November 08, 2020

நின்றசீர் நெடுமாற நாயனார்



.
சீரும் சிறப்புமாக மதுரை ஆண்ட பாண்டிய மன்னனின் இயற்பெயர் நெடுமாறன். நீதி தவறாத ஆட்சியும் உயிர்களிடத்தில் அன்பும் கொண்டு திகழ்ந்தார். இவருக்கு முதுகு கூன் விழுந்ததால் கூன் பாண்டியன் என்று வரலாறு குறிப்புகள் கூறுகின்றன. வடநாட்டிலிருந்து போர் முரசு கொட்டி வந்த பகைவர்களை திருநெல்வேலியில் தோற்கடித்த பெருமைக்கு நெல்வேலி வென்ற நெடுமாறன் என்று போற்றபட்டார். சோழ இளவரசி மங்கையர்கரசியை தமது அரசியாக்கினார். 
.
மங்கையர்க்கரசியாரும், நெடுமாறனின் நீதி தவறாத அரசின் அமைச்சரான குலச்சிறை நாயனாரும் சிவ பக்தர்களாக சைவத்தின் பால் ஈடுபட்டிருக்க, மன்னன் நெடுமாறன் சமணர்களின் கருத்துடன் மெல்ல மனம் மாறி சமண மதத்தை தழுவியிருந்தார். அரசன் மதம் மாறியதால், மெதுவே குடிகள் சிலரும் சமண மதத்தை தழுவினர். சைவம் தழைத்தோங்கிய மதுரை மாநகரம் சமணத்தை தலைவணங்கி வரவேற்றது.
.
திருஞானசம்பந்தர் பாண்டி நாடு எழுந்தருளிய போது மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் அவரை நாடி சைவம் தழைத்தோங்க வேண்டிக்கொண்டனர். ஞானசம்பந்தரின் வருகை அறிந்த சமணர்கள் அரசரிடம் ஒப்புதல் வாங்கி, அவர் தங்கியிருந்த மடத்திற்கு தீ வைத்தனர். அத்தீயை ஏவியவருக்கே திருப்பியனுப்ப பதிகம் பாடியதால், அரசருக்கு சுரநோய் வந்து அவதியுற்றார். சமணர்களால் தீர்வு காண முடியாமல், சம்பந்தர் "மந்திரமாவது நீறு" என்று பாடி திருநீறு பூசி குணமாக்கினார். சைவத்தை தழுவிய மன்னனின் கூனை நிமிர்த்தி 'நின்றசீர் நெடுமாற' நாயனார் ஆக்கினார் சம்பந்தர். சமணர்களை அனல் வாதம் புனல் வாதம் மூலம் வென்ற சம்பந்தருக்கு பெரும் மரியாதை செய்தார். (இதனையொத்த கதையை விளக்கமாக சம்பந்தர் வரலாற்றில் பார்த்தோம்) சிவ ஆகம முறைகளும் பூஜைகளும் ஆலயத்திருப்பணிகளும் முன் போல் நடைபெற ஆவன செய்தார்.
.
உடன் மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் துணை நிற்க, அடியார்களை உபசரித்து, சிவத்தொண்டுகள் பல காலம் புரிநதிருந்து, அவனருளாலே அவன் தாள் பணிந்து நற்கதி எய்தினார்.
.
ஓம் நமச்சிவாய

November 07, 2020

நரசிங்கமுனையரைய நாயனார்

.
இவ்வடியார் திருமுனைப்பாடி நாட்டின் குறுநில மன்னர் ஆவார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக துதித்தேற்றப்படுபவர். சிவனடியார்களை பணிந்து போற்றிக் காத்தலை தவறாது செய்து வந்தார். பகைவரிடமிருந்து நாட்டினை காத்து ரக்ஷித்து சிறப்புற பேணி வந்ததுடன், சிவ நாமம் உரைக்கும் அடியவருக்கெல்லாம் வள்ளலாக விளங்கினார். கோவில் செல்வங்களை சிறப்புற பேணச் செய்து, அவற்றை அற வழியிலும் ஆகம வழியிலும் செலவிடப் பணித்தார். அடியார்களின் குறிப்பறிந்து தொண்டாற்றினார். அடியார்களுக்கு பொன்னும் பட்டும் வழங்கி சிறப்பிக்கும் வழக்கம் கொண்டிருந்தார்.
.
ஒரு முறை சிவபூஜை முடிந்த பின், அங்கு வந்திருக்கும் அடியார்க்கு பொன் வழங்கி அமுதளிக்கும் தருவாயில், காம நோயினால் பீடிக்கப்பட்டு பிறரால் அருவெறுத்து ஒதுக்கப்பட்ட ஒருவரும் அடியவராக வந்திருந்தார். சசிசேகரனிடம் கொண்ட அன்பின் பெருக்கால் அவரையும் ஆரத்தழுவி வரவேற்றார். நல்லொழுக்கம் பேணாதவராயினும் திருநீறு துலங்கும் அவரது நெற்றியைக் கண்டதும் அன்பொழுக அமுதளித்து அவருக்கு இரட்டிப்பு பொன்னளித்து, விருந்தோம்பல் செய்து கவுரவித்தார்.
.
நரசிங்கமுன்னரைய நாயானர் வீதி வலம் வரும் பொழுது, எழில் ரூபனாக தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சுந்தரரை கண்டார். மிகுந்த பிரியத்தினால் ஆட்கொள்ளப் பட்டு, சடையனாரிடம் கொண்ட நட்பின் உரிமையில், சுந்தரரை வளர்க்கும் பெரும்பேற்றை கேட்டுப் பெற்றார். சுந்தரரின் திருமணப்பருவம் வரை அரச போகத்துடன் சீறும் சிறப்புமாக தாமே வளர்த்தார்.
.
நம்பியாரூரரான சுந்தரரை வளர்த்த பெருமைக்கும், சிவனடியார்களை பேணிப் போற்றிய சிறந்த பக்திக்கும் இறைவனைப் பிரியாது உடனுரையும் கையிலாயம் பெற்றார்.
.
.
ஓம் நமச்சிவாய

நமிநந்தியடிகள் நாயனார்



ஏமப்பேறூரில் பிறந்த அந்தணர் குலத்தவர் நமிநந்தியடிகள். மகேஸ்வரனின் ஐந்தெழுத்தை அன்புடன் உணர்ந்து இடைவிடாது சிந்தித்திருப்பதும் பூஜிப்பதும் தொண்டுகள் செய்வதும் வழக்கமாகக் கொண்டிருந்தார். நாள்தோறும் திருவாரூர் பெருங்கோவிலில் குடிகொண்டுள்ள பெருமானை தரிசித்து வழிபடுவதை தமது தலையாய
திருப்பணியாகக் கொண்டிருந்தார்.
.
எழுந்த அன்பின் பெருக்கால், ஒரு மாலைப்பொழுதில் ஈசனுக்கு விளக்கேற்றி துதிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஏமப்பேறூர் வரை தமது இல்லம் சென்று எடுத்த வர தாமதமாகிவிடும் என்பதால் அங்கு குடியிருக்கும் வீடுகளில் வேண்டிப்பேற்றுக்  கொள்ள எண்ணி, அருகிலுள்ள ஒரு வீட்டை அணுகினார். அவர் சென்ற வீடு சமணர்கள் வாழ்ந்த வீடு. "விளக்கேற்ற நெய் தாருங்கள்" என்று விண்ணப்பித்தவரிடம், "அனலேந்தி நிற்கும் உங்கள் சிவனாருக்கு விளக்கு ஏற்ற வேண்டுமென்றால் நீரை ஊற்றி ஏற்றுங்கள்" என்று பரிகசித்தார்கள்.
.
மனம் பொறுக்க மாட்டாமல் இறைவனிடம் முறையிட்டழுத அடிகளை இறைவன் கருணை கொண்டு "அருகேயுள்ள குளத்தில் நீரெடுத்து வந்து ஏற்றும்" என்று ஆகாயமார்க்க அசரீரியாக அருளினார். தமது பாக்கியத்தை எண்ணி பேருவகை அடைந்து, குளத்தில் நீர் அள்ளி, ஐந்தெழுத்தோதி திருவிளக்கேற்றினார். சுடர்வீட்டு ஜோதியென ஒளிர்வது கண்டு ஆலய்ம் முழுவதும் ஊரெல்லாம் அதிசயிக்க விளக்கேற்றி இறைவனின் பெருமையை உலகறியச் செய்தார். சமணத்தவர்கள் வெட்கி தலைகுனிந்தனர்.
.
இந்நிகழ்வுக்குப் பிறகு தொடர்ந்த நாட்களிலும் நீரூற்றி ஆலயமெங்கும் விளக்கேற்றும் திருப்பணி செய்து, பின்னர் தமதூர் சென்று பூஜைகளில் ஈடுபடுவதை வழக்கமெனக் கொண்டிருந்தார். இப்பெருமை ஊரெங்கும் பரவ, சோழ மன்னன் பெருங்க்கொடையளித்து ஆகம விதிப்படி பூஜைகளும் நித்ய ஆராதனைகளும் பங்குனி உத்திர விழாவும் நடைபெறுவதற்கு வழி செய்து அதற்கு தலைமை ஏற்க நந்தியடிகளை நியமித்தார்.
.
ஒரு சமயம் பங்குனி உத்திரப் பெருவிழாவின் போது மணலி என்ற ஊரில் உலா எழுந்தார். அங்கு பலதரப்பட்ட மக்களும் பல்வேறு ஜாதி இனத்தவர்களும் சிவனாரை வணங்கிச் சென்றனர். அடிகள் இறைவனை மகிழ்ந்து பூஜித்த பின், தமது ஊரை அடைந்தார். வீட்டினுள் செல்லாமல் வெளித் திண்ணையில் தங்கிவிட்டார். மனைவியார் வீட்டினுள் வந்து அர்ச்சனை பூஜை செய்ய நினைவூட்டினார்கள். மணலியில் நான் இறைவனின் உலா கண்டு சேவித்திருந்தேன். அங்கு பல ஜாதியினர் வந்து வழிபட்டதாலும், தமக்கு தீட்டு உண்டாயிற்று அதனால் நீராட ஏற்பாடு செய்யப் பணித்தார்.
.
மனைவியார் அகன்றதும் மீண்டும் திண்ணையில் படுத்தவருக்கு எம்பெருமான் கனவில் காட்சிதந்தார். "திருவாரூரில் பிறந்த அனைவரும் கணங்கள். அதை நீ உணர்வாய்" என்று அறிவூட்டினார். உறக்கம் கலைந்தவர் தாம் செய்த பிழையால் வருந்தனார். உடன் சென்று பூஜைகள் தொடர்ந்தார். மறு நாள் பொழுது புலர்ந்ததும் திருவாரூர் சென்றார் அங்கு அத்தனை பக்தர்களும் சிவ ஸ்வரூபமாக தோன்றுவதைக் கண்டு, பிழை பொறுக்க இறைவனை இறைஞ்சி, ஜாதி வேறுபாடுகளை கடந்தார்.
.
நெடுங்காலம் இறைவனுக்கும் அடியவர்களுக்கும் திருத்தொண்டுகள் புரிந்து, சிறப்புற வாழ்ந்து இறைவன் திருவடி சேர்ந்தார்.
.
ஓம் நமச்சிவாய
.

திருமூலர்

                                                     



.                  
பதினெண் சித்தர்களில் தலையாய சித்தராக அறியப்படுபவர். அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவர் எனும் பேறு பெற்றவர் ஆகிறார்.
.
இவரது பிறப்பின் மூலத்தை அறிய முற்படுவோம். நந்தித்தேவரின் அருள் பெற்ற மாணவர்களுள் சுந்தரநாதர் என்ற சிவயோகி ஒருவரும் இருந்தார். இவர் அணிமா லகிமா முதலிய அஷ்டமா சித்திகளை கையாளும் அருள் பெற்றிருந்தார். அகத்திய மாமுனியின் நண்பராக இருந்தார். இவர் கைலாய பரம்பரையில் வருபவர். ( இவருடைய பதினாறு சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலை சித்தரும் வெகுவாக அறியபடுபவர்கள். காலங்கி சித்தரின் சீடரே பழனியில் நவபாஷாணத்தால் முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்த போகர் ஆவார் )
.
சுமார் 8000 வருடங்களுக்கு முன்னர், அகத்திய மாமுனியை கண்டு அவருடன் சில காலம் இருந்து வர தென் திசையை நோக்கிப் புறப்பட்டார். தெற்கே காஞ்சி வந்து, தில்லையை தரிசித்து, பல தலங்களில் சிவனை நினைந்து அன்பொழுக பக்தி செய்து, காவிரியில் நீராடி, பின்னர் உமையவள் பசுவின் வடிவில் இறைவனை நோக்கி தவமியற்றி கோமுக்தீஸ்வரரால் ஆட்கொள்ளப்பட்ட திருவாடுதுறை வந்தடைந்தார்.
.
இறைவனை தரிசித்து விலக இயலாதவராய் சில காலம் தங்கினார். திரும்பச் செல்லும் காலத்தில் காவிரி கரையின் சோலையில் இரை மேய்திருந்த பசுக்கள் வருந்தி அழுவதைக் கண்டார். சாத்தனூரில் இடைக்குலத்தவனான மூலன் அப்பசுக்களை மேய்த்து ரக்ஷித்து வருபவன். அவன் தன் உடலை உகுத்து விண் புகுந்ததால், பசுக்கள் வருந்தி அழுவதை உணர்ந்தார்.
.
பசுக்களின் மேல் கருணைக் கொண்டதனால், மூலனின் உடலில் தம் உயிரை செலுத்தி, தம் உடலை பாதுகாப்பாக வேறிடத்தில் விட்டு, கூடு விட்டு கூடு பாய்ந்தார். பசுக்கள் வீடு சென்றடைய, நெடு நேரமாகி வீடு திரும்பாத கணவனை எண்ணி கவலையுற்றிருந்த மூலனின் மனைவி, திருமூலரை தன் பதியென்றெண்ணி மகிழ்ந்து அழைத்தாள். தமை தீண்ட அனுமதி மறுத்த மூலர் தாம் திருமூலர் என்பதை ஆட்டின் உடலில் புகுந்து நிரூபித்தார். மூலனின் மனைவியை ஊரார் தேற்ற, திருமூலர் தமது மேனியில் புகுதற்கு தாம் பாதுகாப்பாக விட்டுச்சென்ற உடலைத் தேடினார். அது அங்கில்லாமல் மறைந்திருக்கவே அதன் காரணத்தை யோகத்தின் மூலம் அறிந்து, அதுவே இறைவன் சித்தமென தெளிந்தார்.
.
சாத்தூரிலிருந்து மீண்டும் திருவாடுதுறை அடைந்து பல காலம் அங்கு தங்கி தவமியற்றினார். கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் அரச மரத்தடியில் தவமியற்றியவர் ஆண்டுக்கொரு முறை கண்விழித்து பாடல் இயற்றி மீண்டும் தியானத்தில் ஆழ்ந்துவிடுவார். இவ்வாறு மூவாயிரம் வருடங்கள் தவமியற்றினார். இவர் தொகுத்த பாடல்கள் "தமிழ் மூவாயிரம்" என்று வழங்கப்பட்டது. பின்னர் வந்த சான்றோர் இதனை திருமூலர் அருளிய திருமந்திரம் என வகை செய்தனர்.
.
இவ்வாறு திருமந்திரம் அருளியவர் அதனை வெளியிடாமல் ஆலயத்தின் கொடிமரத்தின் அடியில் புதைத்து, அங்கிருந்து சிதம்பரம் சென்று தமது குரு நந்தீசரைப் ( நந்தி பகவான்) பணிந்து, தில்லையம்பதியுடன் கலந்தார்.
.
பல்லாயிரம் வருடங்கள் பின்னால் தோன்றிய சம்பந்தர், பெருமான் அருளால் இங்கு தமிழ் மந்திரங்கள் உளதென்று உணர்ந்து, அதனை உலகிற்கு வெளியிடச் செய்தார்.
.
இவரின் பெயர், பிறப்பு முந்தைய நிலை எதுவும் பெரியபுராணம் தொகுத்த சேக்கிழாராலோ, திருத்தொண்டர் திருவந்தாதி இயம்பிய நம்பியாண்டார் நம்பியாலோ குறிப்பிடப்படவில்லை. எனினும், இவரே நாயன்மார்களில் மூத்தவர் பல காலத்திற்கு முன்னவர், சைவத்திற்கு முதல் நூலைத் தந்தவர் என்று கூறலாம். இவர் எழுதிய நூலை திருமந்திரம் எனும் பத்தாம் திருமுறையாக நம்பியாண்டார் நம்பி தொகுத்தார்.
.
இவர் நந்தியின் சீடர் என்பது அவர் எழுதிய
"நந்தியருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர்
என்றிவ ரென்னோ டெண்மரு மாமே” (திருமந்திரம்-67)

திருமூலர் வாய்மொழியாலேயே நன்கு தெளியப்படும்.
.
ஓம் நமச்சிவாய

திருநீலநக்க நாயனார்



.
சோழமண்டல சாத்தமங்கை எனும் ஊரில் அந்தணராக பிறந்தார் திருநீலக்கர். அந்தணராகப் பிறந்தவர் வேதத்தின் உட்பொருளான சிவனை பூஜித்தல், அர்ச்சிதல், தொழுதல், அவனடியார்களை சிறபித்தல் அமுதளித்தல் முதலியனவையே உய்யும் வழி என்றுணர்ந்து தினமும் வேதாகம முறைப்படி சிவனை பூசித்து பல இறைத்தொண்டு ஆற்றி வந்தார்.
.
ஒரு சமயம், அவர் பிறந்த திருவூரான சாத்தமங்கையிலிருக்கும் அவயந்தி என்ற கோவிலில் அருளிச் சிறப்பிக்கும் பரமேஸ்வரனை பூஜிக்க விரும்பி, பூசனைக்குறிய பொருட்களுடன் தம் மனைவியாருடன் ஆலயம் சென்று மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்தார். அச்சமயம் சிலந்தி ஒன்று சர்வேஸ்வரனின் லிங்கத் திருமேனியில் விழுந்தது. பூஜைக்கு அழுக்கு நேருமோ என்றேண்ணிய மனைவி, அதனை தமது வாயினால் ஊதி போக்கினார்.
.
இதனைக் கண்டு வெகுண்ட நாயனார், எங்கனம் கீழ்மையான இச்செயலை செய்யத்துணிந்தார். வேறொரு வகையில் நீக்காமல் எச்சில் கொண்டு ஊதி நீக்குவது பெரும்பாவச் செயல். அச்செயல் புரிந்த உம்முடன் இனி நான் வாழுதற்கில்லை, உமைத் துறந்தேன் என்று உரைத்துச் சென்றார். அது கேட்ட மனைவியும் வருந்தி அஞ்சி ஒதுங்கி ஆலயத்தில் தங்கி விட்டார்.
.
அந்த இரவு துயில் கொண்ட பின் கனவில் இறைவன் எழுந்தருளி தம் திருமேனியை காட்டினார். உமது மனைவி ஊதிய இடம் நீங்கலாக மற்ற இடமெங்கும் சிலந்தியினால் ஏற்பட்ட கொப்புளம் என்று கூறியருளினார். விழித்த நீலநக்கர் இறைவனின் கருணையை வள்ளல்தன்மையை மனதில் கொண்டவராக ஆடிப்பாடி கூத்தாடி, ஆலயம் சென்று மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
.
சம்பந்தரைப் பற்றி கேட்டுணர்ந்து, அவரை தரிசிக்கவும் திருப்பாதம் தோழவும் ஆவல் மேலிட்டவரானார். அப்பொழுது சம்பந்தர் பல்வேறு ஸ்தலங்களுக்குச் சென்று இறைவனை பாடி, சாத்தமங்கையை வந்தடைந்தார் என்று அறிந்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டவராக, தமது சுற்றம் சூழ அவரை அழைத்து, விருந்தோம்பல் செய்து திருவமுதளித்து மகிழ்ந்தார். அவருடன் வந்த திருநீலகண்ட யாழ்பாணருக்கும் அவரது துணைவி மதங்கசூளாமணியாருக்கும் நடு வீட்டில் தாம் வேள்வி செய்யும் வேதிகை அருகே இடம் கொடுத்து உயர்ந்த மரியாதையை செய்தார். இவரது செயலால் அகமகிழ்ந்த சம்பந்தர் மறு நாள் பெருமானை பாடிய பதிகத்தில் இவரையும் சிறப்பித்து பாடினார்.
.
ஞானசம்பந்தரிடம் பெரும் பக்தி பூண்டு அவருடன் தாமும் புறப்பட முயன்றார் எனினும் சம்பந்தர் அவரை அவயந்தி பெருமானை பூஜித்து அத்திருத்தலத்தில் இருக்கும்படி பணித்தமையால் அதனை மீறாமல் அவரது ஊரிலேயே தங்கி விட்டார். சம்பந்தரிடம் பெரும் பக்தி கொண்டதால் அவரை தினம் அன்புடன் தினமும் நினைந்தார். திருஞானசம்பந்தரின் திருக்கல்யாணத்திற்கு வேதியராக புரோகிதம் செய்தவர் அப்பெருஞ்சோதியில் தாமும் கலந்து இறைவனுடன் உறைந்தார்.
.
ஓம் நமச்சிவாய

திருநீலகண்ட யாழ்ப்பாணர்





யாழ் இசைத்தல் பாணர் குலத்தின் சிறப்புக் கலை. யாழ் இசைத்த பாணர் என்பதால் யாழ்ப்பாணர் எனப்படுகிறார். திருஎருக்கத்தம்புலியூர் எனும் தலத்தில் பாணர் குலத்தில் பிறந்து சிவனாரின் அரும்புகழை யாழ் மீட்டி, பண் இசைத்து, தொண்டாற்றினார். திருத்தலங்கள் தோறும் யாத்திரை செய்து இவர் யாழ் இசைக்க, இவரது மனைவியார் மதங்கசூளாமணி, திருப்பாடல்கள் பாடி இருவரும் இறைவனுக்கு இசைமாலை சூட்டி வழிபட்டனர். அக்கால வழக்கப்படி பாணர்கள் கோவிலினுள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதனால் ஆலயத்தின் புறத்தே நின்றே இறைவனை துதித்து வந்தனர்.
.
சோழ நாடெங்கும் தலயாத்திரை செய்தவர்கள், பாண்டி நாட்டின் மதுரையை அடைந்து திருவாலவாய் கோவிலில் இறைவனுக்கு பண் இசைத்தனர். இறைவன் தொண்டர்கள் கனவில் தோன்று அவர்களை தம் முன் அழைத்து வரும்படி ஆணையிட்டார். பாணரும் இறைவன் விருப்பப்படி திருவாலவாய் கோவிலில் இறைவன் புகழை இசைக்க, தரையிலமர்ந்து  பண் இசைத்தால் சீதம் தாக்கி, யாழ் நரம்பு தளர்ந்துவிடுமென்று பலகை கொண்ரும்படி அசரீரி ஒலித்தது. அவ்வாக்கை சிரமேற்கொண்டு நிறைவேற்றிய தொண்டர்கள் பலகையில் பாணரை அமரச்செய்ய, பாணரின் இன்னிசை ஆலயமெங்கும் முழங்கியது.
.
பின்னர் திருவாரூரை அடைந்த பாணர் தம்பதியர் தமது மரபுப்படியே புறத்தே நின்று வழிபட்டனர். இன்னிசைக்கு இரங்கிய இறையனார், வடத்திசையில் வேறு வாயில் அருளி நாயனாரும் மனைவியும் அதனுள் சென்று யாழ்ப்பண் இசைத்து மகிழ்ந்தனர்.
.
யாழ்பாண நாயனார் திருஞானசம்பந்தரின் மேலான சிறப்பை உணர்ந்து அவரைக் காணும் ஆவல் கொண்டார். அவர் இயற்றும் பதிகத்திற்கு யாழ் இசைக்கும் விருப்பமும் கொண்டவராகி, சம்பந்தர் சென்ற இடமெல்லாம் உடன் சென்று இன்னிசை தொண்டாற்றினார்.
.
யாழ்பாணர் இசையினால் தான் சம்பந்தர் பாடல்கள் திறம்பட அமைகிறது என்ற சுற்றத்தினரின் பேச்சினால் மனம் ஒடிந்தவர், தம்மால் வாசிக்க முடியாதபடி பதிகம் இயற்ற சம்பந்தரை வேண்டினார். அவ்வாறே சம்பந்தர் "மாதர் மடப்பிடியும்” என்ற பாடல் பாட, அதன் நுணுக்கங்களை யாழில் இசைக்க முடியாமல் யாழை முறிக்க முயன்ற நாயன்மாரை தடுத்து தேறுதல் சொன்னதாகக் குறிப்பு. இவ்வகைப் பண்ணை யாழ்முறிப்பண் என்று கூறிவந்தனர். அதனையே இப்பொழுது நீலாம்பரி என்று சிலரும் அடாணா என்று சிலராலும் வழங்கப்படுகிறது என்ற கருத்து நிலவுகிறது.
.
திருநீலநக்க நாயனார், சம்பந்தர் சொல்லுக்கிணங்கி தமது வீட்டின் நடுவில் வேள்வி செய்யும் நித்தியாக்கினி வேதிகை அருகே யாழ்பாணருக்கும் அவர் மனைவியாருக்கும் இடம் அமைக்க, வெள்வித்தீ மேலும் சுடர் விட்டெரிந்து இவர்களை பெருமைப்படுத்தியது.
.
இவ்வாறு ஈடில்லா இசைத்தொண்டாற்றியவர் தமது துணைவியார் மதங்கசூளாமணியுடன் சம்பந்தர் திருமணத்தில் கலந்து பெருஞ்ஜோதியில் கலந்து ஈஸ்வரன் திருவடியில் இணையிலா பெருவாழ்வு பெற்றார்.
.
ஓம் நமச்சிவாய

November 04, 2020

திருநீலகண்ட நாயனார்



தில்லையம்பதி தமிழுக்கும் பக்திக்கும் ஈன்றுள்ள நாயன்மார்களுள் ஒருவர் நீலகண்ட நாயனார். குயவர் தொழில் புரிந்த இவரின் இயற்பெயர் அற்றுப்போகும் அளவிற்கு அவர் தில்லை நடராஜனிடம் பக்தி பூண்டிருந்தார். ஈசனின் நாமங்கள் பலவற்றுள் "திருநீலகண்டன்" எனும் திருப்பெயரையே மந்திரமாக உச்சரித்து "திரு நீலகண்டம்" என்று கூறுவாராதலால், திருநீலகண்ட குயவர் என்றே வழங்கப்பட்டார்.
.
குயவனாகிய இவர் தாம் படைத்த உயர்ந்த ஓடுகளை இறைவனின் அடியவர்களுக்கு அமுது படைக்க அளித்து தொண்டாற்றி வந்தார். இடையறாது சிவ சிந்தனையில் ஆழ்ந்து "திரு நீலகண்டம்" என்ற மந்திரச் சொல்லையே உரைத்தும் வாழ்ந்திருந்தார். இவரின் உயர்குணத்திற்கு ஈடு கொடுக்கும் நல்லாளாக இல்லாள் அமைந்திருந்தாள்.
.
இப்படி வாழும் காலத்தே விதி வசத்தால் சிற்றின்பத்தில் மனம் மிக நாடுபவரானார். பரத்தையரில் ஒருவளிடம் தன் இளமையை பங்கிட்டு இன்புற்றார். இதனையறிந்த மனைவி மிகவும் மனம் வருந்தியவளாக, கணவன் தமை நெருங்கும் வேளையில் "எமை தீண்டாதீர் திருநீலகண்டம்" என்று இறைவன் மேல் ஆணையிடுகிறாள். எமை என்று கூறியதால் இனி எந்தவொரு மாதையும் மனதாலும் தீண்டேன் என்று சபதம் மேற்கொண்டு வாழலானார். இல்லறத்திலும் துறவறம் மேற்கொண்டு இறைச் சிந்தனையன்றி இன்னொன்று இல்லாது இருவரும் வாழ்ந்து முதுமை எய்தினர்.
.
பக்தர்களின் பெருமையை உலகிற்கு உணரத்த எண்ணிய இறைவன் திருவிளையாடல் புரிந்தான். அடியவராக நாயன்மாரை அண்டினார். அடியவரை வரவேற்று அமுதளித்து தம்பதியினர் இனிது உபசரித்தனர். யாத்திரிகனான தம்மிடம் ஒரு அபூர்வ திருவோடு உள்ளதென்றும் அது கல்ப தருவைப் போன்று பெருமை வாய்ந்தது, அத்திருவோட்டை இவர்களிடம் பாதுகாப்பாக விட்டுச் செல்வதாக கூறி, தாம் வந்து திருவோட்டை மீட்டுக் கொள்வதாக கூறிச் சென்றார்.
.
சில நாட்களுக்குப் பிறகு அவர் மனையடைந்து திருவோட்டை திரும்பத் தருமாறு கேட்டார். பாதுகாப்பாக வைத்த திருவோடு இறைவன் லீலையால் மாயமாக மறைந்திருக்க, தம்பதியினர் திகைத்தனர். அடியவராக வந்திருந்த சிவனார், நாயன்மார் பொய்யுரைப்பதாக பெருங்கோபம் கொண்டு, அவர் பொய்யுரைக்கவில்லை என்றால் தமது மகனின் மீது ஆணையிடச் சொல்கிறார். தனக்கு பிள்ளைகள் ஏதுமில்லை என்ற நாயன்மாரிடம், மனைவி மீது ஆணையிடும்படி கூற அதற்கும் தயங்கியவர் தாம் மனைவியை தீண்டுவதில்லை எனச் சொல்ல, பொய் மேல் பொய்யுரைக்கும் உன்னை அந்தணர் முன் அழைத்து வழக்காடப் போகிறேன் என்று சினம் மிகுந்து வெகுண்டார்.
.
தில்லை அந்தணர் சபையில் தமது அந்தரங்கம் வெளிப்படும் வகையில் உண்மை கூறி தாம் மனைவியை தீண்ட முடியாது என்றுரைத்து மூங்கில் கழியின் ஒருபக்கத்தை நாயனாரும் மறுபக்கத்தை மனைவியும் பிடித்து குளத்தில் மூழ்கி சபதம் செய்தனர்.
.
மூழ்கி எழுந்தவர்கள் முதுமை நீங்கி இளமைப் பொலிவோடு எழுந்தனர். எதிரே சினம் மிகுந்த அடியவருக்கு பதில் சங்கரியுடன் சங்கரனார் ரிஷப வாகனனாக புலனின்பம் வென்ற தம்பதியரை வாழ்த்தி, நீளாயுள் அருளி மறைந்தார். இருவரும் நீண்ட நாட்கள் இறைப்பணிகள் செய்து, பின்னர் சிவலோகம் சென்று நீங்கா இன்பம் பெற்றனர்.
.
ஓம் நமச்சிவாய