February 02, 2019

திருப்பாணாழ்வார்





குலவேற்றுமைகளும் அதனால் பிறரை சிறுமைப்படுத்தும் இழிச்செயல்களும் காலம் தோறும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஆழ்வார் காலமும் இதற்கு விதி விலக்கல்ல. பாணர் குலத்தோர் இசை வல்லுனர்களாக பெயர் பெற்றுள்ளனர். பிற்காலங்களில் பாணர் குலம் தீண்டுதற்கு ஆகாத குலமென்று தள்ளி வைக்கப்பட்டது.
திருப்பாணாழ்வார் பாணர் குலத்தில் பிறந்து, உறையூர் அருகிலுள்ள திருக்கோழி கிராமத்தில் வாழ்ந்தார். பெருமாள் மேல் பக்தி பூண்டு இசையால் அவர்க்கு ஆராதனை செய்து மகிழ்வார். பாணர் குலத்தவர்க்கு விதித்த கட்டுப்பாட்டை மனதில் கொண்டு கோவிலுள் செல்லாமல் காவிரிக்கு அக்கரையிலிருந்தே பாடல் பாடி திருவரங்கத்து பெருமாளை மகிழ்வித்து வந்தார்.
ரங்கநாயகனுக்குத் திருமஞ்சனம் செய்ய காவிரி நீர் சுமந்து வந்த கோவில் பட்டர், வழியில் பாட்டுப் பாடி உருகி நிற்கும் பாணரை பல முறை விலகும் படி கேட்டுக்கொண்டும் விலகாததால், செய்வதறியாது திகைத்தார். திருமஞ்சனம் செய்ய நீர் கொண்டு போகும் வேளையில் பாணரைத் தீண்டினால் சுத்தமும் ஆச்சாரமும் போய்விடுக்கூடும் என்று கருதி வேறு வழியின்றி அவர் விலக சிறு கல் எறிந்தார். அந்தக் கல் பாணரின் தலையில் பட்டு குருதி வழிந்தது. அதை கவனிக்காத அர்ச்சகர் அரங்கனுக்கு அபிஷேகம் செய்ய புறப்பட்டார். பாணரின் உயர்ந்த உள்ளமும் பக்தியின் மேன்மையும் உலகுக்கு உணர்த்த எண்ணிய திருவரங்கத்தான், குருதி வழிய காட்சி தந்து, திகைத்த பட்டருக்கு பாணரின் உயர்வை உணர்த்தும் பொருட்டு, பாணாழ்வாரை, அர்ச்சகர் தமது தோளில் சுமந்து திருக்கோவிலுள் வரும்படி ஆணையிட்டார்.
திருப்பாணாழ்வார் பெருமாளின் அங்க அழகை விவரித்து பாடல் எழுதியுள்ளார். இவர் பாடல்களுள் பெருமாளின் திருவழகை விவரிக்கும் பத்துப் பாடல் 'அமலனாதிபிரான்' என்றழைக்கப்பட்டு திவ்யப்பிரபந்ததில் சேர்க்கப்ப்ட்ட முத்துக்கள். ஆண்டாளைப் போலவே ஸ்தூல உடலுடன் பெருமாளுடன் ஐக்கியமானதாக சரிதம்.

No comments:

Post a Comment