March 19, 2018

ஒரு காதல் வந்துச்சோ ( நாடகம்- பகுதி 8) ( நிறைவுப் பகுதி)




காட்சி 10

(இடம்: சுசீலா வீடு.)

நவீன்: இவ்ளோ சீக்கிரம் சம்மதிப்பீங்கன்னு நினைக்கலை ஆண்ட்டி.

சபேசன்: உங்களை மாதிரி ஒரு நல்ல பையன வேணாம்னு சொல்ல எங்களுக்கு பைத்தியமா?  மங்களம் கொஞ்சம் அப்படி இப்படி தான்... ஆனாலும் இன்னும் முழுப் பைத்தியம் ஆகல.


மங்களம்(முறைப்புடன்): அந்தக் குறையைப் போக்கத்தான் நீங்க இருக்கீங்களே.

சுசீலா: நிஜம்மாம்மா. நீ தான் குப்புக்கு ஒகே சொல்லலைன்னு எங்க கல்யாணத்துக்கு வில்லியா இருப்பியோன்னு நினைச்சேன்.

மங்களம்: சீச்சி! அதெல்லாம் சினிமால தான். எதோவொரு குப்புவோ சொப்புவோ கல்யாணம் பண்ணின்டு சந்தோஷமா இருந்தீன்னா சரி. வேற என்ன வேணும்?

நவீன்: சொப்பு இல்லை ஆண்டி. நவீன். நவீனைக் கல்யாணம் செஞ்சிட்டு உங்க பொண்ணு குவீன் மாதிரி இருப்பா

சுசீலா: கடவுளே இப்படி அறுவையை காலம் பூரா கேக்கணமா?

மங்களம்: வருத்தபடாத சுசீ...இப்போ நான் இல்ல?

வினோத்: ஆனா ஒண்ணு சுசீ... நீ பரோடா போன பிறகு,........ (கண்துடைத்துக் கொள்கிறான்)... அதை எப்படி சுசீ சொல்றது?

சுசீலா(ஞானிபோல் முகம் வைத்து): லை·ப் கோஸ் ஆன்....

வினோத்: அத யாரு சொன்னாங்க? தட் வில் கோ ஆன்... நான் சொன்னது உன்ன சாக்கா வெச்சு, லேடீஸ் காலேஜ் வாசல்ல ட்ராப் பண்ண வருவேன்.  ஹ்ம்ம்.... இப்ப எங்க போவேன்?


சுசீலா: அதானே பார்த்தேன்

சபேசன்: உங்க வீட்ல என்ன சொல்றாங்க ? உங்க விருப்பத்தை சொன்னீங்களா?

நவீன்: அப்பா உங்க கிட்ட பேசுவார் அங்கிள். எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். சரி நான் கிளம்பறேன். இப்போவே லேட். (சுசீலாவிடம் திரும்பி) அப்புறம் கால் பண்றேன் சரியா. ஒழுங்கா படி.


வினோத்(இடிஇடியென சிரிக்கிறான்): நவீன் இவ்ளோ அப்பாவியா இருக்கியே. சுசீலா என்னிக்கு படிச்சிருக்கா?

சுசீலா(பல்லை கடித்துக்கொண்டு): இரு இரு உன் ட்யூஷன் பசங்க கிட்ட உன்னை பத்தி வத்திவெச்சிட்டுப் போறேன்.

வினோத்: அப்புறம் நவீன்... நல்லா சாப்பிட்டு; உடம்பப் பார்த்துக்க.

நவீன்: அதுக்கென்ன நல்லாத்தானே இருக்கேன்.

வினோத்: அதுக்கப்புறம் உனக்கு சுசீலா சமைச்சு சாப்பிடணம்ன்னு விதி. எல்லாம் அவங்க அவங்க வாங்கின வரம்.

(நவீன் சிரித்துக் கொண்டே கிளம்புகிறான்)

மங்களம்: என்னை இந்த நாட்டு பிரதம மந்திரி ஆக்கினாங்கன்னா எல்லா ப்ரச்சனையும் தீர்த்து வெச்சுடுவேன்.

சபேசன்: ஏம்மா உனக்கு இந்த விபரீத ஆசை. ஏதோ நம்ம நாடு சுமாரா இருக்கறது குத்துதா?

மங்களம்: அதுக்கில்லீங்க. வீட்டுக்குள்ளையே இந்தியா பாக்கிஸ்தனை வளர்க்கறேனே... அதை சமாளிக்கறேனே.. அதுக்கு சொன்னேன்.

சபேசன்: என்னது வீட்டுக்குள்ள இந்தியா பாக்கிஸ்தானா? உன் பேரு என்ன ஏசியாவா?
மங்களம்: நம்ம பசங்களைச் சொன்னேங்க.

சபேசன்: அப்போ அவங்க பேரு ஏசியாவா?

மங்களம்: நக்கலுக்கு ஒண்ணும் கொறைவே இல்லை. உங்கள மாதிரியே தான் பசங்களும்.

வினோத்: ஸ்டாப்.. ஸ்டாப்.. இவ்ளோ நல்ல விஷயங்கள் நடந்திட்டு வரச்சே, யாராவது இதுக்கு காரண கர்த்தாவுக்கு நன்றி சொன்னமா?

சபேசன்: யாருடா அது?

வினோத்: ரத்னா கலகம் நன்மையில் முடியும். அவளால தானே இந்த நவீன்... எல்லாமே..

சுசீலா: டேய். முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடுறியே. உனக்கு அவ பேரை இழுக்கணம் அதுக்கு இது ஒரு சாக்கு.

வினோத்: சீச்சி. ஐ மீன் இட். பத்திரிகை ரெடியானவுடன், முதல் பத்திரிகை அவளுக்குத் தான். அதுவும் நானே கொண்டு கொடுக்கப் போறேன்.

சுசீலா:  உன் அட்டகாசத்துக்கு அளவே இல்ல!

வினோத்: ஹ்ம்ம்.... முயன்று பார்க்கலாம்.... கிடைச்சா சரி.. இல்லைன்னா, குப்புவுக்கு பண்ண த்ரோகத்துக்கு நானே குப்பு தங்கச்சிய கட்டிக்கறேன்.

மங்களம்(வாயெல்லாம் பல்லாக): ஓ ராசாத்தியா?

வினோத்: உங்க அண்ணன் குடும்பத்துல யாருக்குமே இருவத்தியோராம் நூற்றாண்டு பேரே இல்ல

சுசீலா(சிரித்துக் கொண்டே):  A Rose is a Rose is a Rose 

வினோத்: ம்ஹ்ம்.. அந்தப் பாட்டு இந்த சிச்சுவேஷனுக்கு சரியில்லை. ராசாத்தி ஒன்ன... காணாத நெஞ்சு... . இது தான் சரி.

சுசீலா: அண்ணா.. நீ ரத்னாவை ட்ரை பண்ணு. சைட்ல தாமரைக்கு நோட்ஸ் எழுதி கொடு, ராசாத்திய பத்தி யோசி... ரத்னாவோ, ராசாத்தியோ, ரமாவோ, ரோஹிணியோ......



சபேசன்: இது வேறயா?

மங்களம்: இதெல்லாம் யாரு புதுசா?

சுசீலா: யாரை வேணாலும் இம்ப்ரேஸ் பண்ணு. ஆனா அவங்க உன்ன விட்டு தப்பிச்சு ஓடிடாம இருக்க ஒரே வழிதான் ..

வினோத்: என்ன செய்யணம்?

சுசீலா(கண்ணைக் கையால் மூடியபடி): நீ பாடறத நிறுத்தணம்

(கடைசி சீனில் வழக்கம் போல் எல்லோரும் சிரிக்கிறார்கள்.)

(முற்றுபேற்றது)

(சுபம்)


No comments:

Post a Comment