January 18, 2019

ஆண்டாள்





ஆண்டாளைப் பற்றி சிறு-குறிப்பு வரைதலும் சாத்தியமா? அவள் பெருமைகளை பேசவும் வார்த்தைகளுக்கு திறன் போதுமோ! ஸ்ரீவல்லிப்புத்தூர் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்ட ரத்தினம் அவள். இறைவனால் பிரசாதமாக வழங்கப்பட்ட திருக்குழந்தை என்று தோன்றியதாலோ என்னவோ பெரியாழ்வார் தம் ரத்தத்திலும் ஆன்மாவிலும் பெருக்கெடுத்தோடும் அத்தனை பக்தியும் ஆண்டாளுக்கு போதித்தே வளர்த்தார்.

பூங்குழந்தையவளை பூங்கோதையென்று பெயரிட்டு சிராட்டி வளர்த்தார். பாலுடன், தேனுடன், தினம் உண்ணும் அமுதுடன் ஸ்ரீ ஹரியின் நாமமும் புகட்டினார். நல்பக்தி கொண்ட திருக்குழந்தை, பெருமானை தன் உற்ற தோழனாகக் கொண்டாடினாள். தன்னையே அம்மாயவனின் மனையாளாக பாவித்து, அவன் சூடும் மாலை தான் சூடினால் பேரிழில் கூடிவிடுமோ என்று தினம் இறைவனுக்கு பெரியாழ்வார் தொடுத்து வைத்த மாலையை தான் ஒரு முறை சூடி அழகு பார்த்து வந்தாள். 


இதனை கண்ணுற்ற ஆழ்வார் பதறினார். பக்திக்கு களங்கமெனத் துடித்துக் கதறினார். சிறு பேதையின் தவறை மன்னித்தருளும்படி பெருமானிடம் வேண்டி வேறு மாலை தொடுத்து அழகு பார்த்தார். கோதையின் காதலை ஏற்ற கண்ணனோ அவள் சூடிய மாலையை அல்லாது வேறு மாலை தனக்கு வேண்டாமென கனவில் வந்து ஓதினான். ஆண்டவனையே ஆண்ட அவளே ஆண்டாள் அன்றோ!

ஆண்டாள் அருளிய திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் பற்றி அறியாத ஸ்ரீக்ருஷ்ண பக்தர்களைக் காண்பது அரிது. பக்தியும் காதலும் ஒன்றை ஒன்று விஞ்சும் இப்பாடல்கள் இறைவனை இப்படியும் சென்றடையலாம் என்று நமக்குணர்த்தும் முன்னோடி. கோபிகையாக தன்னை வரித்து உருகிய பாடல்கள். இதனை செவியுற்ற பெருமானும் உருகாதிருப்பானோ! ஆண்டாளுக்கு தக்க பருவம் வந்த பொழுது, கண்ணனையே திருமணம் கொள்ளும் எண்ணத்தில் தளராதிருப்பதை அறிந்த பெரியாழ்வார் கலக்கமுற்றார். அவர் கனவில் தோன்றிய கண்ணன், ஸ்ரீரங்கத்துக்கு ஆண்டாளை திருமணக்கோலத்தில் அழைத்து வர ஆணையிட்டான். திருமணக்கோலத்தில் அரங்கன் கருவறைக்குள் புகுந்தவள் அவனுள் ஒன்றெனக் கலந்தாள் என்ற கண்டவர்கள் சான்றுரைக்கின்றனர் .

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத மதுசூதனன் அவள் கைத்தலம் பற்றி தன்னுடனே அழைத்துக் சென்று விட்டான்.

எப்படிப்பட்ட வாழ்கை வாழ்வதென்று சொல்லாமல் சொல்லிய ஆண்டாள் நம் மனதையும் ஆண்டாள் அன்றோ!


No comments:

Post a Comment