதிர் தவிர, கதிரின் நண்பர்களான குமார், தாமரை, நவீன் ஆகியோர். சுசீலா நுழைகிறாள்)

கதிர்: ஹாய் சுசீலா, எங்களை முதல்ல வரச் சொல்லிட்டு நீ லேட்டா வந்தா எப்படி?

சுசீலா: ஹி ஹி...சாரி. அம்மா அப்பா வெளிய போயிருக்காங்க, அதான் வீட்ல கொஞ்சம் வேல

விஜி: நான் கல்சரல் கமிட்டி கிட்ட கதிர் ஃப்ரெண்ட்ஸுக்கு பர்மிஷன் வாங்கிட்டேன். பை த வே, மீட் குமார், தாமரை அண்ட் நவீன்.

(கை குலுக்குகிறார்கள்)

சுசீலா: சாரி ரொம்ப வெயிட் பண்ண வெச்சுட்டேன். நமக்கு குடுத்திருக்கற டைம் ஒரு மணி நேரம். அதை இப்படி பிரிச்சிருக்கேன்.

(ஒரு காகிதம் எடுத்து விளக்குகிறாள்.)

^^^^^^^^^^^^^^^

20 நிமிஷம் = நாடகம்
7 நிமிஷம் = குட்டிப்பசங்க டான்ஸ்
15 நிமிடம் = இன்டெராக்டிவ் கேம்
5 நிமிடம் = இடையிடையே தீபாவளி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
8 நிமிஷம் = மிஸ்ஸெல்லேனியஸ், அதாவது
நன்றியுரை, துவக்க உரை, எல்லாத்துக்கும்

^^^^^^^^^^^^^^^^

சுசீலா: நீங்கல்லாம் சொல்லுங்க. ஒரு மணி நேரத்துல என்ன செய்யலாம்? வேற பெட்டர் ஓப்ஷன்ஸ்?.

(ஒவ்வொருவரும் அவரவர் கருத்தை முன்வைக்கின்றனர்)

(யார் எப்படி பேசினாலும் நவீன், பாரபட்சமின்றி ஓரக் கண்ணாலும் நடுக்கண்ணாலும் அப்பட்டமாக சுசீலாவை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறான்)

சுசீலா:   நவீன் உங்க சஜேஷன்ஸ்

நவீன்: ஒரு மணி நேரத்துல என்னவெல்லாமோ செய்யலாங்க. அது நம்ம குறிக்கோள பொறுத்தது

சுசீலா:  இப்ப என்ன சொல்ல வரீங்க?

கதிர்: சுசீ.. அவன் அப்படித்தான், ஹீ இஸ் க்ரேஸி. சட்டுபுட்டுன்னு முடிவு பண்ணுங்க. ரிஹர்சலுக்கே நேரம் கம்மி.

சுசீலா:  ட்ராமா ஓகேன்னா ஸ்க்ரிட் ரெடி பண்ணணும்

தாமரை:  எங்க கிட்ட காலேஜ் ட்ராமாவோட ரெடி-ஸ்கிரிப்ட் ஒண்ணு இருக்கு.
'நவீன-சகுந்தலா'. நம்ம நவீன் தான் துஷ்யந்தன் வேஷம். சகுந்தலா வேடம் போட்ட பொண்ணு தான் இங்க இல்ல.

நவீன் (முகத்தை படு சீரியசாக வைத்துக் கொண்டு): சுசீலா நீங்களே நவீன சுசீலாவா இருங்களேன்

(சுசீலா குழப்பத்துடன் பார்க்க)

நவீன்: ஐ மீன், நீங்களே நவீன சகுந்தலாவா நடிக்கறீங்களான்னு கேட்டேன்.

குமார்: ஜஸ்டு மிஸ்! நல்லா வருவடா நவீன் நீ

விஜி: சுசீ நல்லா நடிப்பா, போன வருட காலேஜ் ட்ராமல கூட கலக்கோ கலக்குன்னு கலக்கி, சிறந்த துணை நடிகை கப் வாங்கினான்னா பாத்துக்கோங்க

நவீன்: என்ன வேஷம்?

விஜி: 'ராஜா வாழ்க!'ன்னு கோஷம் போடற பொதுஜனத்துல ஒருத்தி. ஆனா அந்த ட்ராமால மொத்தமே நாலு பேரு தான்.

சுசீலா (கடுப்பாக) : விஜி, நீ யார் கட்சின்னு முதல்லயே சொல்லிடு.

கதிர்: அப்ப தைரியமா நடிங்க. காலனி ட்ராமா தானே. ஒரு வேளை முட்டையோ தக்காளியோ முகத்துல அடிச்சாங்கன்னா, ப்யூட்டி பார்லர் போய் ஃபேஷ'யல் பண்ற செலவு மிச்சம். ஆனா அப்படியெல்லாம் பண்ண மாட்டாங்க. அல்லாரும் நம்ம குடும்பம் மாதிரி.

சுசீலா: உங்களுக்கெல்லாம் என்னையப் பார்த்தா கிண்டலா போச்சு. இந்த ஒரு காரணத்துக்காகவே நான் சகுந்தலாவா நடிச்சு காமிக்கறேன்.

நவீன்(புன்னகைக்கிறான்): ஆர் யூ ஷ்யூர்?

சுசீலா: அஃப்கோர்ஸ்

நவீன்: இல்ல.. வேற எந்த காரணமும் இல்லையான்னு கேட்டேன்.

சுசீலா: வேற என்ன காரணம் இருந்தா, உங்கள மாதிரி சகிக்க முடியாத துஷ்யந்தனுக்கு சகுந்தலாவா நடிக்க ஒத்துட்டிருப்பேன்.
எல்லாம் விதி தான்.

நவீன்: டைலாக் சரியா சொல்ல வருமா? உங்க செல் நம்பர் குடுத்துட்டுப் போங்க, டவுட்டு இருந்தா என்கிட்ட கேக்கலாமே

கதிர்: ட்ராமவ தவிர வேற மத்ததெல்லாம் நடக்குது இங்க

(ஒத்திகைக்கு நேரம் குறித்த பின், எல்லோரும் கலைந்து அவரவர் வீடு செல்கின்றனர்)

March 10, 2018

ஒரு காதல் வந்துச்சோ ( நகைச்சுவை நாடகம் பகுதி 1)


(இடம்: ஏபிசி காலனி. 

மங்களம் காபி ஆற்றிக் கொண்டிருக்கிறாள். சபேசன் வழக்கமாக எல்லா ஆண்களையும் போல் பேப்பரில் மூழ்கியிருக்கிறார். சுசீலா குறுக்க நெடுக்க நகத்தைக் கடித்தபடி நடை பயில்கிறாள்.)

மங்களம்: கொஞ்சம் அந்த பேப்பரை கீழ வச்சுட்டு காதை இங்க குடுக்கறீங்களா?

சபேசன்: காது என்னடி காது. உனக்குத்தான் என் மனசையே குடுத்து மாட்டிட்டு முழுக்கறேனே.

மங்களம்: புல்லரிக்குது போங்க. நான் சொல்றதைக் கொஞ்சம் கவனமா கேளுங்கன்னு சொன்னேன்.

சுசீலா: அப்பா, நானே டென்ஷன்ல இருக்கேன். உங்க ரெண்டு பேருக்கும் என்ன ரொமான்ஸ் வேண்டிகிடக்கு!

மங்களம்: இவ அடிக்கடி குறுக்க நெடுக்க நடக்கறதப் பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. பேசாம என் கஸின் பையன் குப்புவுக்கு கல்யாணம் பேசி முடிச்சுடலாம்.

சபேசன்: அதெப்படி குப்புவுக்கு கல்யாணம் ஆனா, இவ நடக்கறத நிறுத்துவா?

மங்களம்(எரிச்சலுடன்): குப்புவை இவளுக்கு பேசி முடிக்கலாம்னு சொன்னேன்.

சுசீலா: ரெண்டு பேரும் கொஞ்சம் பேசாம இருங்க. எனக்கு இருக்கற ப்ராப்ளம் பத்தாதுன்னு நீங்க வேற புதுசா சேக்காதீங்க. ரெண்டாவது எனக்கு இப்போ கல்யாணத்துக்கு அவசியம் இல்லை. பேரே சகிக்கலை. குப்பு சுப்புன்னு. கொஞ்சம் மார்டர்ன் பேரே கிடைக்கலியா.

சபேசன்: சரி வேணா பேரை மாத்திடலாம்மா. பேரா ஒரு ப்ராப்ளம். இல்லை நீயே எதானும் 'ஜிம்மி', 'டாமி' இப்படி யாரையாவது காதலிக்கறேன்னா சொல்லு. 

சுசீலா: காதல் வந்தா கட்டாயம் சொல்றேன்பா. ஆனாலும் உங்க Choice of names ரொம்ப மோசம்.

('ஒரு காதல் வந்திச்சோ... ஒரு காதல் வந்திச்சோ' என்று பாடியபடி வினோத் நுழைகிறான்)

வினோத்: என்ன சண்டை இங்க. சுசீலா மறுபடி அரியர்ஸ் வெச்சுட்டாளா?

சுசீலா: டேய் உனக்கு உடம்பு முழுக்க வெறும் கொழுப்புச்சத்து தான் இருக்கு.

வினோத்: அப்பா ஹாட் ந்யூஸ் பார்த்தீங்களா? 'ரீபாக்' ஷூஸ் பாதி ரேட்டாம். 'லீ ஜீன்ஸ் ரெண்டு வாங்கினா இன்னொண்ணு ·ப்ரீயாம்.

சபேசன்(கடுப்பாக): நான் பேப்பரே படிக்கறதில்லைடா வினோத். அப்படியே படிச்சாலும் நாட்டுக்குத் தேவையில்லாத எகானமி ந்யூஸ் மட்டும் தான் படிப்பேன்.

மங்களம்: ஏங்க நம்ம 'கீதாலயம் சாரீஸ்'ல கூட தள்ளுபடியாங்க. போய் பார்க்கலாமா?
சபேசன்(தப்பி ஓடும் உத்வேகத்துடன்): இந்தக் கடைக்காரங்களுக்கு வேற வேலையில்லை. தடுக்கி விழுந்தா தள்ளுபடி. ஆடித் தள்ளுபடி, பாடி தள்ளுபடி, பொங்கல், தீபாவளி, க்ருஸ்துமஸ், இதைத் தவிர சேல்ஸ் வேற. நான் புதுசா 'லோன்' போட்டாத் தான் உண்டு.

வினோத்: அப்பா, உங்களுக்கு ஒரு பொறுப்பான புள்ள இருக்கான்றத மறந்துட்டு பேசறீங்க. உங்க கஷ்டத்துல பங்கெடுத்துக்கத் தானே நான் தினம் இரண்டு மணி நேரம் குழந்தைங்களுக்கு ட்யூஷன் சொல்லித்தந்து சம்பாதிக்கறேன்.

சபேசன்: டேய் ஓவரா கத விடாதடா. குழந்தைங்களா அதுங்க? நீ எதுக்கு ட்யூஷன் சொல்லித்தரன்னு எனக்கு தெரியாதா.

வினோத்(விரைப்புடன்): சரி... சரீ..... கொஞ்சம் வளர்ந்த கொழந்தைங்க. ஆனாலும் பைசா பைசா தானே.

சபேசன்: என்ன பெரிய பைசா, நீ வாங்கற பைசா, அந்த கொழந்தைங்களோட வளைச்சுபோட விதவிதமா ட்ரெஸ் வாங்கவே உனக்கு சரியாகிடுது.

வினோத்: சேச்சே! நான் அது மாதிரி பண்ணுவேனா? உங்க பையன்பா நானு. 

மங்களம்: அதாண்டா என் கவலையே!

(சபேசன் முறைக்க மங்களம் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறாள்.)

சுசீலா: யாருக்காச்சும் நான் ஏன் டென்ஷனா நடக்கறேன்னு ஒரு கவலை இருக்கா?

வினோத்: டென்ஷனா ஏன் நடக்கற சுசீ.. வேணா உக்காந்துக்கயேன்!

சுசீலா: எப்படிம்மா இப்படி ஒரு ப்ராணியை எனக்கு அண்ணனா பெத்த..

மங்களம்(வெட்கத்துடன்): ஹி ஹி. எல்லாம் பகவான் செயல்.

வினோத்: என்ன ப்ராணின்னு சொன்ன அற்பப் பூச்சியே! வெறும நடந்துட்டே இருக்காம, அப்டியே இன்னும் டென்ஷன் டெவலப் பண்ணி, ஓடிப் போய்டேன்.

சபேசன்: சுசீம்மா என்னாச்சு, எனிதிங் ராங்.

சுசீலா(ஆவேசத்துடன்): அந்த 'பி' ப்ளாக் ரத்னா என்னை உசுப்பேத்தி விட்டுட்டாப்பா!
வினோத்: யாரு ரத்னா எனக்குத் தெரியாம? சிவப்பா கொஞ்சம் உன்னைவிட அழகா, கொழு கொழுன்னு 'மீரா ஜாஸ்மின்' மாதிரி சிரிப்பாளே அவளா? நல்ல பிள்ளையாச்சே அது.

சுசீலா: அவளே தான். இந்த முறை நம்ம ஃபளாட் தீபாவளி நிகழ்ச்சியில் 'ஏ' ப்ளாக் தனியா 'பி' ப்ளாக் தனியா வேற வேற நாளில் ப்ரொக்ராம் தரணமாம். அவங்க இல்லாம நாம என்ன ப்ராமாதமா கிழிக்கப் போறோம்ன்னு திமிரா பேசறா. நம்ம ப்ளாக் நாங்க சில ஃப்ரெண்ட்ஸ் பல்சுவை நிகழ்ச்சிக்கு ப்ராக்டிஸ் செய்யணும். 

வினோத்: என்னிக்கின்னு சொல்லு சுசீ.... நான் ஊர்ல இல்லாம கழண்டுக்கறேன்.

சுசீலா: நீ என்ன வேணா பண்ணு. ஆனா ஒண்ணே ஒண்ணு புரிஞ்சுக்கோ!

வினோத்: என்ன?

சுசீலா: அந்த ரத்னா ஒண்ணும் என்னை விட அழகு இல்லை!

(எரிச்சலுடன் சுசீலா எழுந்து செல்ல, வினோத் இளிக்கிறான்)

(தொடரும்)

LikeShow More Reactions

September 16, 2012

நன்றி ஜெயமோகன் ... ஆனால்...!




ஜெயமோகன் அவர்கள் "நகைச்சுவையும் தமிழ்சினிமாவும்" என்ற தலைப்பில் தமிழர்களின் நகைச்சுவை உணர்வைப் பற்றிய தன் கண்ணோட்டத்தை எழுதியுள்ளார்.



இவர் சொல்வதில் ஏறக்குறைய பல விஷயங்களுடன் நான் ஒத்துப்போகிறேன். இவ்வளவு கோர்வையாக, தெளிவாக, சரியான மேற்கொள்களைக் காட்டி  அழ்கான வார்த்தை பிரயோகத்துடன் இத்தனைச் சிறப்பாக என்னால்  சொல்லியிருக்க முடியாது. அதனால் தான் அவர் ஜெயமோகன்...நான் வெறும் "மின்மினிப்பூச்சி"


நான் சொல்ல வந்ததை, என் போன்ற சிலர் (பலர்) சொல்ல வந்ததை எங்கள் சார்ப்பில் சொல்லியிருக்கிறார். நன்றி...... ஜெ.மோ. சார்.. ஆனால், தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு ஒட்டுமொத்தமாக இல்லை  என்பதை என்னால் ஏனோ ஒத்துக்கொள்ள முடிவதில்லை.

'நக்கல்' , கேலி வகை நகைச்சுவையைத் தாண்டி, மொழிப்பகடிகளை தமிழர்கள் அன்றாட வாழ்வில் நிறையவே ரசித்து சொல்லாடி வருகிறார்கள். நகைச்சுவையை இயல்பாய், பேசும் வாக்கிலேயே உதிர்த்தும் வருவதுண்டு.  (cliche வகை காப்பியடிக்கும் சொற்களையும் தாண்டி)


சிரிப்புகென தனி "ட்ராக்" தேவைப்படும் திரைப்படகளில் மட்டுமே ஜெ.மோ அவர்கள் சொல்வது போல், நகைச்சுவைக்கென  அஷ்டகோணல் முகமோ, நடையோ, உடையோ, பாவனையோ, பெரும்பாலும் அவசியமாகிப் போகிறது.  நகைச்சுவை "ட்ராக்" என்கிற பாணியைத் தாண்டி, முழு நீள நகைச்சுவை படங்கள் ரசிக்கத்தக்கவையாகவே இருக்கிறது. பாமா விஜயம் , வீட்டுக்கு வீடு வாசப்படி, மணல்கயிறு இப்படி அடுக்கிக்கொண்டே பொகலாம்

உலக நாயகன் கமலஹாசன் போன்றவர்கள்   தனக்கென அருமையான பாணியை கொடுத்துள்ளார். நீங்கள் குறிப்பிட்டிருந்த "மைக்கேல் மதன காமராஜன்"   நான் ரசித்த மிகச் சிறந்த நகைச்சுவை படமாக முதலிடத்தில் உள்ளது. க்ரேஸி மோகனின் வசனங்களில் பூடக நகைச்சுவையும் மொழிப்பகடிகளின் வகையும் பின்னிப் பிணைந்திருக்கும். பாலச்சந்தரின் சில நகைச்சுவை படங்களும் விதிவிலக்காக இயல்பான நகைச்சுவையுடன் மிளிர்பவை.


எஸ்.வி.சேகர்,  ஒய்.ஜி. மகேந்திரன் , மௌலி முதலியோரும் இயல்பான நகைச்சுவைகளை அள்ளி வழங்கியிருப்பவர்கள். ஜெ.மோ அவர்கள் ஒட்டுமொத்தமாக நகைச்சுவை சினிமாக்களில் இல்லை என்று கூறும் அளவு குறைந்து விடவில்லை என்பது என் எண்ணம்.

ஜெ.மோ சார்...எங்களைப் போன்ற பலரின் எண்ணத்தை மிக அழகாக பிரதிபலித்த உங்களுக்கு கோடி நன்றி. ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படி வெகு சிலதே இருக்கின்றன என்பதால் அவற்றை புறந்தள்ளிவிட்டீர்கள் போலும்.

சினிமாக்களைத் தாண்டி நாடகமேடைகளில் பல நகைச்சுவை மேதைகள் மிளிர்ந்திருக்கிறார்கள். இன்னும் மின்னிக்கொண்டிருக்கிறார்கள்.  எழுத்தாளர்கள் தேவன், பாக்கியம் ராமசாமி, அகஸ்தியன் போன்ற பலரின் ரசிக்கவைக்கும் எழுத்துக்கள் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளன.  சுஜாதா போன்ற  பன்முக எழுத்தாளர்களின்  கதைகளிலும்  ஊடே இயல்பான நகைச்சுவை ஒளிந்திருக்கும்.  அவற்றையெல்லாம் தமிழக மக்களாகிய நாம் தான் ரசித்து அங்கீகரிக்கிறோம்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டேனும் ஒட்டுமொத்தமாக "தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு" என்ற பொது அவதானிப்பை பரிசீலித்திருக்கலாம் :)