October 13, 2024

வாணி களிநடம் புரிவாய் நீ

 


ஆயக்கலைகளெலாம்,
அம்மா உன் சரணமதில்
தூய மலராகி தூமணம் வீசுதடி.
தேவாதி தேவர்கள்
ஆற்றும் வினைகளெலாம்,
மையப் பொருளான
மதியுனையே பேசுதடி.
.
காயத்தால் தரித்து;
சாயத்தால் திரிக்கும்,
மாயக்கலைகளின்
மனங்கவர் வடிவழகி!
ஆயர்குலத்தழகன்,
நேயக்குழலிசையின் ;
ரீங்காரமாகி நிற்கும்
ஓங்கார உறைபொருளே!
.
இயலிசை காவியத்தை
ஓட்யாண நகையாக்கி,
ஒய்யாரமாகவே
இடைபுனைந்த இனியவளே!
ஞானமெனும் ஊற்றே!
பேறிவின் பெருநிதியே!
பையப்பையவே
பாரெலாம் நிறைந்தவளே!
.
நான்முகன் நாயகியே!
நானுனைப் பாடிடவே,
பாமகளே என்
நாவினில் பூத்துவிடு.
வீணைமீட்டியே
விதவிதமாய்க் கவியெழுது.
திமிதிமியெனவே
என்னுள் நர்த்தனம் ஆடிவிடு.
.
சூக்குமமெல்லாம் குறையறவே
சூதனமாய் ஊட்டி விடு.
நாவடக்கம் வேண்டுமென
நிச்சயமாய் சொல்லிவிடு.
வெண்தாமரை தண்டதனை
தேனில் குழைத்தெடுத்து,
ஊனில் கலந்தே
உதிரத்தில் நிறைத்துவிடு.
- ShakthiPrabha

October 09, 2024

அலைமகளே வருக

 


அலைமகளே! மாலவன் மார்பில்
சீரென விளங்கும் மலர்மகளே!
வளர் சௌபாக்கியம் தரும் அலர்மகளே!
நாராயணன் நாடும் நித்ய சுந்தரியே!
சுகபோகங்கள் சேர்க்கும் சௌந்தரியே!
.
தன-தானியம் தரணியெலாம் நிறைந்திட,
மாங்கல்யம் நிலைத்திட - பொங்கு
மங்கலங்கள் தழைத்திட,
பயம் விலகி பகை அகன்றிட,
ஜயம் கூடி தடை விலகிட - உன்
கரம் பற்றுகிறோம் நலம் நல்கிடம்மா!
.
செருக்குவாரா செல்வம் குவிந்திட;
தரக்குறைவிலாது தழைத்தே ஓங்கிட - எம்
சந்ததியே உனை தினம் துதித்திட;
தளிர் தாமரையில் ஒளிர் திருமகளே,
இணை ஈடில்லா துணை நீயெனவே - பொற்
கழல் போற்றுகிறோம் வரம் தாருமம்மா!

-ShakthiPrabha

October 04, 2024

ஜயஜய துர்கா

 ஆயிரம் நாமங்கள் தாளமிட வரும்

அர்ச்சனைப் பொருளே அம்பிகே!
துக்கங்கள் தூளாக தித்தித்தி ஆடிடும்
தாயவளே ஜயதுர்கையே!
.
முக்காலம் உணர்ந்த ஞானியரும் ஏத்தும்
தூயவளே மூகாம்பிகே !
காரணி உனையே கவியிற் புனைந்தோம்
பூரணியே அபிராமியே!
.
அனந்தம் நீயென அடைக்கலம் கண்டோம்
ஆனந்த பைரவியே!
தோரணங்கள் நாட்டி பாயிரமும் சூட்டி
பாடுகின்றோம் பவானியே!
.
கதிநீயேனவே தினம் போற்றியுந்தன்-சரண்
நாடுகிறோம் சிவகாமியே!
பாரெங்கிலும் மங்கலம் தங்கவே- கண்
பாரடியே மீனாட்சியே!
ShakthiPrabha

நவக்கிரகங்கள்

 #சொல்லத்தான்_நினைக்கிறேன்

கட்டங்களின் கூட்டணியென கிசுகிசுத்தனர்.
கடந்து சென்றேன்..
தசாபுக்தியின் குதியாட்டமே என்றனர்.
புரியவில்லையென புறந்தள்ளினேன்..
மஹாதசையின் பிடியில் தான்
மானுடன் விதியென சத்தியம் செய்தனர்.
மாய்மாலம் எனச் சிரித்தேன்.
எதையுமே செவிமடுக்கவில்லை:
விண்ணையே அளந்த கைகள்
மண்ணில் தவழ,
நிமிர்ந்த நற்பார்வை
நாணி நிலம் நோக்க
ஓங்கியிருந்த செல்வாக்கு
தரதரவென இழுக்கப்பட்டு
தரையில் தள்ளபடும் வரை.

October 01, 2024

அடையாளம்




அடையாளத்தைத் தொலைத்து
அபின்னமாக அடங்கி
அத்வைதமென ஒடுங்காது;
அணிய-அணிய ஆர்பரித்து
அனுக்ஷணமும் ஆடியாடி - புதுப்புது
அடையாளங்களை தேடித்தேடி
அணியும் ஆசைக்கிடங்கு.
-ShakthiPrabha