September 20, 2010

சத் சங்கம் (சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2லிருந்து தொகுக்கப்பட்டது)

ஒவ்வொரு சிந்தனையுமே அலைளை எழுப்ப வல்லது. சிந்தனை மட்டுமன்றி செயல், வார்த்தைகள் என அனைத்திற்கும் அலைவடிவம் உண்டு. அது சுற்றுப்புறத்தை பாதிக்கின்றது.

ஆதிஷங்கரர் மண்டல மிஸ்ரரைத் தேடி வருகிறார். மண்டல மிஸ்ரர் சிறந்த கர்ம யோகி. அவர் வீட்டிற்கு வழிகேட்டு வரும் ஆதிஷங்கரரை "எந்த வீட்டில் கிளிகள் "ஸ்வதப்ரமாணம் பரத ப்ரமாணம்" பொன்ற விஷயங்களை அலசுகின்றதோ அதுவே அவர் வீடு என்று காண்க" என்று வழிகாட்டுகின்றனர் மக்கள்.

{ ஸ்வதப்ராமணம் என்றால் அதுவே தன்னை சுயமாக விளக்கிக்கொள்வது (it is self explanatory) பரதப்ரமாணம் என்றால் வேறொரு வஸ்து அதனை விளக்குவது (needs another object to throw light ) (இதனைப் பற்றி இன்னும் விளக்கம் தெரிந்தவர்கள் விளாக்கலாம் அல்லது வலைப்பதிவு சுட்டி இருந்தால் இடலாம். நன்றி) }

அதாவது அங்குள்ள கிளிகள் கூட மேதாவிலாசத்துடன் விளங்குகிறது. பெரிய தத்துவங்களை ஆராய்கிறது. ஏனென்றால், அங்கு பேசப்படும் பேச்சும், எண்ண ஒலி அலைகளும் உயர்வான விஷயத்தை ஊக்குவிப்பதாய் அமைகிறது. இதன் காரணத்தை யொட்டியே நல்லதை கேட்டு பேசி செய்ய வேண்டும் என்று வேண்டப்படுகிறது. வீட்டில் தொலைககாட்சி பார்க்கலாம். அதே நேரத்தை வேறு விதமாக பயன்படுத்தி நல்லவற்றை பேசி படிப்பது உத்தமம். உபன்யாசம் கேட்பது சிறந்தது. அங்கு சொல்லப்படும் கதை நம் மனதில் சாதகமான அலைகளை எழுப்பவல்லது. தற்கால மனிதனின் குணநிலைக்கேற்ப பாகவதர்களும் கற்பனையை, ஸ்லோகங்களை, சாஹித்தியத்தை, பாடல்களை ஊடே சேர்த்து சுவையாக உபன்யாசம் செய்கின்றனர். நடுநடுவே ஆங்கிலம் கலந்து ஜனரஞ்சகம் ஆக்கப்படுகிறது. கலை இன்னும் அழியப்படாமல் நிறைய இடங்களில் தற்காலத்திற்கேற்ப ஒப்பனையுடன் தொடரப்பட்டுதான் வருகிறாது. ஆனாலும் இன்று நமக்கெல்லாம் இவற்றை கேட்பதற்கு நேரம் ஒழிவதில்லை. ஒதுக்குவதில்லை. சொற்பொழிவின் ஊடே சில நேரங்களில் நம் சந்தேகங்களுக்கோ அல்லது பிரச்சனைகளுக்கோ கூட தீர்வு கிடைக்கலாம்.

இது போன்ற கலைகளை அழியவிடாமல் வளரவிட வேண்டும். என்னைப் பொருத்த வரை கோவில்களில் கூட உபன்யாசங்கள் குறைந்து வருவதாக நினைக்கிறேன். ஆனால் அதை ஈடு செய்யும் வகையில், தொலைக்காட்சியில் காலை / மாலை வேளைகளில் சில சானல்கள் உபயாச சொற்பொழிவுகளை ஒளிபரப்புகின்றனர். ஆன்மீகம் / பஜனை / சமய வழிபாடுகள் இவற்றை மட்டுமே ஒளிபரப்பும் சானல்களும் உண்டு. அவ்வப்பொழுது கண்டு கேட்டு பயன் பெறலாம்.

ஸ்த் சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி

September 17, 2010

கிரஹணம் முதல் கிரகம் வரை (சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2ல் இருந்து)


சூரியனும் சந்திரனும் பூமியும் ஒரே கோட்டில் நின்றால் அது கிரஹணம். நம் ஜாதகத்தில் நவ கிரஹங்களும் சாயா கிரஹங்களான ராகு கேது உட்பட ஒன்பதும் கிரஹ நிலைகள், athan வீர்யம், வீழ்ச்சி, உச்சம், பார்வை என பலவும் கணிக்கப்பட்டிருக்கும்.

அண்டவெளியில் என்னவெல்லாம் நிகழ்கிறதோ அது ஜீவராசிக்குள்ளும் நிகழும் என்று கூறுவதுண்டு. இதன் அடிப்படையிலேயே நம் ஜோசிய ஜாதக கணிப்புகள் அமைந்துள்ளன. எங்கோ எதிலோ அண்டத்தில் நிகழும் நிகழ்வுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்றால், அங்கு பெரிய (macro) அளவில் நிகழும் அனைத்தும் ஒவ்வொறு சிறு ஜீவராசியின் உள்ளும் சிறு அளவில் நிகழ்கிறது என்கின்றனர். "பிண்டத்துள் அண்டம்" என்பதே ஆன்மீக தத்துவமும். வேளியே வெளி ஆராய்ச்சியில் இறங்கி விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பும், தன்னுள் இறங்கி ஆராயும் ஞானமும் எங்கோ எப்படியோ பின்னிப்பிணைவதே இறைத் தத்துவதின் ஆணிவேர்.

அப்படி இருக்கையில், கிரஹண நிகழ்வுகள் நம்முள்ளும் சிறிய அல்லது பெரிய மாற்றத்தை தற்காலிகமாக உண்டுபண்ணலாம். (அல்லது பண்ணாமலும் போகலாம்). கிரஹண நேரங்களில் இறைவனை தியானித்தலே சிறப்பு. மற்றபடி கிரஹண நேரத்தில் பிள்ளை பிறந்தால் அது குற்றம் ஆகாது. கிரஹண நேரத்தில் இன்புற்று இருந்து கர்பம் தரித்தால் அப்படிப்பட்ட சிசுவிற்கு தோஷம் இருப்பதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி கர்மவினை கடுமையாக இருந்தால் ஜோதிடமும் ஜாதகமும் அதை சுட்டிக்காட்ட வல்லவை. எப்பேர்பட்ட பரிகாரமும் அதனை தடுக்க முடியாமற் போகலாம்.

கணித மேதை பாஸ்கராச்சார்யாரின் வாழ்வில் நடந்ததே இதற்கு சான்று. அவரின் பெண் லீலாவதிக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதை அறிந்து, அதனை தடுக்கும் பொருட்டு, பல ஆராய்ச்சிக்கு பின்னர், குறிப்பிட்ட நேரத்தில் திருமணம் நிகழ திட்டமிட்டிருந்தார். அக்கணத்தில் திருமணம் நிகழ்ந்தால் மாங்கல்யம் பலம் பெறும் என்று கணித்து அதன் படி திருமண ஏற்பாடுகள் நடைபெற்று திருமணமும் குறிப்பிட்ட நேரத்தில் முடிந்தது. ஆனாலும் லீலாவதியின் கணவன் இறந்து விடுகிறான். எங்கேயோ தவறு நேர்ந்திவிட்டிருக்கிறது புரிந்தது. கடிகா / கடிகை என்பது அக்காலத்தில் நேரம் கணிக்க உதவிய கருவி. அதன் அருகில் எட்டிப்பார்த்து விளையாடிக் கொண்டிருந்த லீலாவதியின் மூக்குத்தி கடிகையினுள் விழுந்து விட கடிகையின் நேர கணிப்பு குழம்பி, தவறாகி விடுகிறது. மனித முயற்சிக்கு மேற்பட்ட கர்மவினை தான் இறுதியில் வாழ்வை வழிநடத்திச் செல்கிறது!

நம் வினையே நம்மை ஆட்டுவிக்கிறது. நம் வினையை நம் ஜாதகத்திலும், துணைவன் / துணைவியின் ஜாதகமும் மேலும் நமக்கு பிறந்த குழந்தைகளின் ஜாதகமும் சுட்டிக்காட்ட வல்லவை. பிறந்த குழந்தை நம் வினையை சுட்டிக்காட்டுகிறது. அல்லது நம் வினைக்கேற்ப சிசு பிறக்கின்றது. அது பிறந்த வேளையால் நாம் உயர்வதும் தாழ்வதும் இல்லை. அதனால் யாரையும் இராசி இல்லாதவர்கள் என்றோ அல்லது மிகுந்த ராசிக்காரர்கள் என்றோ அபிப்ராயப் படுவது அறிவீனம். அவரவர்களின் உயர்வும் தாழ்வும் அவரவரின் கர்மாவைப் பொருத்தே அமைகிறது. வினைப்பயனை வெல்லக்கூடியது பிரார்த்தனையும் இறைவன் அருளும் மட்டுமே. வினை கடுமையாக இருந்தால், மகத்தான பிரார்த்தனையும், அருளும் வேதனையை மட்டுப்படுத்த செய்யலாமேயன்றி அகற்றுவது மிகவும் கடினம். கடும் வினையின் காரணமாக பிரார்த்தனை செய்யும் மனநிலையும் இயல்பும் கூட இல்லாமல் போகலாம்.

September 15, 2010

(குட்டிக் குட்டி கிறுக்கல்கள் - 5) மௌனத்தின் அலறல்



உதடுகள் உயிறற்று உலர்ந்திருந்தாலும்
உயிரோசையில் ஓய்வற்ற அனத்தல்
பழையது புதியது
பத்து வருடத்து முந்தைய தூசு
சின்ன வயது பல்லாங்குழி
வயது வந்ததும் வந்த ஈர்ப்பு்
முற்றிலும் மெய் மறந்த முதல் காதல்
இதுவும் அதுவும்
இன்னும் சிலவும்
நினைவு கிடங்கில்
கூச்சலிடும் சப்தங்கள்
விரதங்களைக் கீறிவரும் ஓசைகள்
உள்ளொன்று வைத்து புறமொன்று
போர்த்தியிருக்கும் பொய் முகத்துடன்
ஓயாமல் ஒலிப்பதால்
மௌனம்
அர்த்தமற்றது

September 14, 2010

திரையிசைப் பயணங்கள் - 4 (ஆசையே அலை போலே)

படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: திருச்சி லோகநாதன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடல்: கவிஞர் கண்ணதாசன்


பாடலைக் கேட்க சுட்டுக:

http://www.tfmpage.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/aasaialai.rm

ஒவ்வொரு முறை கேட்கும் போதும் சில வரிகளின் ஆழம் புதிய பரிமாணத்துடன் மிளிரும். எல்லா சூழ்நிலைக்கும் சரியான வரிகளாக அமையும். மனித வாழ்வின் துன்பத்திற்கும் இன்பத்திற்கும் மூன்றே மூன்று ஆசைகள்தாம் என ஞானிகள் முதல் சாமான்யர் வரை பலரும் கண்டுள்ளனர். அவற்றை மூன்றே மூன்று தொகுப்பிற்குள் அடக்கி விடலாம். எப்பேர்பட்ட ஆசையாக இருந்தாலும் இம்மூன்றில் அடங்கி விடும்.
மண்/ஆளுமையின் ஆசை
பெண்/ஆண் ஆசை
பொன்/பொருளின் ஆசை

இவைகளுள் அடங்கும். இந்த ஆசைகளே இரண்டு விதமாக செயல்படும் திறமையுடையது. இவையே இன்பத்தையும் தரவல்லது துன்பத்தையும் வரவழைப்பது. இவற்றால் கட்டுண்டு நம் மனமும் எப்படி எல்லாம் ! அலை போல் மேலும் கீழும் நம்மை ஆட்டுவிக்கிறதல்லவா இந்த ஆசைகள்!

ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே


இந்த உண்மையைக் கண்டாலும் கேட்டாலும் உணர்ந்தாலும் கூட பருவம் பொல்லாதது. அங்கு காதல் கொண்ட ஆணின் மனமும் பெண்ணின் மனமும் ஆசையின் பூர்த்தியால் களிக்கிறது. ஆசையை நிறைவேற்றிக் கொண்ட ஓடம் போன்ற மனமும் உச்சத்தில் ஆடி வெல்லமாய், வெள்ளமாய் களிக்கிறது.

பருவம் என்னும் காற்றிலே ..பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்...
சுகம் பெறுவார்...
அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே......... யார் காணுவார்


நேற்றைக்கு சுகம் பெற்று இன்று பாதை மாறினாலும் சுகத்தின் சுவையும் நினைவும் கூட மனிதனை வாழ வைத்து விடுவது. வாழ்கை முதுமையின் போர்வையில் நுழைந்து ஆசுவாசப் படுத்தி, துயில் கொள்ள எத்தனிக்கும் முன், அனைத்து சுகமும், துக்கமும், ஆசையலையின் உச்சமும், போராட்டமும் நினைவில் வந்து போகும். வாழ்கை தீர்ந்ததாக நினைக்கும் சாமான்ய மனிதனும் நேற்றைய "வடிவங்களை" நிகழ்வுகளை எண்ணத்திலேற்றி அதில் இன்பம் கொள்கிறான். அப்படி கொள்ளும் இன்பத்தில் சுகமா? அல்லது இளமைக் காலங்களின் அதிசய உலகம் சுகமா? சில நேரங்களில் நிஜத்தை விட அசை போடும் நினைவு சுகம் தரும் போலும்.

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்...
இளமை மீண்டும் வருமா.... மணம் பெறுமா.....முதுமையே சுகமா...
காலம் போகும் பாதையை இங்கே...........யார் காணுவார்

அலையுச்சத்தில் மகிழ்வது மட்டுமா வாழ்வு? ஓடம் துக்கம் எனும் சூறைக்காற்று மோதினால் துவண்டு பலமிழந்து விடுகிறது. மிகுந்த சிரமத்துடன் படகை மெல் செலுத்த வேண்டியுள்ளது. மனித மனத்தின் சுகமும் துக்கமுமே வாழ்கையை முன்னேற்றுவதும் அல்லது தேங்கச் செய்வதுமான வல்லமை படைத்தது.

வரவு என்று இருந்தால் செலவு இருக்கத்தானே செய்யும். உலகமே இரட்டைத் தன்மையுடையது. நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய வரிகளைக் கவிஞர் பாடியுள்ளார். சுகத்தை வரவு என்று சொல்லவில்லை. சுகம் தான் செலவாம். துக்கம் நமக்கு வரவு. நாம் எக்கடமையை முடிக்க பூமியில் பிறப்பெடுத்துள்ளோம் என்று அறியோம். நாளை நடப்பதும், காலம் வகுத்த கணக்கும் தெரியாது. ஆனால் துக்கம் தரும் பாடமும், படிப்பினையும் நமக்கு வரவு. ஏனெனில் துக்கம் நம்மை செம்மை படுத்தும். சுகம் சேமிப்பில் வைத்த புண்ணிய கணக்கை செலவிடுவதாகிறது. துக்கம் நம்மை மேன்மை படுத்தி செப்பனிடுவதால் 'வரவு' என்று வரவேற்கிறார் கவிஞர். எத்தகைய தெளிவுள்ள மனிதனுக்கு இப்படிப் பட்ட சிந்தனை பிறக்கும்? வெகு சொற்பம்.

சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு...சுகம் செலவு....இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே........யார் காணுவார்


"இருப்பதே கனவு" - ப்ரபஞ்சமே நிலையாமை தத்துவத்தில் மாறிக்கொண்டே இருப்பதால், இன்று இருப்பதும், நாளை இருப்பதும் நிலையில்லை. இந்த வாழ்வை செம்மையாக வாழ்ந்து உயர்நிலை அடைந்தால் இந்த வாழ்வு இங்கு வாழ்ந்ததும், இங்கு கண்ட காட்சியும், நிகழ்வும் கூட ஒரு கனவு தானே?!

இப்பாடலை கவிஞர் ரயில்வே க்ராஸிங் சிக்னலுக்காக காத்திருந்த போது சிகரெட் பாக்கெட்டில் எழுதினாராம். திருச்சி லோகநாதனின் குரலும் கே.வி மஹாதேவன் இசையும் அர்த்தம் நிறைந்த தத்துவமும் மோனத்திற்கே இட்டுச் செல்கிறது.


September 13, 2010

பிரதோஷம் ( சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2ல் இருந்து தொகுக்கப்பட்டது)

பிரதோஷம் என்றால் சந்தியாக்காலம். சூரியம் அஸ்தமிக்கும் நேரம் பிரதோஷ காலம். பாற்கடலை கடைந்து அமுதம் பெற விழைகின்றனர் அசுரர்களும் தேவர்களும். வாசுகி எனும் பாமப்யே கயிறாகக் கொண்டு மந்திர மலையில் மத்தாக்கி பெரும் பாற்கடலைக் கடைகின்றனர். அமுதின் ஊடே நஞ்சும் எழும்ப, வாசுகி என்ற பாம்பு கக்கிய விஷமும் சேர்ந்து கொண்டு எங்கும் கடும் விஷம் கருமையாய் எழும்பி நின்றது. அஞ்சிய தேவர்களும் அசுரர்களுக்கும் ஈஸ்வரன் கருணை உள்ளம் கொண்டு அபயம் அளித்தார். தம் தொண்டர் சுந்தரரை விட்டு விஷம் கொணரச் செய்தார். சிவன் அதனை உட்கொண்ட பின்னர், சற்றே கலங்கிய பார்வதி, சிவனின் தொண்டையில் அழுத்தி விஷத்தை கீழறங்காமல் செய்து விடுகிறாள். திருநீலகண்டன் ஆகிய ஈசனின் கருணை உள்ளத்தை போற்றித் துதித்து சகல ஜீவராசிகளும் வழிபட்ட அந்த நேரம் பிரதோஷ நேரம்.

சகலரையும் காத்து நின்ற ஈசன் மனம் குளிர்ந்து அனைவரின் பயமும் வருத்தமும் போக நந்தி பெரிய ரூபம் எடுத்து நிற்க அதன் கொம்பின் நடுவே ஆனந்த நடனம் புரிகின்றார். இதன் பொருட்டே பிரதோஷ காலத்தில் நந்தியின் கொம்பின் வழியே இறைவனை

தரிசிப்பது சாலச் சிறந்தது. வளர்பிறை / தேய்பிறையின் பதிமூன்றாம் நாள் பிரதோஷமாக பாவிக்கப்படுகிறது. சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் மூன்றரை நாழிகையும் அஸ்தமனம் ஆன பின் மூன்றரை நாழிகையும் பிரதோஷ காலம். இந்நேரத்தில் ஈஸ்வர தியானத்தில் இருப்பது சிறந்தது.

பிரதோஷம் என்பது ஒடுங்கும் நேரம் என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறது. ஜீவராசிகள் தங்கள் கூட்டுக்குள் அமிழ்ந்து அடங்கும் நேரம். பிரதோஷத்தை, நித்திய ப்ரதோஷம், பக்ஷப் ப்ரதோஷம், மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம், பிரளய பிரதோஷம் என்று பலவாக வகைப் படுத்துகின்றனர்.

நித்திய ப்ரதோஷம்: என்பது தினமும் சந்தியா நேரத்தில் சிவனை வணங்கி அவன் தியானத்தில் இருப்பது.

பட்சப் பிரதோஷம்: சுக்லபட்ச(வளர்பிறை) சதுர்த்தி பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.

மாதப் பிரதோஷம்: க்ருஷ்ணபக்ஷ (தேய்பிறை) திரயோதசியில் பிரதோஷம் அனுஷ்திப்பது

மஹா பிரதோஷம்: க்ருஷ்ணபக்ஷ திரயோதசி சனிக்கிழமை அன்று வந்தால் அன்று மஹா பிரதோஷம்

பிரளய பிரதோஷம்: மஹா பிரளய காலத்தில் அண்டசராசங்களும் அழிந்து அனைத்தும் சிவனிடம் ஒடுங்கும் நேரம், பிரளய பிரதோஷம்.

பிரதோஷத்தின்போது அப்பிரதக்ஷிணமாகவும் பின்னர் பிரதஷிணமாகவும் மாறி மாறி மூன்று முறை (பொதுவாகவே சிவனை மூன்று முறை வலம் வருதல் சிறப்பு) வலம் வருவது சோமசூத்திர வலம் வருதல் எனப்படுகிறது. இது பிரதோஷ காலத்திலோ அல்லது எந்த நாளிலும் கூட செய்வது உத்தமம்.

சிந்தையும் நித்தியம் அஸ்தமனத்தின் போது ஈஸ்வரனை தியானித்தல் மிக நல்ல சித்தியும், அமைதியும் கிட்ட வழிவகுக்கும். அண்டங்களை அழித்தலை (இங்கே கூட்டுக்குள் ஒடுக்குதல் என்று கொள்ளவேண்டும்) அல்லவா சிவனின் பிரதான தர்மம். பிரளயத்தில் அனைத்து ஜீவராசிகளையும் தன்னுள் ஏற்று பின்னர் மீண்டும் தோன்றச் செய்கிறார் சர்வேஸ்வரன். அப்படிப்பட்டவனை வணங்கி அவன் கருணை பெறுதல் வீடுபேறு எய்த சுலபமான வழி.

ஆசிரியர்கள் பகுதி - 2 - பழைய பதிவு

நம் ஒவ்வொருவரின் பிறப்பிலும் பல அர்த்தங்கள் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நாமும் மெருகேறி, நம்மை செப்பனிட்டுக் கொள்ள விழைகிறோம். எத்தனையோ பள்ளங்கள், தோல்விகள், விழுந்து எழும் சிராய்ப்புகள். இத்தனையும் மீறி நிமிர்ந்து நின்று, கணப்பொழுதும் கற்கும் பாடத்தால் நம்மை உயர்த்திக் கொள்வதே வாழ்வின் குறிக்கோள்.

இதற்கு ஆசிரியர்களின் பங்கு சொல்லி மாளாதது. நான் கூறுவது பாடதிட்டத்தை சிந்தையில் புகுத்தும் ஆசிரியர்கள் மட்டுமல்ல. பல்வேறு முகமூடிகளின் ஊடே ஒளிந்திருக்கும் பலரின் செயல், சொல், சில நேரம் நாம் பட்டு அனுபவிக்கும் படிப்பினை என எல்லாமே ஆசிரியர்கள் தான்.

காலம், நேரம், அனுபவம் இவை தான் முன்னோடி ஆசிரியர்கள். இவை கற்றுக்கொடுக்காதது கொஞ்சமே. அவ்வப்பொழுது பல ஆசிரியர்கள் பாடங்களை இன்னும் மெருகூட்டுகிறார்கள்.

குழந்தை பிராயம் முதல் எத்தனை பாடங்கள்! கீழே விழுந்தால் அடி. முதல் பாடம். தீ சுடும் அடுத்த பாடம். பாடங்கள் என்றும் கசக்கும். சிறு குழந்தை முதல், பெரியவர் வரை பாடங்களை என்றும் கசப்புடனேயே அசை போடுவர். ஆனால் அவற்றால் நாம் பெற்ற பயன் மட்டும் மிகவும் தேவையான படிப்பினை. அதனை அளித்த அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் என்ற போர்வையில் விளங்கும் அனைவருக்கும் நாம் கடமைப் பட்டுள்ளோம்.

முதல் ஆசிரியர் அம்மா தான். நானென்று இல்லை அனைவரும் கூறும் மறுக்க முடியாத உண்மை. உலகை அறிமுகப்படுத்துபவள். அப்பாவை உற்றாரை, உறவினரை, நல்லதை, கெட்டதை, அறிமுகப்படுத்தி நம்மை உலகை எதிர்கொள்ளத் தயாராக்குபவள். அவள் சொல்லிக்கொடுக்காததை படிப்பினையாய்ப் பிறரிடம் புரிந்து கொள்ளும் பொழுது சில நேரம் வலிக்கும்.

காலமும், சூழ்நிலையும், நிறையவே சிந்திக்க வைக்கும் பல படிப்பினைகள் தந்ததைப் பற்றி நான் யோசிக்கும் முன், எனக்கு நினைவிற்கு வருபவர்கள் சில பள்ளி ஆசிரியர்களும்.

எனக்கு நினைவாற்றல் நிரம்பக் கம்மி. எனினும் என்னுடைய ஒவ்வொரு ஆசிரியை, தோழி, தோழர்கள் என பலரின் பெயரும் முகமும் இன்னும் நினைவில் நின்றாடும் ஒன்று.

எல்.கே.ஜி.யில், 'கீதா' மிஸ் நினைவுகோரும் பொழுது வேறெதுவும் நெகிழ்ச்சியாகவோ, இகழ்ச்சியாகவோ தோன்ற வாய்ப்பே இல்லை. ஏனெனில் இவர் எங்களுக்கு பாடம் புகட்டிய நினைவு இல்லவே இல்லை. ஸ்கேல் ஒன்று வைத்திருப்பார். பெஞ்செல்லாம் இருக்காது. தரையில் அமர்ந்திருப்போம். என்ன செய்வோம் என்றும் நினைவில்லை. ஏ,பி.சி சொல்லிக் கொடுத்திருக்கலாம் (சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும்). சற்று நேரத்திற்கெல்லாம் எல்லோரும் கட்டாயமாகப் படுத்து விட வேண்டும். ஸ்கேல் வைத்துக் கொண்டு வலம் வருவார். யார் கண்ணை மூடவில்லை என்று மிரட்டிக் கொண்டே வருவார். ஆனால் இவரிடம் யாருக்கும் பயமே இல்லை. சாந்தமான முகம். கோபம் வரவே வராது என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்யலாம். அதனால் அரைக் கண் மூடி, தூங்குவது போல் நான் நடித்தது நன்றாய் நினைவிருக்கிறது. ஒல்லியாய் குச்சியாய் வெள்ளையாய் தேகம். ஒல்லியாய் குச்சியாய் நீளமாய் முடி. பின்னலிட்டிருப்பார். மாமியாருக்கு வேண்டியதை செய்து விட்டு, பொழுது போகாத நேரத்தில் (ஊதியத்திற்காகவும்) எங்களுடன் மாரடித்தார் என்று இப்பொழுதும் தோன்றுகிறது. அப்பட்டமான நடுத்தர வர்க்க முகம். எல்.கே.ஜியெல்லாம் தாண்டிய பின், ஐந்தாம் வகுப்பு வரை இவரை பலமுறை பார்த்திருந்தாலும் ஒரு முறை கூட, மாணவ மாணவிகளைப் பார்த்து புன்னகைத்ததே இல்லை. இவரை பற்றி ஏன் எழுதுகிறேன் என்பதற்கு ஒரே காரணம் தான். என் பள்ளி வாழ்க்கையின் *முதல் ஆசிரியை* என்பதால் மட்டுமே.

அடுத்து சியாமளா மிஸ். கருப்பாய் குள்ளமாய் இருப்பார். இவருக்கு பாபு என்று ஒரு மகன் உண்டு. அவனும் என்னுடன் யூ.கே.ஜி படித்தான். என் பக்கத்தில் உட்காருவான். பென்சில் ஸ்லேட் என எல்லாவற்றையும் பிடிங்கிக் கொண்டுவிட்டு அழவிடுவான். குறும்பு கொப்பளிக்கும் அவன் முகத்தில், நான் அழும் பொழுது அப்படி ஒரு திருப்தி தெரியும்! அடிக்கடி சியாமளா மிஸ்ஸிடம் போய் கோள் மூட்டிவிடுவேன்; 'பாபு இப்படி செய்யறான் மிஸ்!' என்று. அவரும் அவனைக் கண்டிப்பார். ஒரே ஒரு முறை, ஏனென்று நினைவில்லை, எதோ தவறு செய்து விட்டதால் இருக்கலாம். என்னை கூப்பிட்டு ஸ்கேலால் 'படீர்' என்று ஒரு அடி உள்ளங்கையில் கொடுத்தார். பள்ளி ஆசிரியர்களிடம் நான் வாங்கிய இரண்டு அடிகளில் முதல் அடி, இவர் கொடுத்தது தான். ரொம்ப அவமானமாய் இருந்தது. அன்று முழுக்க குனிந்த தலை நிமிராமல் வகுப்பில் இருந்தது நினைவில் இருக்கிறது.

பாவாடை தாவணியில், பதினெட்டு வயது மிஸ் ஒருவர் எங்களுக்கு பாடம் எடுப்பார். அப்பொழுது நாங்கள் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். எனக்கு அரவிந்த், சத்ய மூர்த்தி என்று சில நண்பர்கள் இருந்தனர். இவர்களுடன் கடைசி பெஞ்சில் அமர்ந்திருப்பேன். டீச்சரை கிண்டல் அடிப்பது, கமுக்கமாய் சிரிப்பது என்று நல்ல காரியங்களில் அவ்வயதில் ஈடுபட்டிருந்தேன். இந்த அழகான பதினெட்டு வயது டீச்சரின் பெயர் ப்ரேமா. முகத்தில் பரு இருக்கும். சற்றே பூசினாற் போன்ற தேகம். எல்லா மிஸும் சுமாராய், வயதானவராய் (comparitively) இருக்கும் நேரத்தில் இவர் மட்டும் சின்னப் பெண்ணாய் பளிச்சென்று இருப்பார். நீள அடர்த்தி முடி. இவரை கிண்டல் செய்வது எங்களின் பொழுது போக்கு. ஏதேனும் துர்நாற்றம் வருவது போல் அர்விந்த் மூக்கை மூடிக் கொள்வான். உடனே இன்னொருவன் "ப்ரேமா மிஸ் குளிக்காம வந்துட்டாங்களா" என்பான். நான் கிக்கிபிக்கி என்று இளிப்பேன். இப்படி அவர் எங்களைக் கடக்கும் பொழுதும் வேண்டுமென்றே நிறைய பேசுவோம். அதெல்லாம் அவரின் காதில் விழாதா, அல்லது விழுந்தாலும் கண்டு கொள்ளாமல் இருந்தாரா என்பது இன்று வரை மர்மம்.

சாவை பற்றியும், சோகத்தை பற்றியும் நிறைய தெரியாது தான். முதன் முறை அன்று தான் கேட்டோம்.

"சில்ரென், இன்னிக்கு உங்களுக்கு லீவ். ப்ரேமா மிஸ்க்காக எல்லாரும் எழுந்து நிக்கறீங்களா?"

"ஏண்டா சத்யமூர்த்தி என்னாச்சு?"

"ப்ரேமா மிஸ் செத்து போய்ட்டாங்களாம்!"

"அப்டீன்னா"

"தெரில. ஆனா இனிமே வரமாட்டாங்க."


வீட்டிற்கு சென்று நிறையவே அழுதேன். ப்ரேமா மிஸ் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுவிட்டிருந்தார்கள். (காதல் தோல்வியாய் இருக்கலாம்.... இல்லை பரிட்சையில் பெயில் ஆனார்களோ என்னவோ) வீட்டிற்கு வந்து அம்மாவிடம் சொன்னேன். "ரொம்ப கிண்டல் பண்ணினோம் மிஸ்ஸை.. இனி வரவே மாட்டாளா" என்று.

ஒரு வாரம் எல்லோருமே சுரத்தில்லாமல் இருந்தோம். அதன் பிறகு மீண்டும் சாவு என்ற வார்த்தை மறந்து போனது. அதைப்பற்றி அதிகம் யோசிக்கவும் இல்லை. ஒரு மாதத்திற்குப் பிறகு அர்விந்த் "இங்க தான் ப்ரேமா மிஸ் தூக்கு போட்டுட்டாங்க" என்று எங்களை பயமுறுத்த, ரொம்ப டென்ஷனோடு இரண்டாம் வகுப்பு உத்திரத்தைப் பார்த்து, அந்த பயத்திலேயே ப்ரேமா மிஸ்ஸின் சோகத்தை மறந்து போனோம்.

(இன்னும் வரும்)

September 08, 2010

கூடு விட்டு கூடு பாய்தல் ( சோவின் எங்கே பிராமணன் - பகுதி 2ல் இருந்து கோர்கப்பட்டது)

உடல் அநித்தியம், ஆன்மா நித்தியம், உடலானது உயிர் தங்கும் கூடு. 'கூடுவிட்டு கூடு பாய்தல்' பெரிய சித்தர்களால் ஞானிகளால் செய்யக்கூடிய சித்திகளுள் ஒன்று. இன்னொருவரின் உடல் தாங்கி நின்ற போதும், ஆன்மா வேறுபடுவதால் (நிற்க: ஆன்மா வேறுபடாது என்றாலும், தனிப்பட்ட கர்ம பதிவுகளைத் தாங்கிய ஜீவ-ஆத்மா என்று கொள்ளலாம்) நடை உடை பாவனை குணம் முதலியவை வேறுபடுவதால் தங்கியிருப்பது வேறு ஒரு ஆன்மா என்று கண்டுகொள்ளலாம்.

"கூடுவிட்டு கூடு பாய்தல்" முக்கியமாக சித்தர்கள் வரலாற்றில் சர்வசாதாரணமாய் சுட்டிக்காட்டப்படும். ஆதிஷங்கரர் இதே முறையை கையாண்டு, விடையுணர்ந்து நிபந்தனையில் வென்ற சரித்திரம் அனைவரும் அறிந்ததே. பாம்பாட்டி சித்தரும் கூடுவிட்டு கூடு பாய்ந்து சில ஞான உபதேசங்களை உபதேசித்தார். சித்தர்கள் இச்சித்தியை உயர்ந்த நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தினர் என்பது நினவில் கொள்ளத்தக்கது.

பெயருக்கேற்றார் போல் பாம்பாட்டி சித்தர், பாம்பை பிடிப்பது, படமெடுத்து ஆடச் செய்வது, அவைகளில் விஷத்தை சேமித்து விற்பது இதையே தொழிலாகக் கொண்டிருந்தார். பாம்புடன் பழகுவதால் அவருக்கு விஷமுறிவு மூலிகைகளெல்லாம் அத்துபடி. அவ்வூரில் பாம்பு கடிக்கு சிறந்த வைத்தியராகவும் திகழ்ந்தார். பாம்புகளைப் பற்றிய ஆராய்ச்சியிலும் இறங்கினார். மருதமலைப் பகுதியில் விஷவைத்திய ஆய்வுக் கூடம் ஒன்றும் துவங்கினார்.

ஒரு சமயம் நவரத்தின பாம்பு ஒன்று மருதமலைப் பகுதியில் வசிப்பதாகவும், அதன் நஞ்சு மிகப்பெரிய சித்து வித்தைகளைச் செய்யும் திறன் கொண்டது என்றதால் அதனை பிடிது விட உறுதிபூண்டு மருதமலைக் காட்டிற்கு சென்றார். இவர் தேடும் பணியில் மும்முரமாக இருக்கும் தருவாயில், பலத்த சிரிப்பொலியுடன் பிரகாச உருவம் தாங்கி சட்டை-முனி சித்தர் பாம்பாட்டி சித்தர் முன் தோன்றினார்.

இவர் பாம்பை தேடுவதைப் பார்த்து சிரித்தபடி, "நவரத்தின பாம்பை நீயே உனக்குள் வைத்துக்கொண்டு வெளியே தேடுகிறாயே இது பயனற்ற செயல்தானே" என்றார்.

"மிகுந்த உல்லாசத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு பாம்பு உன் உடலுக்குள் குடியிருக்கிறது (பாம்பாக உருவகப்படுத்துவது உறங்கிக்கொண்டிருக்கும் குண்டலினி ஷக்தியை) , உன் உடலில் மட்டுமன்றி எல்லோர் உடலிலும் குடியிருக்கிறது, உன் உடம்புக்குள் இருக்கும் அப்பாம்பை ஆட்டுவிப்பவன் தான் அறிவாளி. அதனை அடக்கி ஆளக்கூடியவர்கள் தான் சிறப்பு மிக்க சித்தர்கள் எனவே வெளியில் இருக்கும் அந்தப்பாம்பை விட்டு விட்டு, உன்னுள் இருக்கும் இந்தப்பாம்பை அடக்க வழி தேடு" என்று அருள் கூர்ந்தார். மேலும், 'இறைவனை உணர்ந்து பாடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும், குண்டலினி விழித்து எழும், தியானம் சித்திக்கும்ம். மனிதனுள் இறைவனைக் காணும் ரகசியம் இதுவே' என்கிறார்.

பாம்பாட்டி சித்தர் பக்குவம் அடைந்து இனி இப்பாதையை விட்டு விலகாத யோகம் பயில்வேன் என்று உறுதிபூண்கிறார்.

"அப்பொழுதும் நீ பாம்புகளை பிடித்துக்கொண்டிருந்தாய், இப்பொழுதும் சூட்சுமமான பாம்புகளை பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளாய் எனவே நீ இப்பொழுதும் பாம்பாட்டி தான்" என்று அருளி மறைந்தார் சட்டை முனி சித்தர்

ஒரு ஊரில் இறந்து போன மன்னனைச் சுற்றி மனைவி சுற்றத்தார் அழுது புலம்பிக்கொண்டிருந்தனர். கொடுங்கோலாட்சி புரிந்த தீய நடத்தை கொண்டிருந்தவன் மன்னன். அப்படியும் மக்கள் அவன் மேல் வைத்த பாசம் ஆச்சரியம் தந்தது. அவனை நல்லவனாக்கி நடமாடவிட்டு, நல்ல உபதேசம் செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து, தன் உடலை பத்திரப்படுத்திவிட்டு, இறந்து போன பாம்பு ஒன்றை அரசன் உடலில் விசிறியடிக்கிறார். மக்கள் எல்லோரும் பீதியுடன் விலக அரசி மட்டும் உடலை விட்டு நகராது நிற்கிறார். அதன் பின் அரசன் உடலில் சித்தர் புகுந்து கொண்டார்.

பாம்பு தான் அரசனை கொன்றுவிட்டது என்று அதனை அடிக்க மக்கள் புறப்படுகின்றனர். அரசன் உடல் தாங்கி எழுத சித்தர் "செத்த பாம்பை ஏன் அடிக்கிறீர்கள்? என்று அதனை தடவி கொடுத்து " பாம்பே நான் எழுந்து விட்டேன், நீயும் எழுந்திரு" என்றார்.

ஆடு பாம்பே என்று பாம்பை ஆட்டுவித்து தத்துவங்கள் நிரம்ப பாடல் பாடுகிறார். அரசிக்கு வந்திருப்பது வேறு ஒரு நபர் என்ற
சந்தேகம் உதித்தது.

நாடுநகர் வீடு மாடு நற்பொருள் எல்லாம்
நடுவன் வரும்போது நாடிவருமோ
கூடுபோன பின்பு அவற்றால் கொள்பயன் என்னே?
கூத்தன் பதங்குறித்தி நின்று ஆடு பாம்பே


முக்கனியும் சக்கரையும் மோதகங்களும்
முதிர்சுவை பண்டங்களும் முந்தி உண்ட வாய்
மிக்க உயிர் போன பின்பு மண்ணை விழுங்க
மெய்யாக கண்டோமென்று ஆடு பாம்பே

(பாடல் எளிமையாய் இருக்கிறது. self explanatory ) செல்வமும், புகழும், படை பலமும், இறப்பும் காலனும் தேடி வரும் போதும் கூட வருமோ? கூடு விட்டே ஆவி பொனால் அவற்றின் பயன் தான் என்ன என்று ஆடு பாம்பே (கூத்தன் பதம்: ? இங்கு சிவனை அவனின் புகழைக் குறிக்கிறதா அல்லது சிற்றறிவு கொண்டு கூத்தாடும் மாநதரைக் குறிக்கிறதா எனத் தெரியவில்லை...any takers? )

முக்கனி சக்கரை பத்து வகை பட்சணங்கள் உண்ட வாய், இப்போது மண்ணைக் கவ்வும் நிலை குறித்து, உடலின் நிலையற்ற தன்மை நினைந்து எழுதாடு பாம்பே என்பது குத்துமதிப்பான விளக்கம்.

ஆதி சங்கரர் அருளிய பஜகோவிந்த வரிகள் நினைவிற்கு வருவதை தவிர்க முடியவில்லை.

மா குரு தன ஜன யௌவன கர்வம் ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம்
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா

ஞான உபதேசங்கள் தொடர்ந்து பாடிய வண்ணமிருக்கிறார். அதன் பின் சந்தேகம் உதித்த அரசிக்கும் தான் யார் என்று கூறி நல்லுபதேசம் செய்து மீண்டும் தன் உடல் கொண்டார். பல அறிவுரைகளும் தத்துவ உபதேசங்களும் செய்த வண்ணம் தன் வாழ்நாள் தொடர்ந்தார். தேடிப்போய் உபதேசித்தும் இந்த அறிவிலி மக்கள் திருந்துவதில்லையே என்று வருந்திய் சித்தர், யார் கண்ணிலும் படாமல் மறைந்தார்.

திருமூலர் என்ற சித்தரும் கூடுவிட்டு கூடுபாய்ந்ததாக சொல்லப்படுகிறது. திருமூலர் கைலாய பரம்பரையை சேர்ந்தவர். சித்தர்களில் முதன்மையானவராக கருதப்படுகிறார்.

அந்தணர்கள் வாழும் சாத்தனூரில் தொன்று தொட்டு ஆனிரை மேய்க்கும் குடியிற் பிறந்த ஆயனனாகிய மூலன் பசுக்கள் மேய்த்து வந்தான். அவன் வாழ்நாள் முடிந்த வினையால் உயிர் நீங்கி நிலத்தில் வீழ்ந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றி கதறி வருந்தின. இதனைக் கண்ட திருமூலர் பசுக்களுக்காக மனம் நெகிழ்ந்து அவன் உடல் கொண்டார். பசுக்களை மேய்த்து தத்தம் இடத்தில் அனுப்பிய பின், தனித்து நின்று கொண்டிருந்த திருமூலரை மூலன் மனைவி கண்ணுற்றாள். விரும்பி வீடு அழைக்கும் அவளுக்கு தான் மூலன் அல்ல என்றும் அவன் விதி முடிந்து இறந்து விட்டான் என்ற உண்மை திருமூலர் கூறியும் உரைத்தபாடில்லை. தன் கணவனுக்கு புத்தி தடுமாறியதென்று ஊரைக் கூவி அழைத்து, அவனை தன்னுடன் இருக்குமாறு அறிவுரை வழங்கச் செய்கிறாள். தன்னுடலைத் தேடி அதனுள் புகுந்து உண்மையை உணர்த்தி இவ்வுடலை செய்யலற்றதாக்கி தன்னை யார் என்று நிரூபித்தார். உண்மை உணர்ந்த சான்றோர் மூலன் மனைவியைத் தேற்றி அவளை வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர்.

அதன் பின் அவருக்கு எங்கு தேடியும் தன் பழைய உடல் தென்படவில்லை. மூலன் உடலிலேயே நிரந்தரமாகத் தங்கி விட நேரிடுகிறது. உலகத்தோர் உய்யும் பொருட்டு க்ரியை, ஞானம், சரியை, யோகம் என்று நால்வகை நன்னெறிகளும் விளங்கும் திருமந்திரம் என்னும் நூல் வழியாக ஓர் ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்கள் வழங்கியுள்ளார். பின்னர் இந்நூல் நிறைவுற்றதும் மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இறைவன் திருவடி அடைந்தார்.


ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நென்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே

- திருமந்திரம்.

உயிர்கள் அனைத்தும் ஒன்றே குலம் ஒருவனே இறைவன், என்று நினைப்பவருக்கு மரணமில்லை i.e. அவர்கள் இறவாத்தன்மை அடைந்து விடுகின்றனர். இந்த எண்ணத்தில் நீர் நிலைபெற்று நின்றால் அதுவே முக்திக்கு வழி. வேறில்லை என்பது தோராயமான பொருள்.


(நன்றி: சி.எஸ் முருகேசன் அவர்கள் எழுதிய பதினெண் சித்தர் வரலாறு )

(தொடரும்)