சீர்காழியிலுள்ள திருக்குரையலூரில் பிறந்தவர் திருமங்கையாழ்வார். சோழ மன்னனின் படைத்தலைவனாக விளங்கியவர் வீரத்திலும் தீரத்திலும் பெரிதும் போற்றபட்டு சோழமன்னனாலேயே அரசனாக்கப்பட்டவர். சோழப்பேரரசன் திருமங்கை எனும் நாட்டை, அவர் படைத்தலைவனுக்கு பரிசளித்து குறு-நில அரசனாக்கினான்.
நீலன் என்று இயற்பெயர் பெற்ற படைத்தலைவன், திருமங்கையின் அரசனானான். அரசன் எப்படி ஆழ்வாரானார்? ஒழுக்கத்திலும் உயர்விலுஇம் சிறந்த ஒருவரை மேலும் மேன்மையான பாதைக்கு மாற்றி அழைத்துச் செல்ல தக்க குணமுள்ள மாதரசியாலே முடியும். திருமங்கை மன்னன் குமுதவல்லி என்ற பெண்ணின் மேல் காதல் கொண்டு திருமணம் புரிந்த பின், அவள் பின்பற்றும் வைணவ நெறியை தானும் பின்பற்றலானான். சிறிது சிறிதாக மன்னனை பெருமாளிடம் பெரும் பித்து வைக்கும் அளவுக்கு குமுதவல்லியால் மாற்ற முடிந்தது. போரும் குருதியும் வெற்றிக்களிப்பும் கண்டு மாவீரன், திருமாலுக்கும் அவர் அடியவருக்கும் கைங்கரியம் செய்யும் எளிய பக்தனாக மாறிப்போனார். சேவையில் ஈடுபட்டே தன் செல்வம் இழந்தார்.
அதனால் சோழ மன்னருக்கு வரி செலுத்த முடியாமற் போயிற்று. சினந்த மன்னன் திருமங்கையாழ்வாரை சிறைபிடித்தார். திருமால் இவர் சார்பில் பணம் கொடுத்து காத்தருளியதை அறிந்து சோழனும் ஆழ்வாரை விடுவித்து அவர் செலுத்திய வரிப் பணத்தையும் திரும்பக் கொடுத்தான்.
திருமங்கையாழ்வார் கள்வனைப் போல் வேடமிட்டு, வழியில் அகப்படும் பெரும் செல்வந்தர்களிடம் பொருள் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இவரை ஆட்கொள்ளும் பொருட்டு வைகுந்தவாசன், மன்னன் வழக்கமாக களவாடக் காத்து நிற்கும் பாதையில் , ஸ்ரீலக்ஷ்மியுடன் மணக்கோலத்தில் ஒரு அந்தணராகத் தோன்றி, தம் பொருளனைத்தையும் களவு கொடுத்தார். எவ்வளவு முயன்றும் ஆழ்வாரால், களவாடிய நகைகளையும் பொருட்களையும் நகர்த்தி எடுத்துச் செல்ல முடியவில்லை. பின்னர் அந்தணராக வந்த பகவான் மந்திரோபதேசம் செய்து நல்வழிக் காட்டியருளினார்.
திருமங்கையாழ்வார் 'பெரிய திருமொழி', 'திருக்குறுந்தாண்டகம்", சிறிய திருமடல், பெரிய திருமடல் உட்பட ஆறு நூல்கள் எழுதியுள்ளார். மற்றோரைக் காட்டிலும் அதிக பெருமாள் கோவில்களை மங்களசாசனம் செய்த ஆழ்வார் திருமங்கையாழ்வார்.
No comments:
Post a Comment