July 21, 2020

கங்கை




புலன்களால் புழுதியேறி
படர்ந்திருந்த அடர் கறையை
படித்துறையிலே துலக்கி,
சினம் தொலைத்து; மோகம் களைந்து,
பக்தியெனும் கடலில் மூழ்கி,
முக்தியெனும் நல்முத்தெடுக்க,
தமது முறைக்காக
வரிசையில் காத்திருக்கும்
கட்டிடங்கள்.
– சக்திப்ரபா
(வல்லமை படப்போட்டிக்கு எழுதியது)

மாதவனே ! மாலவனே!




அஷ்டபத்தினி கொண்டாயோ
அச்சுதா! ஆண்டவனே
பதினாறாயிரம் பெண்டிருடன்
பலகோடியுந்தான் சேரட்டுமே!
இன்னுமொன்றைக் கூட்டிவிடு..
மாதவா மாலவனே,
மங்கையெனை மார்பில்வாங்கி- நல்
மங்கல நாண்பூட்டி - எழில்
மலர்மாலை தனைச்சூட்டி
மாதெனையும் சேர்ததுக்கட்டு!
...
ShakthiPrabha

கணினிக் காதல்




அடுத்த மகாமகத்தில்
ஆயுசும் கூடிவிடும்
கடுத்த வெயிலில்
காய இனி ஆகாது
*
வீசும் காற்றே
வேள்வித் தீயாக
மாசும் போகவே
மாசிமகம் போதுமென
காசியென்றெண்ணியே
கணினியை கையிலேந்தி
முங்கித்தான் எழுந்து...
*
'சீச்சீ' என விரட்டி
தூரம் போக சொல்லி
'போ போ' என்றே
புறந்தள்ளி வீசி
மேனிதுவட்டி மேலெழும்போது,
சின்னதும் பெரியதும்
பொல்லாததும் அல்லாததும்
அனைத்தும் அற்றிருக்க,
ROMல் பின்னிப் பிணைந்து
ராகமிசைக்கும் கிராதகன் நீ
*
இருந்துவிட்டுப் போ! இனி
தொடரும் மகாமகங்களுக்கு
தொடரா தென்கவிதை
இருவருமே தோற்றுப் போனோம்!
-ShakthiPrabha

கோரோனாவுக்கு கேள்வி






ஓடியாடி உழைப்பவர்கள்
ஓய்ந்து ஒதுங்க
ஆடிப்பாடி அடங்காது திரிபவர்கள்
வாய்மூடி முடங்க
அடுக்களையை அண்டாதவர்களும்
அறுசுவைகூட்டி அதில்சுகம் ஈட்ட
யோசித்தும் புலப்படவில்லை...
கோளின் வினையதை
தோளில் தாங்கி
கோரநடமிட்டு கொன்று குவிக்கும்
கொரோனாவெனும் காலதூதனே!
நீ நல்லவனா கெட்டவனா
*
*
பூமித் தாயை ஏறி மிதித்து - அவள்
பூமடி முழுதும் மலம்-வாரி இறைத்து
கேவியழும் அவள் குரலை தவிர்த்து
பாவியாகி நல்மதியும் இழந்தோம்!
மாரி தொலைத்த தரிசு மண்ணில்
காடுமலையும் கட்டிடங்களாக
காணும்யாவும் பசிக்கிரையாக
கேடுகெட்ட உலகமிதற்கு
கெடுவைக்க வந்த உனக்கே
இக்கேள்வி...
நீ நல்லவனா கேட்டவனா
*
*
நாளும் நலிந்து - உடல்
மேலும் மெலிந்து
தனமும் குன்றி
மூலதனமும் இன்றி
வாடும் ஏழைகள்
வீசாத சிரிப்பில் - நாம்
நாடும் இறைவன்
நீள மௌனத்தில் கரைய....
வீதியில் இறங்கினால் - உயிர்
பாதியும் போகுமென
பதுங்கி பயந்து;
தொற்றும் வினையது - நமை
பற்றுமெனப் பதறி
காலை முதல் மாலை வரை
காணும் யாவையும் சுத்திகரிக்கும்
சீரான வாழவே மேலானதென்ற
சுடும் நிலைமையை கடும் சொற்கொண்டு
கட்டளையிடும் நீ
நல்லவனா கெட்டவனா
*
*
குடும்ப உறவுகள் நேசம் நாட,
கூடிக் களித்து பாசம் கூட,
பூமித் தாயின் வெப்பம் நீங்கி
பூகோளத்தின் மாசு மறைய;
இளமஞ்சள் பூசிய இனிய விடியலில்
பட்சிகள் கீச்சொலி புதுமெட்டுகள் கூட்ட,
அந்தி வானத்து ஆரஞ்சு ஆதவன்
ஆதங்கத்துடன் அப்புறம் அகன்றபின்
கதிரொளியைக் கடன்வாங்கி
மினுக்கும் தண்மதியிடம்
இரவின் மடியில் கிசுகிசுக்கும்
இலட்சம் நட்சத்திரங்களை
இன்று கண்டு ரசிக்கும் அவகாசம் - சற்றே
நின்று சுவாசிக்கும் நொடிநேரம்
நானும் குழம்புகிறேன்
நாடுகளையெல்லாம் சூறையாடும் நீ
நல்லவனா கெட்டவனா

***

ShakthiPrabha

Number 13





எத்துடன் எதனை பெருக்கினும்
கைக்கெட்டாக் கனியவள்
அத்துடன் அதனை வகுத்தும்
வாரா பத்தினியவள்
பத்துடன் மூன்றை பக்குவமாய்க் கோர்த்தால்
பாவையவள் பட்டென்றே
பக்கத்தில் வந்திடுவாள்
பக்தரைக் கண்டால் ஒதுங்குபவள்
பத்தடி தள்ளியே பத்தியம் காப்பவள்
பாடல்களை இசைக்காதவள்
கணக்குக்குப் பிழையானவள்
சகுனத்தின் சகுனியவள்!
இத்தனை ஏளனத்திலும்
காரியத்தின் கண்ணாகி
முன்னோர்க்கு முக்தியளிக்கும்
சக்தியவள் பதிமூன்றே!

ShakthiPrabha

July 18, 2020

தண்டியடிகள்


தண்டியடிகள் நாயனார் | Dinamalar

திருவாரூரின் பெருமைக்கு இன்னொரு மணிமகுடம் தண்டியடிகள் பிறப்பு. பிறவியிலேயே கண்பார்வை இழந்தவர், சிவனை அகக்கண் கொண்டு தரிசித்து பூஜித்து வரலானார். சதா பஞ்சாட்சரம் ஓதி திருவாரூர் பேராலயத்தில் குடி கொண்ட தியாகராஜரை வலம் வந்து இடையறாது பக்தி செய்து வந்தார். 
.

திருவாலையத்தின் மேற்கு திசையில் குளத்தங்கரை எங்கும் சமணர்களின் ஆட்சி பெருகி வந்தது. மடங்கள் கட்டிக்கொண்டும் தமது கொள்கைகளை பரப்பிக்கொண்டும் இருந்தமையால், ஆலய திருக்குளமருகே பெருகி வரும் சமணர்கள் ஆதிக்கம் கண்டு அஞ்சி, தம்மாலான திருத்தொண்டு புரிதற்கு கமலாலய திருக்குளத்தை மேலும் தூர் வாறி, அதன் ஆழம் பரப்பளவை முன் போல் பெரிதாக்க திருவுள்ளம் கொண்டார்.
.

கண்பார்வையற்ற நாயன்மார், குளத்தின் மேட்டில் ஒரு தறி நட்டு, நடுக்குளத்தில் இன்னொரு தறி நட்டு, இரண்டையும் கயிற்றில் இணைத்து, மண்வெட்டியால் மண்ணை வாறி கயிற்றின் உதவியுடன் கூடையில் சுமந்து சுமந்து மேலேற்றி கொட்டி சீரமைக்கும் பணியினை தனியொருவராக செய்து கொண்டிருந்தார். இதனை கண்ணுற்ற சமணர்கள், மண்வெட்டியால் தோண்டுவதால் அங்கு உயிர்வாழும் சிறு உயிரினங்கள் இன்னலுக்கு உட்பட்டு இறந்து போகும் என்று அறிவுறுத்தினர். சிவத்தொண்டின் அருமை உங்களுக்கு விளங்காது என்று மறுத்துக்கூறி தண்டியடிகள் பணியை தொடர்ந்தார்.
.

மந்தபுத்தியுடன் கூடிய நீ கண்ணற்றவன், அதனுடன் காதும் கேளாமல் போனதோ என்று இடித்துரைத்து கேலி செய்தனர். மனம் வருந்திய நாயன்மார், சிவனாரின் திருவடியன்றி எதனையும் நான் காணேன். அவர் திரு நாமத்தை காதால் கேட்கிறேன். என் ஐம்பொறிகளாலும் அவரையே துதிக்கிறேன் அவர் அருளால் என் கண்கள் ஒளிமிகுந்து உங்களுக்கு கண் அற்று போனால் என்ன செய்வீர்கள் என்று வினவினார். அவ்வாறு நேர்ந்தால் தாங்கள் திருவாரூரை விட்டு அகலுவதாக உரைத்த சமணர்கள் அவரது மண்வெட்டி கயிற்றை பிடுங்கிக்கொண்டு அவர் செய்யும் தொண்டிற்கு ஊறு விளைவித்தனர். 
.

பெரும் வருத்தம் கொண்டு திருக்கோவிலை நாடி, இறைவனிடம் முறையிட்டார். இரவு கனவில் காட்சி தந்தருளிய பெருமானார், தண்டியடிகளுக்கு பார்வை அருளி, அவரது தொண்டிற்கு துணை நிற்பதாகவும் திருவாய்மொழிந்து மறைந்தார். அன்றிரவே சோழமன்னர் கனவிலும் தோன்றி, தண்டியடிகளுக்கு துணை நின்று நியாயம் வழங்குமாறு கூறி மறைந்தார். 
.

ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்ற ஆவன செய்த மன்னன், தண்டியடிகளையும் சமணர்களையும் அழைத்து நடந்ததை இருசாராரும்\ சொல்லக் கேட்டு அறிந்தார். சமணர்கள் சபதத்தில் தாங்கள் தோற்றால் ஊரை விட்டு அகலுவதாக மீண்டும் உறுதி செய்தனர். சிவபக்தரான தண்டியடிகள் பஞ்சாட்சர மந்திரம் ஓதி, திருக்குளத்தில் மூழ்கி எழுந்தார். ஒள்வீசும் கண்கள் பெற்றவராய் கோபுரத்தை வணங்கி அன்பின் பேருக்கால் கண்ணீர் மல்க இறைவனை துதித்தேற்றினார். சமணர்கள் கண்கள் இழந்தவர்களாக அரசாணையை ஏற்று அனைவரும் ஊரை விட்டு விலகினர்.
.

தண்டியடிகள் மன்னர் பேராதரவுடன், திருக்குளத்தை கட்டி முடித்து மேலும் பல தொண்டுகள் புரிந்து பல காலம் சிறப்புற்று வாழ்ந்து பொன்னார் மேனியன்
திருவடி நிழலில் நற்கதி அடைந்தார்.

.
ஓம் நமச்சிவாய

July 06, 2020

சோமாசிமாற நாயனார்



திருவம்பர் என்பது சோழபெருநாட்டிலுள்ள நல்லூர். இவ்வூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் சோமாசிமாற நாயனார். சிவமந்திரம் அன்போடு ஓதி வெள்விகள் யாகங்கள் வளர்த்து ஈசனிடம் மிகுந்த அன்புகொண்டொழுகினார். மந்திர ஜபங்கள் , நித்திய வழிபாடுகள் எதுவும் குற்றமற்றவராக புரிந்து நல்வாழ்வு வாழ்ந்திருந்தார். எக்குலமாயினும், எக்குணம் கொண்டிருந்தாலும், சிவனடியார்கள் என்று இறைவன் பெயரை அன்புடன் ஓதுவார்க்க்கு திருவமுது செய்வித்து பணிந்தார். புகழின் மயக்கத்தில் வீழாமல் பயனெதுவும் கருதாமல் கர்மயோகம் செய்து காம க்ரோதம் முதலிய குணங்களை விட்டொழித்தவராய் விளங்கினார். 
.

இந்த நாயனார் சுந்தரமூர்த்தி நாயனார் திருவடிகளை பக்தியுடன் பணிந்து அதனால் மேலும் சிறப்புற்று ஈடு இணையில்லா சிவபதம் அடைந்தார். 
.
ஓம் நமச்சிவாய