இசைஞானியார், ஞான சிவாச்சாரியாருக்கு மகளாகப் பிறந்தார். திருமணப்பருவம் எய்தியவரை, அவரது தந்தை சிவ சிந்தனையுடையவரான சடையநாயனாருக்கு மணமுடித்து வைத்தார். சடைய நாயனார் சிவபெருமானின் அடிமைக்கு, அடிமை பூணும் இலக்குடையவராய் வாழ்ந்தார். ஆதிசைவ குலத்தவர்கள் இருவரும் திருமுனைப்பாடியிலிருக்கும் திருநாவலூரில் வாழ்ந்து வந்தனர் .
சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்ற பேற்றிற்கே இசைஞானியாரையும் சடையநாயனாரையும் நாயன்மார்களாகக் கொண்டாடி மகிழும் பாக்கியம் பெறுகிறோம். ஈன்ற பொழுதை விட சான்றோன் என்ற சொல்லுக்கே பெரிதுவக்கும் தாய், தந்தையருக்கு சுந்தரமூர்த்தியைப் போன்ற இறையம்சம் நிரம்பிய அருளாளர் மகனாகப் பிறந்த பெருமையே இருவரையும் சிவகதிக்கு இட்டுச் செல்ல போதுமானதாய் இருந்தது. கொண்டாடப்படும் மூன்றே மூன்று பெண் நாயன்மார்களில் இசைஞானியாரும் ஒருவர்.
திருமுனைப்பாடியிலுள்ள நரசிங்க முனையர் எனும் செல்வந்தர் (இவரும் நாயன்மார்களில் ஒருவர்) நம்பியாரூரன் என்றழைக்கப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனாரின் அழகில் தன் உளம் பறிகொடுத்து அவரை வளர்க்கும் பாக்கியத்தை சடையநாயனாரிடமும் இசைஞானியாரிடமும் வேண்ட, பற்றற்றவர்களான அம்மேன்மக்கள் உடனெ தம் மைந்தனை அவருக்கு வார்த்து நெடிதுயர்ந்து நின்றனர். நன் மக்களைப் பெறுதலும், முறையாக வளர்த்தலுமே பேசற்க்கறிய அருளை பெற்றுத்தரும் என்பது இதனால் சான்று.
ஓம் நமச்சிவாய
No comments:
Post a Comment