திருமங்கலம் எனும் சோழர் திருத்தலத்தில் பிறந்த இடையர். ஆனிரை மேய்த்தவரென்பதால் ஆனாய நாயனார். வெய்ங்குழலை ஊதுவதில் வல்லவர். அல்லும் பகலும் அனு தினமும் சிறு நொடியும் இறை சிந்தனையை விட்டு அகலாதவர். ஆனிரை மேய்க்கும் பொழுதும் குழலூதி அதில் சிவனை துதிக்கும் ஐந்தெழுத்து மந்திரத்தை பாடலாக்கி இசைத்திருப்பார். இவர் பாடலை மாடுகளும் கேட்டுய்ந்து களிப்புறும். இவரது இசைக்கு மக்கள் மட்டுமன்றி மாக்களும் மயங்கி தம் நிலை மறப்பர்.
திருநாள் ஒன்றில் தம் கேசம் அலங்கரித்து, மலர் அணிந்து, மலர்மாலை சூடி ஆனிரை மேய்க்கப் புறப்பட்டார். அங்கு கண்ட காட்சியில் தமையிழந்தார். எங்கும் பூத்துக்குலுங்கும் எழில் சோலையில் முல்லையும் நறுமலர்களும் கொன்றை மலர்களும் உள்ளம் கவர்ந்து மெய்மறக்கச் செய்தன. கொன்றை மரத்தில் மலர் முகிழ்ந்திருந்தது சிவனார் கொன்றை மலர் மாலையணிந்து காட்சிதருவது போல் அவர் கண்ணுக்கு புலப்பட்டது. சிவனாரின் ஐந்தெழுத்து இசையாகி ஒலித்தது. அவ்விடத்து எழில் அனைத்தும் அவர் குழலிசை வழியே தம் வனப்பை வெளிப்படுத்தின. ஊதிய குழலொலிக்கு ஆனிரையும் மயங்கியது. மான்களும் மயிலும் களிநடம் புரிந்தன. அனைத்து ஜீவனும் தம் பகை மறந்து ஒருமைப்பட்டு அன்பொழுக இசையில் இன்பம் பருகின. காற்றும் மரமும் அருவியும் சலனமற்று அவர் கானம் கேட்டவண்ணமிருந்தன. கல்லும் கரையும் தேவ கானம் பொழியக்கண்டு தேவர்கள் கந்தர்வர்கள் கின்னரர்கள் என அனைவரும் இறங்கி வந்து இசைக்கு வசப்பட்டு நின்றிருந்தனர்.
இத்தகைய தேவகானம் சிவபெருமான் செவியில் இன்னமுதென விழுந்து, அவரை புறப்பட்டு வரச்செய்தது. உமையவளுடன் காட்சி தந்தவர் ஆனாய நாயனரை குழலூதியபடியே தமை வந்தடைய அருளினார். பூமழை பொழிய, முனிவர்களும் தேவர்களும் துதிக்க, குழலூதிக்கொண்டே இறைவனுடன் ஜோதியில் கலந்து திருக்கையிலை சென்றடைந்தார். இவர் வாழ்ந்த காலப்பகுதி கிபி ஏழிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுக்குள் என்று தோராயமாக கணிக்கப்பட்டிருக்கிறது.
ஓம் நமச்சிவாய
குழலூதும்நாயனார் போல
ReplyDeleteஆமாம் சார். எனக்கும் கண்ணன் தான் நினைவுக்கு வந்தான். குழலூதும் நாயனார்.
Delete