சோழ நாட்டில் காவிரிபூம்பட்டினத்தில் வைசியர் குலத்தில் பிறந்தார். பெரும் செல்வந்தாராக பொருளீட்டி நல்வாழ்வு வாழ்ந்திருந்தார். இல்லற தர்மத்தை செவ்வனே கடைபிடித்து சிவனடியார்களுக்கு இல்லையென சொல்லாமல் அவர்கள் விரும்பியவற்றை வழங்கி பணி செய்திருந்தனர்.
இவர்தம் பெருமை உலகறியச் செய்ய சித்தம் கொண்ட ஈசன், திருவிளையாடல் புரிந்தான். தம்பதியினரின் வீட்டிற்கு அந்தணர் வடிவத்தில் வருகை தந்தருளினார். இயற்பகை நாயனாரும் அவரை உபசரித்து வணங்கி நின்று, தம்மால் இல்லையென்று சொல்லாது இருக்கும் ஒன்றை விரும்பிக் கேட்டு தமக்கு அருளுமாறு வேண்ட, இறையனார், பக்தரின் மனைவியை விரும்பிப் பெற்றுச் செல்ல வந்திருப்பதாக உரைத்தார். அது கேட்டு பெரும் மகிழ்ச்சியுற்று, மனைவியை மலர்ந்த முகத்துடன் அந்தணருக்கு மனமுவந்து அளித்தர். மனைவியாரும் சில நொடிப்பொழுதே மனம் வெதும்பினாலும், உடன் தெளிந்து மணாளனின் ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்றும் பொருட்டு அவருடன் புறப்பட்டார். அதுமட்டுமன்றி, ஊராரும் உற்றாரும் தடுத்து இடையூறு விளைவிக்க வாய்ப்புள்ளதென்பதால், ஊர் எல்லை வரை இயற்பகையாரே துணை நின்று பாதுகாத்து அனுப்பி வைக்குமாறு கட்டளை பிறப்பித்தார்.
சிவனடியார்கள் பிறப்பித்த கட்டளையை சிவனே பிறப்பித்த கட்டளைக்கு சமமாகக் கருதிய பக்தரும், உடன் செவி சாய்த்தார். வழியில் அவர்களை தடுத்து உபதேசித்த ஊராரையும், நாயன்மாரையும் சிவனடியாரையும் வசைசொல் பாடி அவர்களோடு சண்டையிட்ட உறவினரை, பகைத்து, மேலும் சண்டை வலுக்கவே வீறு கொண்டெழுந்தார். பயந்தோடியவர்களைத் தவிர மற்றோறை வாளால் வெட்டி சாய்த்து, ஊர் எல்லை வரை துணை நின்று அனுப்பி வைத்தார். திரும்பப்போகலாம் என்ற கட்டளை பிறந்ததும், அந்தணரை ஸ்தோத்திரம் செய்து மறுமுறை திரும்ப பாரமல் சஞ்சலமின்றி வந்த வழி சென்றவரை, இறைவன் தடுத்து, உம்மையும் உன் மனைவியுடம் எம்மிடத்திற்கே இட்டு செல்ல வந்தோம் என்றருளி சிவலோக பிராப்தியளித்தார். அவர்களுக்காக சண்டையிட்டு உயிர் துறந்த மித்ர பந்துக்களுக்கும் வானுலக இன்பம் அருளினார் என்று கூறியருள்கிறார் சேக்கிழார்.
ஓம் நமச்சிவாய
No comments:
Post a Comment