அழகிய எழில்மிகு சோழவள நாட்டில் நாட்டியத்தான் குடியில் தோன்றியவர் கோட்புலி நாயனார். வேளாளர் குலத்தில் தோன்றி, சோழ அரசனின் படைத்தலைவராக சிறப்பாக வாழ்ந்திருந்தார். கணக்கிலடங்கா வீரதீர செயல்கள் செய்து பகைவரை வீழ்த்தியதால் கோட்புலி என்ற பெயர் வர காரணமாயிருக்கலாம்.
.
வீரதீர பராக்ரமத்தில் பெயர் பெற்ற கோட்புலியார், பெரும் சிவபக்தராகவும் விளங்கினார்.
.
சுந்தரரை பெரிதும் போற்றி வணங்கி தம் இல்லம் எழுந்தருளும் படி வெண்டும் நாயனார், அவருக்கு பாத பூஜை புரிந்து துதித்தேத்தி, சுந்தரரை தம் புதல்விகளான சிங்கடி, வனப்பகை இருவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறார். இருவரையும் தம் மடி மீது அமர்த்தி, அவர்களை தம் புதல்விகளாக ஏற்று உயர்த்தினார் சுந்தரர். கோட்புலியாரின் மேன்மையை பாடும் சுந்தரர், தம்மை சிங்கடியப்பன் எனக் கூறி, உறவின் முறையை விளக்கி நெகிழ்கிறார்.
.
சேனாதிபதியாக தாம் ஈட்டும் பொருட்செல்வத்தை சிவனாரை போற்றும் பணிகளுக்கு செலவிட்டு வந்தார். பொருளைக் கொண்டு நெல் வாங்கி திருவமுது செய்வித்தார். வீட்டில் மலையளவு நெல் குவித்து கோவில் திருப்பணிக்கும் அமுதிடும் பணிக்கென சேமித்திருந்தார்.
.
போர் மூண்டு போர்முனைக்கு செல்லும் முன், உறவினர் அனைவரையும் வருவித்து, இறைவனுக்கென நெல் சேமித்து வைத்திருப்பதை உபயோகிக்க வேண்டாமென அறிவுறுத்தி தாம் திரும்பும் வரை அவற்றை பத்திரப்படுத்திச் சென்றார். இறைவன் திருவிளையாடலினால் கடும் பஞ்சம் ஏற்பட்டது. சுற்றதார்களுக்கு குந்துமணி அரிசி, நெல் இல்லாமையாலும், பசியால் மடிந்து விடுவோமென்ற நிலையில், நெற்குவியலை உபயோகிக்க துணிந்தனர். அதற்கெற்ப பரிகாரம் செய்து இன்னும் அதிகம் அற்பணித்து விடலாம் என்று சமாதானம் கூறிக்கொண்டவராக நெற்குவியலை உணவுக்கு உபயோகித்தனர்.
.
சில நாட்களில் பகைவரை வென்று நாடுதிரும்பிய கோட்புலியார் இச்செயல் அறிந்து வெகுண்டார். இறைவனுக்கென சேமித்திருந்த உணவை மனிதர் உண்ணத்தகுமோ என்றெண்ணி, அதனை உபயோகித்து உண்ணத் துணித அத்தனை சுற்றத்தாரையும் அவர்கட்கு துணை செய்தோரையும், தந்தை தாய் உறவினர் எனும் பாராது வெட்டிச் சாய்த்தார். பச்சிளம் குழந்தையொன்றும் விட்டு வைக்க மனமின்றி, இதுவும் நெல் உண்டவளின் முலைப்பாலை அல்லவோ குடித்திருக்கும் என்று வாளால் துண்டாக்கினார்.
.
சோதித்தது போதுமென்று இரங்கிய ஈசன் கோட்புலியாருக்கு காட்சி தந்து, சுற்றத்தார் அத்தனை பேரும் பாவங்கள் நீங்கி உயர்ந்த நிலை அடைந்து, பிறவா வரம் பெற்றனர் என்று அருளி நீயும் நம்முடனே திருக்கைலாயம் வருவாய் எனத் திருவாய் மலர்ந்து தம்முடன் சேர்த்துக்கொண்டார்.
.
ஓம் நமச்சிவாய
No comments:
Post a Comment