July 08, 2022

பிரவ்ருத்தி நிவ்ருத்தி (கர்மகாண்டமும் ஞானகாண்டமும்) (From Deivathin kural)

வேதங்கள் வகுத்துள்ள இந்த சநாதன தர்மத்தில் இரண்டு மார்க்கங்கள் — ப்ரவ்ருத்தி மார்க்கமென்றும், நிவ்ருத்தி மார்க்கமென்றும். 

லோக வாழ்க்கையை நன்றாக, தர்மமாக நடத்துவதற்கு ப்ரவ்ருத்தி மார்க்கம். 

லோக வாழ்க்கையை விட்டுவிட்டு, அதை முடித்து விட்டு பரமாத்மாவோடு ஐக்யமாகி ஜனன மரணத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு நிவ்ருத்தி மார்க்கம்.

தர்மமாக, அதாவது தனக்கும் நல்லதாகவும், ஜன ஸமூஹத்துக்கும் நல்லதாகவும் வேத விதிப்படி இல்லற வாழ்க்கை நடத்தி,  கர்ம அநுஷ்டானங்களைச் செய்வதுதான் ப்ரவ்ருத்தி மார்க்கம். இதிலே கர்மாநுஷ்டானம் எவ்வளவு நன்றாகச் செய்கிறோமோ, அந்த அளவுக்குப் புண்யம் கிடைத்து, புண்ய பலனாக சுவர்ககம் என்ற இன்ப லோகத்தில் வாஸம் கிடைக்கும். ஆனால் அந்த இன்பம் சாச்வதமல்ல.  மறுபடி இந்த மண்ணுலகிலேயே பிறக்க வேண்டியதுதான். ஆனாலும்  இது நல்ல பிறவியாக, நல்ல வசதிகள் வாய்த்த பிறவியாக இருக்கும். இந்தப் பிறவியிலும் தர்மம் தப்பாமல் வாழ்க்கை நடத்தினால் மறுபடி ஸ்வர்க போகம். முன்பு சொன்னமாதிரி, இந்த போகம் சாச்வதமல்ல.

சாச்வதமல்ல என்பது ஒரு பக்கம். அதோடுகூட அநுபவிக்கும்போதே கூட இந்த இன்பம் பூர்ணமான நிறைவைத் தருவதாக இருக்காது. ‘இனிமேலே 

எதுவும் வேண்டாம்! இந்த நிலை நிரந்தரமாக வாய்த்து விட்டதல்லவா? இதிலிருந்து கொஞ்சங்கூட விலகுவதற்கில்லை. இனியொரு குறை நமக்குக் 

கிடையாது’ என்று எப்போது ஆக முடியுமோ அப்போதுதான் நிறைவான பூர்ணானந்தம். 

பூலோகம், சுவர்கம் ஆகிய இரண்டிலுமே எத்தனைதான் ஸந்தோஷமிருந்தாலும் அது இப்படிப்பட்ட நிறைந்த ஆனந்தத்தைத் தரமுடியாது. பல தினுஸான பயம், துக்கம், காம -க்ரோதாதி இழுபறிகள் இல்லாமல் இந்த லோகங்களில் இருந்துவிட முடியாது. இந்த இன்பங்களைப் பெறுவதற்காக ஓயாமல் போராடிக் கொண்டேதானிருக்க வேண்டும்.

அது மட்டுமில்லை. இந்த இன்பங்கள் ஏதோ கண்ணுக்கு, காதுக்கு, வாய்க்கு, இன்னம்  மனஸுக்கும், அறிவுக்குங்கூட இன்ப அநுபவம் இருக்குமேயொழிய, இதற்கெல்லாமும் உள்ளே, நம்முடைய அந்தஃகரணத்துக்கும் உள்ளே இருக்கப்பட்ட ஆத்மாவுக்கு இவற்றிலே கொஞ்சமும் ஸுகாநுபவம் இருக்காது. 

பூர்ணமான உள்நிறைவைத் தருவது நிவ்ருத்தி மார்க்கம்தான். 

கர்மாக்களை விட்டு, ஜன ஸமூஹத்தை விட்டு ஸந்நியாஸியாகி ஸதா காலமும் ஆத்ம சிந்தனை, த்யானம் என்று இருப்பவன்தான் ஆத்மா ப்ரஹ்மமே என்று அறிந்து அநுபவிப்பதான, நிறைந்த நிறைவான நிலையைப் பெறுவான். ஸமாதி என்றும் ஸாக்ஷாத்காரம் என்றும் சொல்லும் அந்த நிலையொன்றுதான் ஒரு முறை கிட்டினால் அப்படியே சாச்வதமாக இருப்பது. 

ப்ரம்மம் என்று ஒன்றை இன்னொருவன் அநுபவித்து ஆனந்திப்பது அல்ல. ப்ரம்மம் என்ற ஆனந்தம்தான் ப்ரம்மானந்தம்.

நிவ்ருத்தி மார்க்கத்தில் ஸித்தி பெற்றவன் தானே அந்த ப்ரம்மம் என்ற ஆனந்தமாக ஆகிவிடுகிறான். அங்கேதான் பயமேயில்லை, துக்கமில்லை, காமமும் க்ரோதமும் போட்டு இழுக்கிறதும் இல்லை. ஓயாத முயற்சியும் வேண்டியிருப்பதில்லை. ஸித்தியடைவதற்கு முன்னாடி ரொம்பப் பாடுபடத்தான் வேண்டும். போராட்டம் என்றேனே, அது பெரிசாக இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒரு தரம் அந்த லக்ஷ்யத்தை அடைந்துவிட்டால் போதும். அப்புறம் அதிலிருந்து நழுவுவது, விலகுவது என்பது கிடையாது.

அதாவது, நிவ்ருத்தி மார்க்கத்தினால்தான் நித்யமான பேரின்பம்.  ப்ரவ்ருத்தியில் பெறுவதெல்லாம் நிலையற்ற சிற்றின்பம்தான்.

‘ப்ர-வ்ருத்தி’ என்றாலே அதுதான் அர்த்தம்; ‘வெளியிலே போய்க்கொண்டேயிருப்பது’ என்றே அர்த்தம்.

இதற்கு எதிர்ப்பதம் ‘நி-வ்ருத்தி’.  ‘திரும்பி வருவது’ தான் ‘நிவ்ருத்தி’ — ஆத்மாவுக்கே திரும்பி வந்துவிடுவது.

ஆனாலும் லோகம், ப்ரஜைகள் என்று ஈச்வரன் நாடகம் ஆடுவதில், ‘ஸந்நியாஸியாகப் போ; காட்டுக்குப்போய் மூக்கைப் பிடிச்சுக்கோ; அப்படியே ‘ஆத்மா, ஆத்மா’ன்னு விசாரம் பண்ணி, அதிலேயே தோஞ்சு போ’ என்றால் ரொம்பப் பேர் அதைக் கேட்கக் கூடியவர்களாக இல்லை. 

எல்லாவற்றுக்கும் காரணமான வஸ்துவைத் தெரிந்துகொண்டு–ப்ரஹ்மம், ப்ரஹ்மம் என்னும் அதுதான் தன்னுடைய ஆத்மா என்று தெரிந்துகொண்டு–அதிலேயே ஐக்யமாகிவிட வேண்டுமென்ற தாபம் பெருவாரியானவர்களுக்கு ஏற்படுவதேயில்லை. இந்தத் தாபத்திற்கு ‘முமுக்ஷுத்வம்’ என்று பெயர். ‘விடுபட வேண்டும் என்று ஆசைப்படுவது’ தான் முமுக்ஷுத்வம். ஜனத்தொகையில் அவர்கள் ரொம்பவும் கொஞ்சமாகவே இருப்பார்கள்.

மற்றவர்கள் ஏதாவது கார்யம் செய்வதில்தான் எப்போதும் ஈடுபட்டிருப்பார்கள்.  

முதலில் ‘கர்மயோகம்’ முதலான அத்யாயங்களில் சொல்லும்போது பகவான், ஜனங்கள் அதாவது ப்ரவருத்தியிலேயே நாட்டமுடையவர்களாக இருப்பதற்குக் காரணம் ப்ரக்ருதி, ப்ரக்ருதி என்றே சொல்லி வந்தார். ப்ரக்ருதி என்றால் மாயைதான். ஸரி, மாயை என்றால் அது மட்டும் தானே ஏதோ பண்ணுகிறதா என்ன? 

ஈச்வரனேதான் அவனுடைய மாய லீலை நடக்கணுமென்றே கர்மசங்கிகளாக ப்ரவ்ருத்தியில் போகிறவர்களையும் அப்படிப் பண்ணியிருக்கிறான் என்று தெரிகிறது. ஜீவர்கள் அத்தனை பேருமே நிவ்ருத்தியில் போனால் என்ன ஆகும்? அவர்கள் ஞானத்தினால் மாயையை உடைத்தெறிந்துவிட்டு ஈச்வரனுடைய நிர்குணமான ப்ரஹ்ம ஸ்வரூபத்திலேயே ஐக்யமாகிவிடுவார்கள்.

முதலில் ஸ்ருஷ்டியில் தோன்றிய ஸநகாதிகள் நிவ்ருத்தியில் போய்விட்டதால், அப்புறம் ப்ரஜாபதிகள் என்றே ஏகமாகப் பிள்ளை, குட்டிகளைப் பெற்று பூமியை ரொப்புவதற்காக மரீசி முதலான பத்துப்பேரை ப்ரஹ்மா ஸ்ருஷ்டித்தாரென்று பாகவதத்தில் பார்க்கிறோம். ஆகையினால் திவ்ய ஸங்கல்பமே லோகம் பூராவும் ஞானியாகப்போய், லோகத்தையே விட்டு விட்டுப்போய், அவனுடைய ட்ராமா ஸ்டேஜைக் காலியாக, பாழாகப் பண்ணிவிடக் கூடாதென்றுதான் இருக்கிறதென்று தெரிகிறது.

ஆனாலும் அதற்காக ட்ராமாவில் நடிக்கிற எல்லாரையும் தறிகெட்டு அவரவர் இஷ்டத்துக்கு ஆக்ட் பண்ண விட்டு விடலாமா? இப்படிக் கூடாது 

என்றுதான்,   ஒரே கோணா மாணாவாக ஒவ்வொருத்தரும் தன்னிஷ்டப்படியே பண்ணி, ஒட்டு மொத்தமான ஸமூஹவாழ்வு 

ஒழுங்கு கெட்டுப் போகும்படி ஆவதற்கு விட்டு விடக்கூடாது. இதுகள் தனி ப்ரஜைகளாகவும் ஒரேயடியாகத் தப்புப் பண்ணிப் பாபத்தில் 

மாட்டிக்கொள்ளவிடக் கூடாது.  அவரவரும் ஸமூஹத்தில் ஈச்வரன் தங்களைப் பிறப்பித்திருக்கிற நிலைக்கு ஏற்ப இப்படியிப்படி ஸத்கார்யங்களாகப் பண்ணிக்கொண்டு போய், இந்த லோகத்திலே தாங்களும் ச்ரேயஸை அடைந்து, லோகமும் தங்களால் க்ஷேமமடையும்படியாகச் செய்துகொண்டு, அதற்கும் மேலான ஸ்வர்காதி புண்ய லோகங்களிலும் ஸந்தோஷத்தைப் பெறட்டும் என்று வழிபோட்டுக் கொடுத்தார். வேதத்தில் இந்த பாகத்துக்குக் கர்ம காண்டம் என்று பெயர். யஜ்ஞ கர்மாநுஷ்டானமெல்லாம் இதில் அடங்குவதுதான்.

நிவ்ருத்தி மார்க்கமாக மோக்ஷ ஸித்திக்கு அதே வேதத்தில் முடிவு பாகங்களிலுள்ள உபநிஷத்துக்கள் மூலமாக வழி போட்டுக் கொடுத்தார். அதற்கு 

ஞான காண்டம் என்று பெயர். அதில் தத்வோபதேசம் நிரம்ப இருக்கும். 

மோக்ஷம் வேறு, சுவர்கம் வேறு. மோக்ஷம்தான் ஸம்ஸாரத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறும் ஸ்தானம்.  சுவர்கம் என்பது புண்யத்தின் அளவைப் பொருத்து, அது செலவழியும் காலம் வரையில் மாத்திரம், பலவித இந்த்ரிய இன்பங்களை மாத்திரம் கொடுக்கும் லோகம்.

Chapter: ப்ரவ்ருத்தி-நிவ்ருத்தி Volume 5 

Chapter: இருவித மக்களுக்கான இரு வழிகள் Volume 5 

(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

July 04, 2022

Short story contest

 

தேசிய அளவிலான சிறுகதைப் போட்டியில் எனது கதை.

உங்களுக்கு என் கதை பிடித்திருந்தால் "Star rating" கொடுத்து எனக்கு  ஆதரவளியுங்கள். மிக்க நன்றி.  

(To read and rate click the link below) (Anyone can rate until July 25th) 

https://notionpress.com/ta/story/ssc/21111/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5?fbclid=IwAR3Y0CFe_QRIGVnzfWNaosfT9icS5FWqWgrdaANMrD_81lIEnFWNw8en_ao


Thanks and regards,

ShakthiPrabha

May 12, 2022

உபகாரமும் அபகாரமும் (Deivathin Kural)

ரொம்பவும் ஸாத்விகமாக ஒரு நல்லது செய்யப் போனால்கூட ஒருத்தருக்கு உபகாரமென்று செய்வது வேறு யாராவது ஒருத்தருக்கு ஏதாவது அபகாரம் செய்துவிடுகிறது.
.
நான் ஒன்று நினைத்துக் கொள்வதுண்டு : — மில் துணி பஹிஷ்காரம் பண்ணிக் கதரை அபிவிருத்தி பண்ண வேண்டுமென்று காந்தி தீவ்ரமாக இருந்த காலம். இந்தக் கொள்கைகளில் எனக்கும் அபிமானம் உண்டு. அப்போது* ராமேச்வர யாத்ரை போயிருந்தோம். இந்த நல்ல ஸமயத்தில் மடத்துச் சிப்பந்திகளையெல்லாம் ஆலைத் துணியை விட்டுவிட்டுக் கதர் உடுத்தும் பழக்கத்தை மேற்கொள்ளச் செய்யவேண்டும் என்று தோன்றிற்று.
.
அக்காலத்திலே அங்கங்கே மில்துணிகளைச் சொக்கப்பானை மாதிரி கொளுத்தி ஸ்வதேசி அபிமானிகள் விழா நடத்துவது வழக்கம்.
எனக்கென்னவோ, அசேதனமான துணிதான் என்றாலும் அதைக்கூட நெருப்பில் போட்டுக் கொளுத்துவது என்றால் ஹிம்ஸைமாதிரி தோன்றிற்று. இப்படியில்லாமல், ஸாத்விகமாக குளிர்ச்சியாக, ‘ஜலஸமாதி’என்று ஆலையில் உற்பத்தியான வஸ்திரங்களை ஸமுத்ரத்தில் போட்டுவிட்டு, (மடத்துச் சிப்பந்திகள்) எல்லாரையும் கதர் கட்டிக்கொள்ளும்படிப் பண்ணலாமென்று நினைத்தேன்.
.
கைத்தொழிலை ஆதரிப்பது, (உடலுழைப்பு) என்றால் மட்டமாக நினைக்காமல் யாராயிருந்தாலும் ராட்டினத்தை சுற்றி நூற்பது, அதனாலேயே வீண்பேச்சு முதலியவற்றில் போகாமல் ஒரு டிஸிப்ளினில் வருவது, நம் தேசத்துக்கு என்று என்ன உண்டோ அதோடு த்ருப்தியாயிருந்து, விதேசச் சரக்குகளில் மோஹத்தை விட்டு நம்முடைய பண்பாட்டைக் காப்பாற்றுவது, நம் நாட்டுப் பணம் அநியாயமாக வெளி தேசத்துக்குப் போகாமல் தடுப்பது, பல ஏழைகளுக்கு ஜீவனோபாயம் கிடைக்கப் பண்ணுவது — என்று இத்தனை அம்சங்கள் இருக்கிறதல்லவா? அதனால் இது ரொம்ப நல்ல திட்டமாகத்தானே தெரிகிறது?
.
ஆனால் இப்படிப் பண்ணினால் தங்கள் வியாபாரமே போய்விடும். தாங்கள் தலையில் துணியைப் போட்டுக் கொள்ளும்படியாகிவிடும் — என்று லங்காஷயர், மாஞ்செஸ்டர் மில்காரர்களெல்லாம் கூ கூ என்று கூப்பாடு போட்டார்கள். யோசித்துப் பார்த்ததில், ‘வெள்ளைக்காரர்கள் தேசத்தில்
கருப்பு நிலக்கரியையும் வெளுப்புச் சாக்குக் கட்டியையும் விட்டால் வேறே விளைபொருள் கிடையாதே! ஆனதால் அவர்கள் ஆலைத் தொழில் பண்ணி ஏற்றுமதி செய்து பிற தேசங்களிடமிருந்துதானே தங்களுடைய எல்லா வாழ்க்கைத் தேவைகளுக்குமானதை ஸம்பாதித்துக் கொள்ளவேண்டும்? இங்க்லாண்ட் மாதிரியேதான் இன்னும் சில தேசங்களும், ஏற்றுமதி பண்ணினால்தான் அவற்றைச் சேர்ந்த ஜனஸமூஹங்களுக்கு ஜீவனோபாயம் கிடைக்கும். அதைக் கொண்டுதான் அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான பண்டங்களை இறக்குமதி செய்துகொள்ள முடியும்.
.
அதற்கப்புறம் என்னைப் பொறுத்தமட்டில் மில் துணி வேண்டாம் என்று வைத்தது வைத்ததுதான் என்று ஆக்கிக் கொண்டுவிட்டாலும் மற்றவர்கள்
விஷயமாக எதுவும் ‘கம்பெல்’ பண்ண வேண்டாமென்று விட்டுவிட்டேன்.
.
எதற்குச் சொல்லவந்தேன் என்றால், நம் தேச ஜனங்களின் தொழில் கெட்டுப்போகப்படாது என்பதற்காக ஒரு நல்ல ஏற்பாடு செய்தால், அதனாலுங்கூட எவனாவது பாதிக்கப்படுகிறான்! வெளி தேசக்காரன்தான் என்றில்லை, கதர் கதர் என்று அதையே ஆதரிப்பதென்றால் உள்ளூரிலேயே கைத்தறிக்காரன், மில்காரன் தன் தொழில் போச்சு என்று அழுகிறான், ஆக்ஷேபம் பண்ணுகிறான்.
.
கைத்தொழிலுக்கு நல்லது செய்யப் போனால் ஆலைத் தொழிலுக்குக் கெடுதல் ஏற்படுகிறது. ஆலைத்தொழிலுக்கு நல்லது செய்யப்போய் அதில் வேலை செய்கிற ஆயிரம் பேருக்கு நல்லது ஏற்படுத்தும்போதோ பத்தாயிரம், இருபதாயிரம் கைத்தொழில்காரர்களின் வயிற்றிலடிக்க வேண்டி வருகிறது!
.
என்ன அர்த்தம்? எந்த நல்ல திட்டம் கொண்டுவந்தாலும் அதுவும் யாருக்கோ கெடுதல் செய்கிறது என்றுதான் அர்த்தம்!
.
ஒரு பாஷையை அபிவ்ருத்தி செய்தால் இன்னொரு பாஷை க்ஷீணிக்கிறது! பண்ணையாளுக்கு நல்லது பண்ணினால் நிலச் சொந்தக்காரனுக்குக் கெடுதலாகிறது. முன்னேறிய வர்க்கம், பின்னேறிய வர்க்கம் என்று பிரிவு செய்திருப்பதில் ஒன்றுக்கு நல்லது பண்ணுவதில் இன்னொன்று படும் அவஸ்தைகள் எல்லாருக்கும் தெரிந்ததுதான்.
.
ஒரு உயிரைக் காப்பாற்றுவது எத்தனை உத்தமமான கார்யமாகத் தெரிகிறது? அதிலேகூடக் கெடுதல் வருகிறது!
.
ஸாதுவான ஒரு மானைப் புலியிடமிருந்து காப்பாற்றினால்கூட, மானுக்குச் செய்யும் உபகாரம் புலியைப் பட்டினி போட்டுக் கஷ்டப்படுத்துவதாக ஆகிறது! அதுவும் ஒரு உயிர்தானே? அது வேண்டுமென்றா தன்னைத் தானே துஷ்ட ப்ராணியாகப் படைத்துக் கொண்டிருக்கிறது?
.
ப்போதாவது ஒரு நாள் மனஸ் காரியமில்லாமல் நிற்பதற்குக் கொஞ்சம் பக்குவப்படும்போதுகூட, அதே ஸேவை, கீவை என்று அதிகப் பரஸங்கித்தனம் பண்ணி மறுபடி த்வைதத்திற்கே இழுத்துக்கொண்டு வராமல், ‘நாம் யார் ஸேவைகூட செய்ய? ஸேவை என்று போகிறோம். அது என்னவாக முடியுமோ? எவனோ ஒரு ஈச்வரன் இன்னாருக்கு இன்னபடி என்று லோகத்தை நடத்திக்கொண்டு போகிறான் . ஆகையால் ‘நாமாக்கும் பண்ணுகிறோம்’ என்ற அஹங்காரம் என்பது-வராமலே பண்ணிக்கொண்டிருப்போம். மற்றபடி நாமாக ஒன்றும் ப்ளான் போட்டு லோக ஸங்க்ரஹம் உள்பட எதற்கும் கார்யம் செய்ய வேண்டியதில்லை. அவனுடைய ப்ளான்படிதான் நடக்கும் என்கிறபோது, அவன் ‘இன்ஸ்பயர்’ பண்ணமால் நாம் என்ன முந்திரிக்கொட்டை மாதிரி லோக ஸங்க்ரஹம் தான் பண்ண முடியும்? நாமாக எத்தனை நல்ல ப்ளான் போட்டாலும், அது வெளிப்பார்வைக்கு ஸேவை, த்யாகம் என்றெல்லாம் எத்தனை உசத்தியாகத் தெரிந்தாலும் அதில் ‘ஈகோ’ இல்லாமல் போகாது. ‘ஈகோ’ போகாமலோ மோக்ஷம் என்பது நாளுமில்லை’ என்று விவேகமாயிருப்போம்.
.
Chapter: உபகாரப் பணியிலும் அபகாரம்! Volume 5
Chapter: கர்த்தாவின் அஹம்பாவம் நீங்கவே நல்லதிலும் கெடுதல் Volume 5

(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

May 05, 2022

இம்மைக்கும் மறுமைக்கும் உதவும் நமஸ்காரம் (Deivathin Kural)

ஸம்பத்து ஸர்வேந்திரிய ஆனந்தம், ராஜ்யாதிகாரம் ஆகியவை இம்மை இன்பங்களாகவே இருக்க, பாபோத்தரணம்தான் (பாபம் களைவது) மறுமைக்கு உதவுவதாக இருப்பது. இது ஒன்றுதான் பாரமார்த்திக ப்ரயோஜனம் உடையது. 


மஹாலக்ஷ்மியை “த்ரிபுவநைக குரோஸ் தருணி” என்று இந்த ஸ்தோத்ரத்தில் ஓரிடத்தில்* அவர் சொல்லியிருக்கிறார். “மூவுலக குருவின் ப்ரிய பத்னி” என்று அர்த்தம். குரு என்றால் ஆசார்யர், தகப்பனார் என்று இரண்டு அர்த்தம். இவளைத் தாயார், தாயார் என்கிறதற்கேற்ப மஹாவிஷ்ணுவைத் தகப்பனாராகக் கருதி ‘குரு’ என்று சொல்லியிருக்கலாம். த்ரிபுவனங்களுக்கும் இவர்கள் தாய்தந்தையர் என்ற அர்த்தத்தில் சொன்னதாகக் கொள்ளலாம். ஆனால் தாயார் ஸந்நிதி, அம்மன் ஸந்நிதி என்று லக்ஷ்மி, பார்வதி ஸந்நிதிகளைச் சொல்வதுபோலப் பெருமாள், ஈச்வரன் ஸந்நிதிகளைத் தகப்பனார் ஸந்நிதி, அப்பன் ஸந்நிதி என்று சொல்லும் வழக்கம் அதிகமில்லை. மலையாளத்தில் மட்டுந்தான் குருவாயூரப்பன், வைக்கத்தப்பன், ஐயப்பன் என்பது.


லோக குரு, ஜகத்குரு என்பதுபோல ‘த்ரிபுவந குரு’ என்ற மஹா ஆசார்யனாக மஹாவிஷ்ணுவைக் கருதியே அவனுடைய பத்னியை  சொன்னதாகக் கொள்வதும் ஸரியாயிருக்கும். பகவான் க்ருஷணனாகவும் நம்முடைய பகவத் பாதர்களாகவும் அவதரித்த காலங்களில் நர சரீரத்தில் அவதாரம் செய்ததால் இந்த நரலோகத்துக்கே குருவாயிருந்து “லோக குரு” என்று பெயர் வாங்கினான். நாராயணனாக திவ்ய சரீரத்திலிருக்கும்போது நரர், ஸுரர், அஸுரர் ஆகிய எல்லோருக்கும் பலவேறு ஸந்தர்பங்களில் உபதேசம் செய்து த்ரிலோக குருவாக இருந்திருக்கிறார். அவருடைய பத்னி லக்ஷ்மி. அவளுக்கு ஸதா கால நமஸ்காரமென்றால், பதியை நீக்கிப் பண்ணமுடியாது.  அதனால் த்ரிலோக குருவுக்கும் எப்பவும் நம் நமஸ்காரம் இருக்கணும்.


த்ரிலோக அதிபதியான பரமேச்வரனாகவும் லோகமெல்லாம் அடிபட்டுப்போன நிலையிலுள்ள பரப்ரம்மாகவும் நமக்கு இருப்பவர் நம்முடைய குருவேதான். த்ரிலோக குரு என்று வேறே எவரையோ தேடிப்போக வேண்டாம். 


'நமஸ்தே நமஸ்தே நமஸ்தே நமோஸ்து' என்று அநேக ஸ்தோத்ரங்களில் வருவதுபோல அவருக்கு வந்தனம் செய்து கொண்டிருப்போம்!

துரிதோத்தரணம் பண்ணுவதொன்றையே கார்யமாகக் கொண்டுள்ள அவருக்குரித்தான நமஸ்காரமே நமக்கு மிகப் பெரிய செல்வமாக நம்முடன், நம் உள்ளுக்குள், இருந்து ரக்ஷித்துக் கொண்டிருக்கட்டும்.


chapter: மறுமைப் பயன் கோரி : 

Chapter: மூவுலக குரு : 


(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)

April 29, 2022

பாபத்தைக் களையும் நமஸ்காரம் (Deivathin kural)

துரிதம் என்றால் பாபம். எந்தக் கர்மாவுக்கும் ஸங்கல்பம் செய்துகொள்ளும்போது “துரித – க்ஷய – த்வாரா பரமேச்வர ப்ரீத்யர்த்தம்” என்கிறோம். ஈச்வரனை ப்ரீதி செய்வதே நம்முடைய லக்ஷ்யம். நாம் பண்ணிய பாவம் ஈச்வரப்ரீதி கிடைக்கவொட்டாமல் தடுக்கிறது. பாபம் நசித்தாலே, துரிதம் க்ஷயமானாலே, அதன் வழியாக ஈச்வர ப்ரீதியை ஸம்பாதிக்க முடியும். 

ஆலயத் திருப்பணியை ‘ஜீர்ணோத்தாரணம்’ என்கிறோம். ‘ஜீர்ணம்’ என்றால் கிலமானது, இடிந்து போனது என்று அர்த்தம். கோவில் முழுதுமோ, அல்லது அதில் பல இடங்களோ இடிந்துபோன போது என்ன செய்யவேண்டியிருக்கிறது? உள்ளே ஆழமாகக் சொருகிக் கொண்டிருக்கும் கல், மரம், செடி முதலியவற்றை இழுத்துப் பிடுங்கித் தள்ளுவதுதான் ஜீர்ணோத்தாரணம். 

கலியிலும் அவதார புருஷர்கள் ஜகத்தை உத்தாரணம் செய்ய வருகிறார்களென்றால் என்ன அர்த்தம்? “ஜகதோத்தாரணா!” என்று தாஸர் ஏன் பாடுகிறார்? அதர்மச் சேற்றில் அழுந்திப் போயிருக்கும் ஜகத்தை அவர்கள் அடியில் கை கொடுத்துப் பிடுங்கி வெளியே இழுத்துக்கொண்டு வருவதால்தான். 

நம் மனஸுக்குள்ளே ஆழமாக முள் செடி மாதிரி வேரோடித் தைத்திருக்கும் பாபத்தை அப்படியே பிடுங்கி எடுத்துப் போடுவதுதான் “துரிதோத்தரணம்.” உள்ளே தப்பான ஸாமான் சொருகிக் கொண்டிருந்தால் எப்படி சரீரத்துக்கு ஆபத்தோ, அப்படி நம்முடைய பாபங்கள் உள்ளே போய் சொருகிக்கொண்டிருப்பது உயிருக்குப் பெரிய ஆபத்து. அதை நன்றாகக் கிள்ளி எறிவது ‘துரிதோத்தரணம்’. 

ஆகையினால், ஜன்ம ஜன்மாந்தரமாக நாம் பண்ணின பாபம் பெரிய முள்ளு மரமாக நமக்குள்ளே வேரோடியிருக்கிறதை பெரிய கடப்பாரை, அது, இதைப் போட்டு நெம்பிப் பிடுங்கி வெளியிலே இழுத்து அழித்துப் போடவேண்டும். நம்முடைய ஸகல பாபத்தையும் நிவ்ருத்தி செய்து வாழ்க்கைக்கு ஜீர்ணோத்தாரணம் செய்துவிட்டால் அப்புறம் ஒரே சுத்தந்தான்; அம்ருதத்தாலேயே கும்பாபிஷேகந்தான்! 

இதை நமஸ்காரமே ஸாதித்துக் கொடுத்து விடுகிறது என்று காட்டுகிறார். (ஆச்சார்யரின் கனகதாரா ஸ்தோத்திரம்) 

Chapter: ஒரு திருத்தம்: ‘துரித உத்தரணம்’

(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL) 

April 27, 2022

எது செல்வம்? (Deivathin Kural)




நமஸ்காரம் தான் நமக்கு மஹா பெரிய செல்வம். ஆசார்யாள் அப்படித்தான் சொல்லியிருக்கிறார்.

அவர் பால ப்ரம்மசாரியாக இருந்த காலத்தில் ஒரு ஏழை ப்ராம்மண ஸ்த்ரீக்கு இரங்கி லக்ஷ்மியிடம் ப்ரார்த்தித்துக் கொண்டு ‘கனகதாரா ஸ்தவம்’ பாடின கதை தெரிந்திருக்கலாம்.



அவர் ப்ரார்த்தித்துக்கொண்டவுடன் லக்ஷ்மி வந்து கனக வர்ஷமாகப் பொழிந்துவிட்டாள்.  அவர் கேட்டுக்கொண்டாரே என்று வேறே யாருக்கோ வாரி வழங்கிவிட்டு, இதனை அழகான ஸ்துதி பண்ணின அவதாரக் குழந்தைக்கு எதுவும் கொடுக்காமல் போவதற்கு?


‘வேறே யாருக்கோ தான் உன் அநுக்ரஹம் தேவைப்பட்டது; அதற்காக ப்ரார்த்தித்துக் கொண்டேன்; எனக்கு உன்னிடமிருந்து ஒன்றும் தேவையில்லை என்கிற மாதிரி இருந்துவிட்டால் அது மரியாதைக் குறைச்சல். அதனாலே நாம் சின்னவன் மாதிரி இருந்து மஹாலக்ஷ்மியிடம் நமக்காகவும் ஏதாவது கேட்டுக் கொள்ளவேண்டும்’ என்று தோன்றிற்று. ஆனால் அவருக்கு எந்த ஆசையும், எந்தத் தேவையும் வாஸ்தவத்தில் இல்லாததால் என்ன கேட்பது என்று தெரியவில்லை. 


அவளையே நமஸ்காரம் பண்ணி  “அவளிடம் வேறென்ன செல்வத்தைக் கேட்கவேண்டும்? இப்படி நாம் சின்னவராக நின்றுகொண்டு ஒருத்தரிடம் ப்ரியத்தோடு, அடக்கத்தோடு, நன்றியோடு நமஸ்காரம் செய்யும்போது மனஸுக்கு எவ்வளவு நிறைவாக இருக்கிறது? அதனால் இந்த நமஸ்காரமேதான் பெரிய செல்வம். ‘இந்த நமஸ்காரச் செல்வத்தை எனக்குக் கொடு’ என்றே ப்ரார்த்தித்துக் கேட்டு வாங்கிக்கொள்வோம்” என்று தோன்றிற்று. அதையே ச்லோகமாகப் பாடிவிட்டார்.


‘எப்போது பார்த்தாலும் உன்னை வணங்கிக் கொண்டிருக்கும்படியான இந்த நமஸ்கார ஸ்ரீயைத் தவிர வேறு எதுவும் நான் உன்னிடம் ப்ரார்த்திக்கவில்லை’.


“செல்வத்துட் செல்வம் அருட்செல்வம்* ” என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். அருள் ஆண்டவன் செய்வது. ஆசார்யாள் சொல்லும் நமஸ்காரமோ நாம் செய்வது. நம்மைப் போன்றவர்கள் அவனுடைய அருட்செல்வத்தை வேண்டி நமஸ்காரம் செய்கிறோம். 


எப்போதும், இடையறாமல் – நமஸ்கார லக்ஷ்மி தன்னிடம் தங்கியிருக்கட்டுமென்கிறார்.


Chapter: நமஸ்காரமே செல்வம்: ஆசார்யாள் உணர்த்துவது : 


(Excerpts from Deivathin Kural - Discourses of Paramacharya Compiled by Ra. Ganapathi avargaL)


December 16, 2021

Dear Diary

திருமணத்திற்கு முன்பு வரை நாட்குறிப்பு (diary) எழுதும் பழக்கம் இருந்தது. அது தொடர்பாக சில நிகழ்வுகளும் நிகழ்ந்தது. மறக்க முடியாதவையும் கூட. டைரி பக்கங்கள் சொல்ல மறந்த கதை நிறைய. சொல்ல முடியாத கதைகளும். என் வாழ்க்கையை மாற்றி அமைத்த முக்கியப் பங்கு டைரிக்கு உண்டு. இப்போதெல்லாம் என் டைரி... வெள்ளைக் காகிதங்களாகவே பல இனிய நினைவுகளை சுமந்திருக்கிறது.

பொக்கிஷமான சில நினைவுகளை நமக்காக சிலர் சுமக்கலாம்...அல்லது சுமை என விலக்கலாம். எவரும் நம் உள்ளாடும் உணர்வுகளை செவி மடுக்க்காவிட்டாலும்....Diary செவி மடுப்பாள். உற்ற தோழியவள்.

kOra kagaz tha

என்ற பாடல் கேட்கக் கிடைக்கும் போது diary பற்றிய நினைவுகளும் கோர்வையாக பல நிகழ்வுகளும் வந்து போகும். உடனிருந்த சில மனிதர்களும்.


பின் குறிப்பு: இப்பொழுதெல்லாம் டைரியில் "ஸ்ரீராமஜயம்" மட்டுமே எழுதுகிறேன். என்னைப் போலவே என் டைரியும் மாறிவிட்டாள்.