காட்சி 7
( இரண்டு மாதங்களுக்குப் பிறகு)
( விஜியும் சுசீலாவும் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கிறார்கள்.)
விஜி: சுசீ... சுசீலாஆ........
(சுசீலா காதில் வாங்கவில்லை, ஏதோ சிந்தனையில் இருக்கிறாள்)
விஜி: சுசீஈஈ.....என்ன ஆச்சு உனக்கு. எனிதிங் ராங்க். ரொம்ப டல்லா இருக்க.
சுசீலா: ஒண்ணும் இல்லையே . தூக்கம் கம்மி, எக்ஸாம் வருதில்ல.
விஜி: காலையில கதிர் கால் பண்ணினான்.
சுசீலா: இவ்ளோ காலையில அவன் ஏன் உனக்கு கால் பண்றான்?
விஜி: உன்னை அவன் வீட்டுக்கு வர சொன்னான்
சுசீலா: என் நம்பர் அவன் கிட்ட இருக்கே..... நீ என்ன நடுவில? எத்தனை
மணிக்கு வர சொன்னான்?
விஜி: இடியட்! சொல்றத மட்டும் கேளு. ஈவினிங்க் ஆறு மணி.
சுசீலா: ஓஹோ என்ன விஷயம்?
விஜி: எனக்கென்ன தெரியும். நீயே போய் பாரு.
(விழி பிதிங்கிக் கொண்டு, நிறை மாத கர்பிணியைப் போல பேருந்து வந்து
மூச்சிரைத்து நிற்கிறது. விஜி, சுசீலா உட்பட மேலும் பத்து பேர் கசங்கிக் கொண்டு
ஏறிய பின், அலுப்புடன் நகர்கிறது)
காட்சி 8
(இடம்: ஏபிசி காலனி. சுசீலா வீடு.
நேரம்: மாலை 4.30
[ சுசீலா புத்தகம் படிப்பதாக டபாய்த்துக் கொண்டிருக்கிறாள்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அன்று ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.
"உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு" இப்படிக்கு - நவீன்
அவ்வபோது செல் ஃபோனை முறைத்து பார்ப்பதும்,
தனக்குள் முணுமுணுப்பதுமாக இருக்கிறாள். ]
(கொஞ்சம் நாட்களாகவே சுசீ ஃபோனைப் பார்த்து சிரிப்பதும்,
திடீரென உம்மென்று முகத்தை தூக்கி வைத்துக் கொள்வதும் நெருடலாகவே இருக்க
மங்களம் கவலையாகிறாள். )
(சபேசன் நுழைகிறார்)
சபேசன்: என்னடா இன்னிக்கு சீக்கிரம் வந்துட்ட?
மங்களம்: அதைத்தான் நானும் யோசிச்சிட்டிருக்கேன். சுசீ ரெண்டு நாளாகவே ரொம்ப
டல்லாக இருக்கியே
சுசீலா: ஆமாம்ப்பா கடைசி கிளாஸ் இல்லை.
வினோத்: கட் அடிச்சுட்டு வந்திருப்பா. ஹி ஹி'
சுசீலா: நான் உன்ன மாதிரியா!
மங்களம்: என்ன சுசீ. ஏன் டல்லா இருக்க?
சுசீலா: இல்லைம்மா டையர்ட்னஸ். எக்ஸாம்னா சும்மாவா? படிக்க வேணாம்?
வினோத்: நான் ஒரு சூப்பர் ஐடியா சொல்றேன். நைசா ரோல் நம்பர மாத்தி எழுதிக்
குடுத்துடு. ரிசல்ட் வரும் போது, 'நான் எழுதினேனே, எப்படி என் ரிசல்ட் வர்லைன்னு
சொல்லி தப்பிச்சுகலாம்'
சபேசன்: எப்படிடா இப்படி க்ரிமினல் புத்தி ஓடுது உனக்கு?
வினோத்: உங்க பையனாச்சேப்பா!
மங்களம்: ஏங்க, நீங்களும் இப்படி தில்லுமுல்லு பண்ணிதான் இஞ்சினியரானீங்களா?
சபேசன்: வர வர யாருக்கும் மரியாதையில்லாம போச்சு.
சுசீலா: எல்லாரும் என்ன நிம்மதியா தனியா இருக்க விடுங்க ரொம்ப போர்
அடிச்சா டி.வி பாருங்க. இன்னிக்கு வினோத் கலந்துக்கற ப்ரோக்ராம் இருக்கு.
மங்களம்(அதிர்ச்சியுடன்): என்னது? எந்த சானல்?
சுசீலா(அலட்சியமாய்): நேஷனல் ஜியாக்ரபிக்.
சபேசன்(சிரித்தபடி ): தன் வினை தன்னைச் சுடும்.
வினோத்: ராட்சசி, உனக்கு போய் ஐடியா குடுத்தேன் பாரு. நல்லா கஷ்டப்பட்டு
படிச்சு... ஃபெயிலாகு.
சுசீலா: பெரீஈஈய முனிவரு... சாபம் குடுக்கறாரு. சரிதான் போடா.
மங்களம்: இன்னிக்கு பஜ்ஜி, சொஜ்ஜி செஞ்சிருக்கேன். எல்லாரும் சாப்பிட்டு அப்புறமா
சண்டை போடுங்க. குப்புவத்தான் வர விடாம செஞ்சுட்டீங்க. நாமளானும் பஜ்ஜி
சொஜ்ஜி திங்கலாம்.
சபேசன்(கிண்டலாக): பஜ்ஜி சொஜ்ஜிக்காக குப்பு வரணமா? நாங்களே சாப்டுடறோம்.
வினோத்: ஆமா அது என்ன பஜ்ஜி செஞ்சா சொஜ்ஜியும் சேர்த்து செய்யணமா?
கேசரி செஞ்சா என்ன?
சுசீலா: லூசு! கேசரிக்கு பேரு தான் சொஜ்ஜி.
மங்களம்: அதாவது பஜ்ஜி செஞ்சா, அது கூட எது வேணா செய்யலாம்.
சொஜ்ஜி தான் செய்யணம்னு இல்லை.
வினோத்: பின்ன எதுக்கு?
மங்களம்: எல்லாம் ஒரு ரைமிங்க்காக தான்.
சபேசன்: சவுண்ட் எஃபெக்ட் டா
(எல்லோரும் பஜ்ஜி சாப்பிடச் செல்கிறார்கள்)
(தொடரும்)
No comments:
Post a Comment