January 09, 2019

குலசேகர ஆழ்வார்




ஒவ்வொரு ஆழ்வாரும் வெவ்வேறு தனித்துவத்துடன் விளங்கினாலும் நாராயண பக்தி ஒன்றெ அனைவரையும் ஓரிழையில் இழைத்து ஆழ்வார்கள் என்ற மாலையில் பூக்களாக திகழ்ச் செய்கிறது.
கேரளாவிலுள்ள கருவூரில் (கொல்லிநகர்) ஸ்ரீராமனின் அவதார நட்சத்திரமான புனர்பூசத்தில் அவதரித்தார். கௌஸ்துப மணியின் திருவம்சமாக கொண்டாடப்படுகிறார். வாழ்ந்த காலம் எட்டாம் நூற்றாண்டு என நூலேடுகள் உரைக்கின்றன.
புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்து முறையே ராமபக்தியே தம் பிறப்பின் இலக்காக வாழ்ந்தவர். சங்க கால சேரர் . சந்திர குலத்து அரச வம்சத்தவர். சிறந்த முறையில் நீதி வழுவாமல் ஆட்சி செலுத்தி தமது எல்லையையும் விரிவு படுத்தியவர். பகவானின் பக்தியுடன் அவர் அடியார்களிடமும் அளவிலா பணிவும் கொண்டிருந்து, உதவிகள் புரிந்து வந்தார். பொறாமையுற்ற அமைச்சர்கள் பாகவதர் மேல் திருட்டுப் பழியை சுமத்த, தானும் பாகவதன் என்பதால் தனக்கும் அப்பழி சேரும் என்றுரைத்து பக்தர்களின் பேரில் களங்கமில்லை என்பதை விஷப்பாம்புள்ள குடத்தில் தமது கையை தீண்டுதற்களித்து, துணிவுடன் பக்தர்களைக் காத்தார்.
இராமன் தனியே அரக்கர்களுடன் போரிட்ட கதையை கேட்டதும் எம்பிரானுக்கு என்ன நேருமோ என்று கலக்கம் கொண்டு தம் படையனைத்தையும் திரட்டி கடற்கரையில் முற்றுகையிட்டு "ராட்சசர்கள் எங்கே எங்கே" என்று முழக்கமிட்டு, ராமனுக்கு உதவி செய்ய நின்ற வேளையில், ஸ்ரீராமபிரான் சீதாதேவி, லக்ஷ்மணன் சஹிதம் குலசேகர ஆழ்வாருக்கு காட்சி அளித்து ஆட்கொண்டதாக வரலாறு.
இறைவன் காட்சி கிட்டியபின், அரச போகத்தை வெறுத்து துறவு பூண்டார். பெருமாளுக்கு தாசன் என்றதால் இவரையும் குலசேகர பெருமாள் என்று அழைக்கலாயினர். இவர் எழுதிய பிரபந்த மொழியும் 'பெருமாள் திருமொழி' என்றாயிற்று. தமிழ் மொழி மட்டுமின்றி வடமொழி நன்கு அறிந்தவர். வட மொழியில் 'முகுந்தமாலை' என்ற நூல் இவரால் இயற்றப்பட்டது. சேரகுலவல்லி என்ற தம் மகளையும் அரங்கனுக்கே மணமுடித்தார்.
பல க்ஷேத்திரங்களை தரிசித்தவர், மன்னார் கோவிலில் பெருமாளை தரிசித்து அங்கேயே முக்தி அடைந்தார்.

No comments:

Post a Comment