( நின்றிருப்பவர் மதுரகவியாழ்வார். அமர்ந்து திருவாய் மொழிந்தவர் நம்மாழ்வார்)
பாண்டிய நாட்டின் திருக்கோளூர் எனுமிடத்தில் ஒன்பதாம் நூற்றாண்டு பிறந்தவர் மதுரகவியார். நம்மாழ்வாருக்கு முன் பிறந்தவர். பின்னரும் வாழ்ந்தவர். செவிக்கும் உள்ளத்துக்கும் இனிக்கும் கவிதைகள் படைத்தமையால் காரணப்பெயராக மதுரகவி என்றழைக்கபட்டார். உலக விஷயங்களில் நாட்டமில்லாதவராகவும், நாராயண பக்தி கொண்டவராகவும் சிறு வயது முதல் தம் பாதையை வகுத்துக் கொண்டார். வடமொழிப் புலமையும் கைவரப் பெற்றிருந்தார். வட நாட்டு யாத்திரைக்கு சென்றவரை பேரொளி ஒன்று ஈர்த்தது. ஒளியின் திசையை கண்டுணர்ந்து அதனைத் தொடர்ந்தவர் நம்மாழ்வாரை அடைந்தார். தமது ஆறாத் தாகத்தை கேள்வியாக்கினார். நம்மாழ்வாரின் திருவாய் மொழிந்த விடையே பெருந்திருப்தி அளித்து நம்மாழ்வாரை குருவாக ஏற்கப்பணித்தது. தத்துவங்கள் யோக ரகசியங்கள் அனைத்தும் குருவிடம் கற்றுத்தெளிந்தார். "கண்ணி நுண் சிறுத்தாம்பு" என்ற பதிகத்தை தம் குருவுக்கு பாமாலையாக்கினார். அதில் பதினொரு பாசுரங்கள் உள்ளன. இவை திவ்யப்ப்ரபந்தத்தில் இடம் பெற்றுள்ளன.
நம்மாழ்வாரின் முதன்மை சீடராக திகழ்ந்து அவர் புகழ்பரப்பினார். குருவின் மீது கொள்ளும் பெரும் பக்திக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தார். திருவாய்மொழியை நெறிப்படுத்தினார். நம்மாழ்வாரை உயர்த்திப் பிடிப்பது சிறப்பன்று- அவரும் பக்தரே அன்றி பகவான் அல்ல என்று சங்கப்புலவர்கள் ஆட்சேபிக்க, அவர்களின் செருக்கை நம்மாழ்வார் புகழ் பாடும் "கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்" பாசுரத்தின் முதலடியைக் கொண்டே வீழ்த்தினார்.
குருவுக்கு செய்யும் சேவையில் இறைவனைக் கண்டார். பாசுரங்களால் இறைவனைப் பாடி, குருவையும் துதித்தே இம்மையில் உய்ந்து மறுமையில் பரமனடி பற்றினார். பக்தர்கள் இவரை கருடனின் அம்சமாகக் கொண்டாடுகின்றனர்.
No comments:
Post a Comment